Sunday, December 1, 2024

 


 

அபிராமி அந்தாதி-31

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு, டிசம்பர், 1  2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை முப்பது பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் முப்பத்தொன்றாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில்  அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும், ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும் அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.

. 31 மறுமையில் இன்பம் உண்டாக

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில்வந்திங்
கெமையும் தமக்கன்பு செய்ய வைத்தார், இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே.

உமையும் உமையொரு பாகனும்

உமையன்னையும் சிவபெருமானும்

ஏக உருவில் வந்து 

ஒரே உருவாக வந்து

இங்கு எமையும்

இங்கே இந்த உலகிலேயே மிக கீழான என்னையும்

தமக்கு அன்பு செய்ய வைத்தார் 

அவர்களுக்கு அன்பு செய்யும் படி அருள் புரிந்தார்கள்

இனி எண்ணுதற்குச்

இனி நான் எண்ணி பின்பற்ற வேண்டிய

சமையங்களும் இல்லை 

சமயங்களும் இல்லை (இறை அருள் பெறுவதற்கு பக்தி செய்ய வேண்டுமா, ஞானவழியில் செல்வதா,யோகவழியில் செல்வதா, கருமவழியில் செல்வதா என்று எண்ணிப்பார்க்கத் தேவையில்லை)

ஈன்றெடுப்பாள்

என்னை பெற்றெடுக்க

ஒரு தாயும் இல்லை 

பிறப்பிறப்புச் சுழலில் இருந்து விடுபட்டுவிட்டதால் இனி எனக்குப் பிறவிகள் இல்லை. அதனால்) என்னை பெற்றெடுக்க ஒரு தாயும் இல்லை

அமையுறு தோளியர்

அழகிய தோள் உடைய பெண்கள்

மேல் வைத்த ஆசையுமே 

மேல் வைத்த ஆசையும் தானாகவே

அமையும்

அமைதியுற்றது.

 உமாதேவியும், அத் தேவியை ஒரு பாகத்தில் உடைய சிவபிரானும் சேர்ந்து ஓருருவாக எழுந்தருளி வந்து, பரிபக்குவமற்ற என் போன்றோரையும் தம் திருவடிக்கு அன்பு செய்யும்படி நன்னிலையில் வைத்தருளினார்; ஆதலின் இனிமேல் கடைப்பிடிப்போமென்று எண்ணி நாம் ஆராய்தற்குரிய சமயங்கள் வேறு இல்லை; எமக்குப் பிறவிப் பிணி நீங்கியதாதலின் இனி எம்மைப் பெற்று எடுப்பதற்குரியவளாகிய தாயும் இல்லை; மூங்கிலைப்போல் உள்ள தோளையுடைய மகளிர்பால் வைத்த மோகம் போதும்.

விளக்கம்: 

அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும், ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும் அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு, டிசம்பர், 1  2024

 


No comments:

Post a Comment