பிடித்தப் பத்து
திருவாசகத்தின் பிடித்தப் பத்துவிலிருந்து இந்த
பாடலை இன்று பதிவு செய்கிறேன்
சிவதாஸன்
ஜகன்நாதன்
பாச வேர்
அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமாறு அடியனேற்கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுள்
புகுந்து
பூங்கழல் காட்டியப் பொருளே!
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர்
மூர்த்தி!
செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப்
பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே!
பொருள்:-
பாசவேர் அறுக்கும் - பற்றுகளின் வேரைக் களைகின்ற, பழம்பொருள் தன்னை - பழமையான பொருளை, பற்றும் ஆறு - பற்றிக்கொள்கின்ற வழியை, அடியனேற்கு அருளி - அடியேனாகிய எனக்கு அருள் புரிந்து, பூசனை உகந்து - எனது வழிபாட்டினை விரும்பி, என் சிந்தையுள் புகுந்து - என் சித்தத்துள் புகுந்து, பூங்கழல் காட்டிய பொருளே - தாமரை மலர் போன்ற திருவடியைக் காட்டிய மெய்ப்பொருளே, தேசு உடை விளக்கே - ஒளியையுடைய விளக்கே, செழுஞ்சுடர் மூர்த்தி - விளக்கினுள் தோன்றும் வளமையான சுடர் போலும் வடிவினனே, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, ஈசனே - இறைவனே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன்; இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் சென்றனக்கு அருள்வீர்
பந்த பாசங்கள் இல்லாதவர் யாருமே இல்லை. வேண்டுதல்
வேண்டாமை இலாதான் என்றாலும் அவனும் அடியார்களிடம் அன்பு கொண்டவன் தான்; சரியாகப் புரிந்து கொள்ளாவிடில் அந்த அன்பும்
பாசம் போல் தோன்றும். அன்பிற்கும் பாசத்திற்கும் வேறுபாடு என்ன? அன்பு நல்லதையே நாடும். நமக்குக் கேடென்றாலும்
ஒருவர் மேல் வைத்த அன்பு அவருக்கு நல்லதையே நாடும்; சொல்லும்; செய்யும். அவருக்கு விருப்பமில்லாதது என்றாலும்
அவர் மேல் வைத்த அன்பு அவருக்கு நல்லதையே நாடும் - தாய் கொடுக்கும் கசப்பு
மருந்தினைப் போல்.
பாசம் நல்லதோ கெட்டதோ பார்க்காது; கண்ணை மறைக்கும்; மருத்துவர்
மருந்தூசியை போடும் போது குழந்தை அழுவதைப் பார்க்க முடியாமல் தலை திருப்பும் அன்னை
தந்தையரைப் போல். மற்றவர் மேல் வைத்த அந்தப் பாசம் நம்மையும் பல நேரங்களில் தவறான
பாதையில் திருப்பிவிட்டுவிடும் –
அன்பை எல்லா உயிர்களிடத்தும் காட்ட வேண்டும்
என்பார்கள் சான்றோர். ஆனால் அவர்களே பாசம் அறுக்க வேண்டும் என்பார்கள். பாசம் என்ற
இதே சொல் மற்ற பொருள்களிலும் வழங்கப்படுகிறது - பாசியையும் பாசம் என்பார்கள் -
இரண்டுமே வழுக்கிவிடும்; கயிற்றையும் பாசம் என்பார்கள் -
இரண்டுமே ஒருவரைக் கட்டும். அப்படிப்பட்ட பாசத்தை வேருடன் அறுக்க வேண்டும்.
அது நம் சுய முயற்சியால் முடியுமா என்றால்
அறிந்தவர் தெரிந்தவர் எல்லோரும் சொல்லும் விடை இல்லை என்பதே. அவன் அருளாலே தான்
அது முடியும் என்கிறார்கள் அவர்கள். அதனைத் தான் அடிகளும் இங்கே பாச வேர்
அறுக்கும் பழம்பொருள் தன்னை என்கிறார். அறுக்கும் என்று நிகழ்காலத்தில் கூறியது
அவர் அதனை மூன்று காலங்களிலும் செய்பவர் என்ற பொருளில்.
