Wednesday, December 11, 2024

 


 


 

அபிராமி அந்தாதி-41

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன்  டிசம்பர்,  10,  2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை நாற்பது பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் நாற்பத்தொன்றாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் அபிராமிப்பட்டர்  அம்பாள் பேரருள் வழங்குவதற்காக தன் மனதிலே இறை உணர்வு பெருகச்செய்து தன்னை அடியவர்கள் கூட்டத்தில் சேர்த்து அப்பனோடு இணைந்து வந்து ஆட்கொண்டதை சொல்லுகிறார்

நல்லடியார் நட்புப் பெற   

புண்ணியம் செய்தனமே மனமே, புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.

 

மனமே

எனது மனமே

புண்ணியம்

புண்ணியம் செய்திருக்கிறாய்

செய்தனமே

என்ன பாக்கியம். என்ன பாக்கியம்

புதுப்

இப்போதே மலர்ந்த

பூங்குவளைக்

கருங்குவளைப்பூவைப் போன்ற

கண்ணியும்

கண்களை உடைய நம் அன்னையும்

செய்ய

சிவந்த

கணவரும் கூடி 

அவளது கணவரும் இணைந்து

நம்காரணத்தால்

நம்மை ஆண்டு அருள்வதற்காக

நண்ணி

விரும்பி

இங்கே வந்து 

நாமிருக்கும் இடமான இங்கே வந்து

தம் அடியார்கள்

தம் அடியவர்களின்

நடு இருக்கப்

கூட்டத்தின் நடுவே நம்மை இருக்கும்படி

பண்ணி

அருள் செய்து

நம் சென்னியின்

நம் தலையின்

மேல்பத்மபாதம்

மேல் தங்களின் தாமரைத் திருவடிகளை

பதித்திடவே

நிலையாக நிறுத்திடவே

 

மனமே, அன்று அலர்ந்த புதிய குவளை மலரைப் போன்ற திருவிழிகளையுடைய அபிராமியும், அப்பிராட்டியின் செந்நிறத்தையுடைய பதியும் சேர்ந்து, நம்மை ஆட்கொள்ளும் காரணத்தால் நாம் இருக்கும் இடத்தை அணுகி வந்து, நம்மைத் தம் அடியார்களிடையே இருக்கும்படி திருவருள் பாலித்து, நம்முடைய தலையின் மேலே தம் திருவடி மலர்களைப் பதிப்பதற்கு உரிய புண்ணியச் செயலை முற்பிறவியில் செய்திருக்கின்றோம்; இது வியத்தற்குரியது.

விளக்கம்

அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன்  டிசம்பர்,  10,  2024

 

 

  

 


No comments:

Post a Comment