Saturday, May 18, 2024

 

 

ஆதித்ய ஹ்ருதயம்                                                 எதிரிகளை வெல்லும் ஆதித்ய ஹ்ருதயம்:

 சிவதாஸன் ஜகன் நாதன்

அனைவருக்கும் சிவதாஸன் ஜகன்நாதனின் வணக்கம் டாக்டர் உஷா அவர்கள் ஆதித்ய ஹ்ருதயம் தமிழில் வேண்டும் என்று கேட்டிருந்தார்  அதை இர்ண்டு பதிவுகளாகத்தரலாம் என எண்ணுகிறேன்

இன்றைய பதிவில் ஆதித்ய ஹ்ருதயம் பற்றிய விளக்கமும் நாளை அந்த ஸ்லோகங்களையும் தருகிறேன் இன்று இந்த முன்னுறையை படித்து மகிழுங்கள்

இவ்வுலக இயக்கத்திற்கு முக்கிய காரணியாக சூரியன் விளங்கி வருகிறது. சூரியனின் சக்தியால் தான் ஜீவராசிகள், பயிர்கள், தாவரங்கள் வாழ்கின்றன, வளர்கின்றன.                                                                                                                                           பருவ மாற்றங்களான கோடை, குளிர்,  மழை கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன.                                                                                                                               நவகிரகங்களில் சூரியன் ராஜகிரகம் என அழைக்கப்படுகிறது. இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த சூரிய பகவானை நமது முன்னோர்கள் காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். சூரியனை வழிபடும் சமயத்தை சௌமாரம் என்று கூறுவார்கள்.  சூரிய வழிபாட்டினை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கிறார்கள்

 

 

சூரியனை பரம்பொருளாக ஆதித்ய ஹ்ருதயம் கூறுகிறது. மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. சூரியன் சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. சூரியனை சிவனோடு ஒப்பிட்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவோடு ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் அழைக்கிறார்கள்.

இந்தியாவில் சூரியனுக்கென்று அமைந்துள்ள ஆலயங்கள்:

சூரியனுக்கென்று இந்தியாவில் மிகச்சில ஆலயங்களே அமைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது, ஒரிசாவிலுள்ள கோனார்க், கயாவிலுள்ள தட்சிணார்க்கா, ஆந்திராவில் அரசவல்லி, குஜராத்தில் மொதேரா, அஸ்ஸாமில் சூர்யபஹார், மத்திய பிரதேசத்தில் உனாவோ, கேரளாவில் ஆதித்யபுரம், காஷ்மீர் ஸ்ரீநகரில் 2000 ஆண்டுகள் பழமையான மார்த்தாண்டா ஆலயம் ஆகியவையாகும்.தமிழ் நாட்டிலும் சூரிய நைனார்கோயில் என்ற ஸ்தலத்தில் சூரியன் வணங்கப் படுகின்றார்

சூரிய வழிபாட்டின் பலன்கள்:

சுகத்துக்கு சூரியனை வணங்கு என்பது நமது முன்னோர்கள் வாக்கு. வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நலன்களையும், வளங்களையும் அருளும் சூரியனை நாம் கடவுளாக வணங்குகிறோம்.                                                  ‘ஆயுளை வளர்க்கும் அன்னரூபம்’ என்று வேதங்கள் சூரியனைப் போற்றுகின்றன.  . நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்பவர்கள் மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும், பூப்படையாத பெண்களும், முக்கியமாக கண் பார்வை மங்கியவர்களும் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய வழிபாட்டைச் செய்வது மிகவும் நல்லது.   சூரிய வழிபாடு கிரக தோஷங்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

ஆதித்ய ஹ்ருதயம் சிறப்புகள்:

சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய முனிவர் ஒரு முறை உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் அம்பாளை நோக்கி தவமிருந்த போது, அவரது தவத்துக்கு மனமிரங்கி தோன்றிய அன்னை, அகத்தியருக்கு இந்த உலகம் உய்யும் பொருட்டு ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசித்தாள்.                              மகத்தான இந்த மந்திரத்தைப் பெற்ற அகத்திய முனிவர், இதை தகுதி வாய்ந்த ஒருவரால் இந்த உலகிற்கு வழங்க வேண்டும் என எண்ணினார். இதன் வாயிலாக அகிலமே பயனடையும் என்றும் நினைத்தார்.

