சங்கரன்கோவில்
ஓம் நமசிவாய
இன்றைய பதிவில் புகழ் வாய்ந்த ஸ்ரீ
சங்கரன் கோய்ல் பற்றிப் பார்ப்போம்
சிவதாஸன் ஜகன்நாதன்
சங்கரனாகிய பரமேஸ்வரரும், நாராயணராகிய
மஹாவிஷ்ணுவும் ஓர் உருவாக இணைந்து ஹரனும் ஹரியும் வேறல்ல இருவரும் ஒருவரே என்ற தத்துவத்தையும்,
உண்மையையும் விளக்குவதே சங்கரநாராயண ஸ்வரூபமாகும்…
சங்கரன்கோவில் ஸ்தல
வரலாறு:-
மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் புலையனாகிப் புன்னைவனக்
காவலனாக இருந்தான். .
கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே
ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல்.தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று
வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது.
அப்போது அவன் புற்றில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான்.
அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி
தெரிவிக்க ஓடினான்.
காவலன் புற்றை வெட்டிச்
சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே
விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான்
காவலன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான்.
உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய
பாம்பினையும் கண்டார். சங்கரனார்
அசரீரியாக ஆணைதர, காட்டை
அழித்து, நாடாக்கி
உக்கிரபாண்டிய மன்னர் 947 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலை கட்டிச் சங்கரநயினார் கோவில்
ஊரையும் தோற்றுவித்தார்.
சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி
இருபத்தைந்து அடி உயரமுள்ள ஒரு பெரிய ராஜ கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் ஒன்பது
நிலை கொண்ட கோபுரமாகும். கோபுரம் தென்வடக்காக 56 அடி நீளம், கீழமேல்
அகலம் 15 அடி
கொண்டது. உச்சியில் உள்ள குடம் 7 அடி நான்கு அங்குலம் உயரமாகும்.
காவலனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிறது.
, காவலன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய
பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவலனுக்குச் சிறப்பு
வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும்.
பொதுவாக ஸ்ரீசக்ர பிதிஷ்டை அம்பாள் காலடிகளில் தான்
இருக்கும்.
ஆனால் இங்கு கோமதி அம்மன் சன்னிதி முன் பெரிதாக சக்கரம் உள்ளது. பேய் பிசாசு
மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் மனமாச்சர்யங்கள், பேதங்கள், மன
நோய்கள் எல்லாம் நீங்கிட அதில் உட்கார்ந்து தியானித்துக் கொள்ளலாம். கோவிலின்
உள்ளே அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள பாம்பு புற்று
வன்மீகம் என்று அழைக்கப்படுகிறது. இப்புற்றில் இருந்து எடுக்கப்படும் மணலை உடலில்
தடவிக் கொண்டால் நோய்கள் நீங்கும். மருத்துவ குணமுடைய இந்த புற்றுமண் வேறு எங்கும்
கிடைக்காத ஒன்றாகும்.
சங்கரன்கோவில் ஸ்தல
வரலாறு
சங்கன்,
பத்மன் என்ற இரண்டு நாக அரசர்கள் இருந்தனர். நண்பர்களாக இருந்தாலும் எப்போதும்
சர்ச்சைதான். சிவனா? விஷ்ணுவா? இருவரில் யார் பெரியவர்? என்பதுதான் அவர்களின்
சர்ச்சைக்கு மூல காரணம். சங்கனோ சைவன், பத்மனோ வைணவன். இருவருமோ தங்களின் கருத்தை நிலை நிறுத்த
வேண்டி அன்னை பார்வதியை சரணடைந்தனர்.
பார்வதியும் புன்னை வனத்தில் சிவனை நோக்கி தவமியற்றினார்.
தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஆடிப்
பவுர்ணமியில் புன்னை வனத்தில் சங்கர நாராயணராக உமாதேவி, சங்கன், பத்மன்
உள்ளிட்ட சகலருக்கும் காட்சி கொடுத்தார்.