முக்காலங்களிலும் எக்காலங்களிலும் செய்பவர்
பழம்பொருளாகத் தானே இருக்க வேண்டும். பழமைக்கும் பழமையானவன்; புதுமைக்கும் புதுமையானவர். அந்தப் பழம்பொருளைப்
பற்றினால் பாச வேர் அறுபடும். அந்தப் பழம்பொருளைப் பற்றுவதும் எளிதோ? அது நம் முயற்சியால் மட்டுமே கூடுமோ? இல்லை. அதற்கும் அவன் அருள் வேண்டும். அடிமையான
எனக்கு அருள் செய்து என்கிறார் இங்கே. அடியவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும்
ஆயிரம் பொருள்.
நாம் எத்தனையோ விதமாகப் பூசிக்கலாம் அவனை. அவன்
அருளும் நம் அடக்கமும் இன்றி என்ன தான் பூசித்தாலும் அவன் அதனை ஏற்றுக்
கொள்ளவேண்டுமே? நாம் அவனுடைய அடியவர்கள் என்று
ஆயிரம் முறை கூறினாலும் என்ன அவன் நம்மை தன் அடியவர் என்று ஏற்றுக்கொள்ளாதவரை? அவன் ஏற்றுக் கொண்டால் அல்லவோ அதில் பொருள் உண்டு?
பழம்பொருளான தன்னைப் பற்றுமாறு அடியவனான எனக்கு
அருளி நான் செய்த சிறு பூசைகளையும் பெருமையாக எண்ணி உவப்புடன், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான் என்கிறார்.
செய்த சிறு பூசையையும் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன்
என் சிந்தையுள் புகுந்து நின்றான். ஒளி புகுந்தவுடன் இருள் அகன்று காணாமல் போவது
போல் சிந்தையுள் அவன் புகுந்தவுடன் மற்ற எண்ணங்கள் எல்லாம் காணாமல் போனது. ஒளி
எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைவது போல் அவன் சிந்தை புகுந்து சிந்தை முழுவதும்
நீக்கமற நிறைந்தான்.
கருணையுடன் இவ்வளவும் செய்தவன் அந்தக் கருணைக்கு
அடையாளமாக தன் திருவடித் தாமரைகளையும் நான் பற்றுமாறு அருளினான்.
ஒளியுடைய விளக்கே என்கிறார். வேறு பொருள்கள் எல்லாம்
இருப்பதைக் காட்ட ஒரு விளக்கு வேண்டும். ஆனால் விளக்கு இருப்பதைக்காட்ட அந்த
விளக்கே போதுமன்றோ? அப்படிப்பட்டவன் இறைவன்.
செழுஞ்சுடர் மூர்த்தி - சரி. அவன் இருப்பைக் காட்ட
அவனே போதும்; அவன் திருவுருவம் எப்படிப்பட்டது
என்றால் விளக்கின் திருவுருவம் எப்படி இருக்கும்? சுடர்
வடிவாக இருக்கும் தானே?! இறைவன்
திருவுருவும் அப்படியே செழுமையான் சுடர் வடிவாக இருக்கிறது.
அடியார்க்கு நிலைத்த செல்வம் தெய்வம் தானே? அதனால் செல்வமே என்கிறார். சிவபெருமானே. தலைவனே.
ஈசனே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். இவ்வளவு தூரம் அருள் செய்த பின் என்னை விட்டு
எங்கே எழுந்தருளுகிறீர்கள்? உம்மை
விடமாட்டேன் என்கிறார்.
என்ன அழகான பாடல் பாடலை பொருளுடன் படித்து மகிழ்ந்து
பரமேஸ்வரரின் பேரருள் பெற்றுய்யுங்கள்
மீண்டும் சந்திப்போம்
ஓம் நமசிவாய:
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment