Thursday, May 9, 2024

 


2 என்பொடு கொம்பொடு

சிவதாஸன் ஜகன்நாதன்

இன்று கோளறு பதிகத்தின் இரண்டாவது பாடலைப் பார்ப்போம்        முதல் பாடலில் ஒன்பது கோள்கள் பற்றியும் அவைகளால் ஈசன் அருளால் எந்த தீமையும் வராது என்ற ஞானசம்பந்தப் பிள்ளை அவர்கள் இந்த இரண்டாவது பாடலில் இருபத்தேழு விண்மீன்களில் ஒதுக்கப்பட்டவையான விண்மீன்களை சொல்லி அவைகளாலும் எந்த தீங்கும் நேராது என்று கூறுகின்றார்

 

என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க - எலும்பு, கொம்பு, ஆமை ஓடு இவை போன்றவை மார்பில் இலங்கி நிற்க

எருதேறி ஏழையுடனே - அறவுருவாகிய எருதின் மேல் அன்னையுடன் ஏறி இருந்து

பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து - பொன்னால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய மாலையையும் புனலாகிய கங்கையையும் தலையில் சூடி வந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்

ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்

ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்

பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்

ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்

உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்

அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே - ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.


முதல் பாடலில் நவகோள்கள் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொன்னார். இந்தப் பாடலில் பயணத்திற்கு ஆகாத விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) என்று தள்ளப்பட்ட நாட்களும் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொல்கிறார்.

சிவபெருமான் எலும்பு மாலை, கொம்பு, ஆமை ஓடு போன்றவை அணிந்திருக்கும் கோலத்தைக் காணலாம்

அவர் பொன்னாலான குளிர்ச்சி பொருந்திய மாலையையும் கங்கை நதியை முடியிலும் அணிந்து வந்து எனது உள்ளத்திலே புகுந்து குடிகொண்டு இருக்கின்றார்

ஏழையென்றது பெண் என்னும் பொருளில். இங்கு அது உமையன்னையைக் குறிப்பதாகும்

. ஏழைப்பங்காளன் என்று வள்ளல் தன்மையை உடையவரைக் குறிப்பது இன்று வழக்கில் உள்ளது. அது 'ஏழைப்பங்காளன்' என்னும் சொற்றொடரின் பொருள் உணராததால் வந்த வினை.

 ஏழைப்பங்காளன் என்று குறிப்பிடப் படும் முழுத் தகுதியும் சிவபெருமானுக்கே உண்டு. மற்றோருக்கு இல்லை. ஏழையை (பெண்ணை) தன் உடலில் ஒரு பங்காக உடையவன் என்று இதற்குப் பொருள். அப்படி மனைவிக்கு தன் உடலில் பாதியைத் தந்தவர் அண்ணலையன்றி வேறு யார்?

சோதிட நூல்களில் 27 விண்மீன்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. வார நாட்கள் ஏழும் கோள்களின் பெயர்களில் அமைந்தது போல ஒவ்வொரு மாதமும் இந்த 27 விண்மீன்களின் சுழற்சியில் வருமாறு அமைத்திருக்கின்றனர் நம் முன்னோர். நல்ல செயல் செய்யவோ எங்காவது பயணம் கிளம்பும் போதோ வார நாளைப் பார்த்தபின் அந்த நாளில் அமைந்த விண்மீனையும் பார்த்திருக்கிறார்கள்.

அந்த 27 விண்மீன்களில் 12 விண்மீன்களை பயணம் தொடங்க தகுதியில்லாத நாட்களாகத் தள்ளி வைத்துள்ளனர் - பூரம், பூரட்டாதி, பூராடம், மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவையே அவை. அவற்றில் சிலவற்றை இந்தப் பாடலில் சம்பந்தர் குறித்து அவையெல்லாமும் கூட அடியார்க்கு மிக நல்லவையே என்கிறார்.

சோதிட நூல்களில் அசுவினியில் தொடங்கி விண்மீன்களைச் சொன்னாலும் கிருத்திகையை முதல் விண்மீனாய் சொல்லும் மரபும் இருந்திருக்கிறது. மேஷம் முதல் ராசியானதால் அது அசுவினியில் தொடங்குவதால் அசுவினியை முதலாகக் கூறும் வழக்கமும் வந்தது. ஆனால் சம்பந்தரோ இங்கு கிருத்திகையை முதலாகக் கூறும் மரபைப் பாராட்டி அந்த விண்மீன்களை எண்களாகச் சொல்லியிருக்கிறார்

அழகான இந்த இரண்டாவது பாடலை பொருளுடன் படித்து உணர்ந்து ஏழைபங்காளனான சர்வேஸ்வரரின் பேரருள் பெற்றுய்யுங்கள்

நாளை மீண்டும் மூன்றாவது பாடலுடன் சந்திப்போம்

 

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்


No comments:

Post a Comment