1.வேயுறு தோளி பங்கன்
ஒம் நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
இன்று கோளறு பதிகத்தின் வேயுறு தோளி பங்கன் என்றுதொடங்கும் முதல் பாடலைப் பார்ப்போம்
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்மிக நல்ல வீணை
தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல்
அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்
வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!
மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில்
பங்கு கொடுத்திருக்கும் ஐயன் தேவர்களும்
அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை
உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால்
தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை
வள்ளல்
மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக்
கொண்டு
களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து
கொண்டு (சந்திரன் இயற்கையாய் களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால்
அவன் களங்கம் நீங்கி மாசறு திங்களானான்).
அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து
நிறைந்ததனால்
சூரியன், சந்திரன், செவ்வாய்,
புதன், குரு, சுக்கிரன், சனி,
ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும்
கேதுவும்)
ஒரு குற்றமும் இல்லாதவை
அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.
எனவே ஈஸன் அருளும் கருணையும் இருந்தால் எல்லக் கோள்களும்
சிவனடியார்களுக்கு நன்மையை மட்டுமே செய்யும் அவைகளால் எந்த தீமைகளும் வராது
வேயுறு தோளி பங்கன் - மூங்கிலை
ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்
விடம் உண்ட கண்டன் - தேவர்களும்
அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை
உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால்
தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை
வள்ளல்
மிக நல்ல வீணை தடவி -
மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன்
திருக்கரங்களால் தடவிக் கொண்டு
மாசறு திங்கள் கங்கை முடி மேல்
அணிந்து - களங்கமற்ற
பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு (சந்திரன் இயற்கையாய்
களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன் களங்கம் நீங்கி மாசறு
திங்களானான்).
என் உளமே புகுந்த அதனால் -
அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில்
புகுந்து நிறைந்ததனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்
வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும்
கேதுவும்)
ஆசறு நல்ல நல்ல -
ஒரு குற்றமும் இல்லாதவை
அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு
மிகவே -
அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.
நாளை இரண்டாவது பாடல் விளக்கத்துடன்
சந்திப்போம்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
No comments:
Post a Comment