Friday, May 10, 2024

3 ருவளர் பவளமேனி

சிவதாஸன் ஜகன்நாதன்

இன்று கோளறு பதிகத்தின் மூன்றாவது பாடலைப் பார்ப்போம்                     இந்தப் பாடலில் மலைமகள்,கலைமகள் ,அலைமகள்,பூமகள் மற்றும் திசை தெய்வங்கள் யாவரும் சிவபெருமானை உள்ளத்திலே கொண்ட அடியவர்களுக்கு என்றும் நல்லவர்களாக நன்மையை மட்டுமே செய்வார்கள் என்று கூறுகின்றார்

 

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

 

கரிய மேகங்களைப் பார்க்கும் தோறும் மேகவண்ணன் திருமாலின் கரிய நிறம் மனதில் தோன்றுவது போல் மேலே வெளிர்ந்த சாம்பல் பூசி எரிந்து அடங்கி நிற்கும் தீக்கங்கினைக் காணும் தோறும் மனதில் தோன்றுவது சிவபெருமானின் தோற்றமே.                                                                                                                              தீக்கங்கினைப் போன்ற சிவந்த, பவளம் போன்ற மேனியைக் கொண்டவன் சிவன் (சிவந்தவன், செம்மையானவன்). அந்த செந்நிற மேனி முழுவதும் மறையும் படி வெண்ணிற நீறணிந்து தோன்றுவதே தீக்கங்கினை சாம்பல் சூழ்ந்தது போன்ற தோற்றமாகும்.                                                                                                                             காக்கைச் சிறகினிலே கண்ணனைக் கண்டது போல் இந்த சாம்பல் சூழ்ந்த கங்கினைக் காணும் தோறும் நினைவில் வருபவன் 'ஆத்தி சூடி இளம் பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண் மேனியான் சர்வேஸ்வரன்



ஒரு முறை வாரியார் சுவாமிகள் சொன்னது நினைவிற்கு வருகிறது. தென்னாட்டார் சிவனைச் சிவந்தவன் என்ன, வடநாட்டார் அவனை வெண்ணிறம் கொண்டவன் என்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் சொன்னது: நாம் அவனின் உண்மையான தோற்றத்தைக் கண்டோம். அதனால் அவன் சிவந்த நிறம் கொண்டவன். சிவன் என்றோம். வடவர்கள் அவன் உடலெங்கும் திருநீறு பூசி நிற்கும் கோலத்தைக் கண்டார்கள். அதனால் அவன் பனியைப் போன்ற நிறமுடையவன் என்றார்கள்.

முருகு என்றால் அழகு என்று பொருள். நிறைய பேருக்கு அது தெரியும். முருகன் என்றால் அழகன்.
ஆனால் முருகு என்றால் தேன் என்றும் ஒரு பொருள் இருக்கிறது. அதனால் தான் இதற்கு தேன் நிரம்பி அலர்ந்த அழகிய கொன்றை என்று பொருள் இப்படிப்பட்ட கொன்றை மலரையும் இளம்பிறையையும் முடியின்மீது அணிந்து எனது உள்ளத்திலே புகுந்து ஈசன் குடி கொண்டு இருப்பதனால் - செல்வத்திற்கு அதிபதியான திருமகள், கலையாகிய வித்தைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள், - வெற்றிக்கு அதிபதியான மலைமகள், நிலமகள்
மற்றும் - எல்லா திசைகளிலும் இருந்து மக்களைக் காக்கும் தெய்வங்கள் எல்லாம் அவர்கள் கிழக்கு - இந்திரன், தென்கிழக்கு - அக்கினி, தெற்கு - யமன், தென்மேற்கு - நிர்ருதி, மேற்கு - வருணன், வடமேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வடகிழக்கு - ஈசானனாகிய சிவன்.
அடியவர்களுக்கு மிக நல்லவை. மிக மிக நல்லவை. நன்மையை அன்றி மற்றவற்றைத் தாரா.

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து - அழகில் சிறந்த சிவந்த மேனியின் மேல் ஒளிவீசும் திருநீற்றினை அணிந்து கொண்டு

உமையொடும் வெள்ளை விடை மேல் - உமையன்னையுடன் வெள்ளை எருதின் மேல் ஏறி

முருகலர் கொன்றை - தேன் நிறைந்து மலர்ந்த அழகிய கொன்றைப் பூவினையும்

திங்கள் - நிலவையும்

முடிமேல் அணிந்து - திருமுடியின் மேல் சூடி

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதால்

திருமகள் - செல்வத்திற்கு அதிபதியான திருமகள்

கலையதூர்தி - கலையாகிய வித்தைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள்

செயமாது - வெற்றிக்கு அதிபதியான மலைமகள்

பூமி - நிலமகள்

திசை தெய்வமான பலவும் - எல்லா திசைகளிலும் இருந்து மக்களைக் காக்கும் தெய்வங்கள் எல்லாம்

அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அடியவர்களுக்கு மிக நல்லவை. மிக மிக நல்லவை. நன்மையை அன்றி மற்றவற்றைத் தாரா.

அழகான இந்த மூன்றாவது பாடலை படித்து மகிழ்ந்து சர்வேஸ்வரின் பேருள் பெற்றுய்யுங்கள்

நாளை அடுத்த பாடலுடன் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன் 

No comments:

Post a Comment