சரி, யாரிடம் வழங்கலாம் என்று எண்ணிய அகத்திய முனிவர் மகா விஷ்ணுவின் மகத்தான அவதாரமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம் இந்த மந்திரத்தை வழங்கலாம் என முடிவெடுத்தார்.                                                ராமபிரானுக்கும், ராவணனுக்கும் நடைபெற்ற யுத்தம் நீண்டு கொண்டே சென்றது. இதனால் மிகவும் களைப்புற்றிருந்தார் ராமபிரான். ராவணனை வெல்லும் உபாயம் குறித்து யோசித்துக் கொண்டிருந்தார்.                                                     இது தான் சரியான சமயம் என எண்ணிய அகத்திய முனிவர், “ராமா, இந்த இக்கட்டான கட்டத்தில்  உனக்கு துணையாய் இருந்து உனது வெற்றியை உறுதிப்படுத்தும் ஒரு அற்புதமான கவசத்தை உனக்கு உபதேசிக்கிறேன்” எனக் கூறினார்.

அது மட்டுமல்லாமல், “அன்னை உமையவள் எனக்கு உபதேசித்த இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை உனக்கு உபதேசிக்கிறேன். இந்த ராம அவதாரம் முழுக்க எத்தனையோ சந்தர்ப்பங்களில் நீ உனது அவதாரத்தின் மகிமையை வெளிக்காட்டவில்லை. உனது தெய்வீக சக்தியையும் பிரயோகிக்கவில்லை. மனிதனாகவே வாழ்ந்து மானிடனுக்குரிய தர்மத்தை தவறாமல் அனுஷ்டித்து வருகிறாய். எனவே நீ ஒரு மனுஷனாகவே இருந்து அரக்கர் தலைவர் ராவணனை சம்ஹாரம் செய்வது தான் உனக்கு பெருமை சேர்க்கும். உன் மூலமாக இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை உலக மக்களுக்கு அளிக்கவே உனக்கு உபதேசிக்கிறேன்” எனக் கூறினார் அகத்திய முனிவர்.

மகத்துவங்கள் நிறைந்த ஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசமாகப் பெற்றதும் ராமபிரானின் அனைத்து கவலைகளும் நீங்கியது. மறுபடியும் யுத்தத்தில் வீரியத்துடனும், பலத்துடனும் ராவணனை எதிர்த்து நின்று வெற்றி கண்டார்.

ஆதித்ய ஹ்ருதயத்தின் பலன்கள்:

ஆதித்ய ஹ்ருதயம் மனச்சோர்வை நீக்கி, நோய்களை தீர்த்து வைக்கிறது. இது உடலுக்கு சக்தி தரும் அபூர்வமான ஸ்லோகமாகும். எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுபவர்கள் இந்த துதியை பாராயணம் செய்தால் அத்தொல்லைகள் எல்லாம் நீங்கி பயம் விலகும். கிரகங்களால் ஏற்படுகின்ற அனைத்து தோஷங்களும் நீங்கும். ஆயுள் பலம் அருளும். எவ்வளவு கடினமான கால கட்டத்திலும் இந்த துதியை பாராயணம் செய்தால் துன்பங்கள் எல்லாம் நீங்கி மனம் புத்துணர்ச்சி பெறும்.

அன்பர்களே இந்த முன்னுறையை இன்று நிறைவு செய்கிறேன் நாளை ஆதித்ய ஹ்ருதயத்தின் ஸ்லோகங்களையும் அவற்றிர்க்காண விளக்கத்தையும் தமிழில் தருகிறேன்

 

ஓம் நமசிவாய:

 

சிவதாஸன் ஜகன்நாதன் 


No comments:

Post a Comment