Saturday, May 11, 2024

4 மதிநுதல் மங்கையோடு

சிவதாஸன் ஜகன்நாதன்

இன்று கோளறு பதிகத்தின் நாலவது பாடலைப் பார்ப்போம்    இதில் பரமனின் பேரருளோடு அவரை நமது உள்ளத்திலே இருத்திக்கொண்டால் காலன்,காலதூதர்கள், ஜுரம் ,அக்னி போன்ற பலவிதமான நோய்களும் நம்மை அண்டா.மேலும் அவை யாவும் நமக்கு நல்லவையாகவே அமையும் என்று சொல்லுகிறார்ர

 

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே

 

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோதும் எங்கள் பரமன்  என்பது சிவபெருமான் உமா மகேசுரவராக அன்னையுடன் கூடி அமர்ந்திருக்கும் திருக்கோலமும் யோகீஸ்வரனாய் வட விருக்ஷம் எனப்படும் கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து மறைகளை சனத்குமாரர்களுக்கு உபதேசிக்கும் தென்முகக் கடவுள் திருக்கோலமும் குறிக்கப் படுகின்றன.

தென்முகக்கடவுளாய் அமர்ந்திருக்கும் போது அன்னையுடன் சேர்ந்திருப்பதில்லை ஐயன். ஆனால் சம்பந்தருக்கு அன்னையையும் ஐயனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை போலும். உள்ளம் புகுந்தவன் அன்னையுடன் அல்லவா புகுந்தான். அதனால் மதி நுதல் மங்கையோடு என்று யோகநிலையில் இருக்கும் திருக்கோலத்திலும் அன்னையுடன் சேர்த்து ஐயனை தரிசிக்கிறார்.

ஈஸன் முடிமீதில் கங்கையையும் கொன்றை மலர் மாலையையும் அழகுற அணிந்து என் உள்ளத்திலே புகுந்தார் எங்கிறார்

ஐயனுடன் அடியாருக்கு இருக்கும் நெருக்கமான உறவைக் குறிக்க 'எங்கள் பரமன்' என்கிறார். அவன் பரமன் - எல்லோருக்கும் மேலானவன். ஆனால் அதே நேரத்தில் எங்களவன்.

காலனும் நமனும் யமனின் மறுபெயர்கள். இங்கு கொதியுறு காலன் என்று சொல்லிவிட்டு மீண்டும் நமன் என்கிறார். இருமுறை யமனைக் குறித்திருப்பாரோ என்று கேள்வி வந்தது. அதனால் அவன் அருளை முன்னிட்டுச் சிந்தித்ததில் 'கொதியுறு காலன்' என்பது 'காய்ச்சலாகிய காலன்' எனப் பொருள் தரலாம் என்று தோன்றியது.

அங்கி என்பது அக்கினி எனும் வடசொல்லின் திரிபு.

நமனோடு அவன் தூதர்களும் கொடு நோய்களான பலவும் என்று சொல்லவந்தவன் பின்னர் நோய்களைத் தானே யமதூதர்கள் என்று சொல்லுவார்கள் என்று எண்ணி அதே பொருளைக் கொடுத்திருக்கிறேன்

மதிநுதல் மங்கையோடு - நிலாப் பிறையை போல் வளைந்து, நிலவைப் போல் குளிர்ந்த ஒளிவீசும் நெற்றியையுடைய அன்னை உமையோடு

வடபாலிருந்து - தென் திசை நோக்கி (தட்சினாமூர்த்தி திருவுருவத்தில்) வடப்பக்கமாய் அமர்ந்து

மறையோதும் எங்கள் பரமன் - மறைபொருளாய் இருக்கும் ஞான நூல்களை ஓதி அருளும் எங்கள் பரமனான சிவபெருமான்

நதியொடு கொன்றை மாலை முடிமேலணிந்து - கங்கையும் கொன்றை மாலையும் தன் திருமுடிமேல் அணிந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிரந்தரமாய் வீற்றிருப்பதால்

கொதியுறு காலன் - உடலை வருத்தும் காய்ச்சல் என்னும் காலனும்

அங்கி - உடலைச் சுடும் அக்கினியும் (தீயும்)

நமனோடு தூதர் - உயிரை எடுக்கும் நமனெனும் யமனும் அவனுடைத் தூதர்களாகிய

கொடுநோய்கள் ஆன பலவும் - கொடிய நோய்கள் யாவும்


அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - சிவனடியார்களுக்கு அவை மிக நல்லவை. நற்குணங்கள் மிகுந்தவை. நற்குணங்கள் அளிப்பவை.

 

இந்த அழகும் பொருட்செறிவும் நிறைந்த பாடலை பொருளுடன் படித்து மகிழ்ந்து இன்புற்று ஈஸன் பேருள் பெற்றுய்யுங்கள்

நாளை அடுத்த பாடலுடன் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்



 

No comments:

Post a Comment