ஒரு புறம் சிவப்பு. மறுபுறம் சியாமளம். ஒரு புறம்
கங்கை-சந்திரன் சடைமுடி, மறுபுறம் வஜ்ர-மாணிக்க மகுடம். ஒரு புறம் மழு, மறுபுறம்
சங்கு. ஒரு புறம் புலித்தோல், மறுபுறம் பீதாம்பரம். ஒரு புறம் ருத்திராட்சம், மறுபுறம்
துளசி மாலை. ஒரு புறம் வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான். மறுபுறம் சைவச் சங்கன்
பெருமாளுக்குக் குடை பிடித்து நிற்கிறான். இப்படி அரிஹரனாய் காட்சி தந்த இறைவனை
கண்டு உருகி நின்ற உமாதேவியாரிடம், ‘வேண்டிய வரங்களைக் கேள்’ என சிவ பெரு மான் கூறினார்.
அம்மனின் வேண்டுகோளின்படி, ஈசனும் சிவலிங்க வடிவமாக புன்னைவனத்தில் உமாதேவியாருடன்
எழுந்தருளி,
அங்கேயே தேவியருடன் தங்கினார்.
விஷஜந்துக்கள் பயம் நீங்கும்.
கோமதியை தரிசிக்க ஒரு சம்பிரதாயம் உள்ளது.
♥ கோமதியை தரிசிக்க வருவோர் முதலில் மதுரையில் மீனாட்சியை
தரிசிக்க வேண்டும். மீனாட்சியை தரிசித்து அனுமதி பெற்று பின் கோமதியை தரிசிக்க
வேண்டும். கோமதியை தரிசித்து அவள் அனுக்கிரகத்தை பெற்று பின் மீண்டும் மீனாட்சியை
தரிசித்து நன்றி கூறிவிட்டு தம் இல்லத்துக்கு திரும்ப வேண்டும்.
பாமர மக்கள் கோமதி அக்கா மீனாட்சி தங்கை; அதனால்
தங்கையை பார்த்துட்டு அக்காவ பாக்கனும்ன்னு சொல்வது பழக்கம்.
சங்கரன்கோவில் கோமதி அம்மனை தரிசிக்கும் முறை
♥♥ சங்கர
நாராயணராக காட்சி தந்து கோவில் கொண்டு அரியும் சிவனும் ஒன்றுதான் என்று உலகிற்கு
உணர்த்திய தலம் சங்கரன்கோவில். சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கர
லிங்கமாகவும்,
இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம்
சிவனாகவும் இடப்பக்கம்
நாராயணனாகவும், மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக
வீற்றுள்ளார்.
♥♥ சங்கரன்கோவிலில்
காலை பூஜையின் போது துளசி தீர்த்தம் கொடுக்கிறார்கள். மற்ற நேரங்களில் விபூதி
வழங்கப்படுகிறது. பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய
துளசி மாலையை அணிவிக்கிறார்கள். புத்திரதோஷம் உள்ளவர்கள் மா விளக்கில் நெய் தீபம்
ஏற்றி வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கிறது. ராகு கேது தோஷம் நீங்கும் சிவன் சன்னதி
எதிரில் உள்ள பஞ்சநாக சிலைகள் மீது பால் அபிஷேகம் செய்தால் நாகதோஷம் விலகும்.
இத்தலத்தில் சர்ப்ப விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை (4.30 முதல் 6.00) ராகு
காலத்தில் பால் அபிஷேகம் செய்தால் ராகு,கேது தோஷம் நீங்கும்.
சங்கரன்கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:-
காலை 6
மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4
மணி முதல் 8 மணி வரை
வாய்ப்புக் கிடைக்கும்போது இந்த உன்னதமான் ஸ்தலம் சென்று சங்கரநாராயணரையும்,கோமதி
அம்மாளையும் தரிசித்து பேருள் பெற்றுய்வோமாக.
ஓம் நமசிவாய
தொகுப்பு :- சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment