Saturday, December 7, 2024

 


 


 

அபிராமி அந்தாதி-37

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

சனி, டிசம்பர்,  7,  2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை முப்பத்து     ஆறு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் முப்பத்து ஏழாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் அபிராமிப்பட்டர்  தன் மனக்கண்ணிலே அம்பாளின்  திரு உருவத்தைப் பார்க்கும் பொழுது தான் காணும் அழகை விவரிக்கின்றார்

கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும்,எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.

கைக்கே அணிவது

கைகளுக்கு அணிகலங்களாக நீ அணிந்து கொள்வது

கன்னலும் பூவும் 

கரும்பும் பூக்களும்

கமலம் அன்ன

தாமரை போன்ற

மெய்க்கே அணிவது

திருமேனிக்கு அணிகலங்களாக அணிவது

வெண் முத்துமாலை 

வெண்ணிற முத்துமாலைகள்

விட அரவின்

நல்ல பாம்பின் படம் எடுத்த தலையைப் போல் இருக்கும்

பைக்கே அணிவது

இடைக்கு அணிந்து கொள்வது

பன்மணிக் கோவையும்

பலவிதமான மாணிக்கங்களால் ஆன மாலைகளும்

பட்டும் –

பட்டுத்துணியும்

எட்டுத் திக்கே அணியும்

எட்டுத் திக்குகளையே (திசைகளையே) ஆடையாக அணிந்து கொண்டிருக்கும்

திரு உடையானிடம்

எல்லா செல்வங்களையும் உடைய (ஐஸ்வர்யம் உடையவன் ஈஸ்வரன்) சிவபெருமானுடன்

சேர்பவளே

இணைந்திருப்பவளே

                                                                                                               

எட்டுத் திசையையே உடுத்த அழகிய உடையாக உடைய சிவபெருமானது வாமபாகத்தைப் பொருந்திய அபிராமி, தன் திருக்கரத்தில் அணிந்திருப்பன கரும்பாகிய வில்லும் மலராகிய அம்புகளும் ஆம்; செந்தாமரைபோன்ற நிறமுடைய திருமேனியில் அணிவது வெள்ளிமுத்துமாலையாம்: விஷம் பொருந்திய நாகத்தின் படம் போன்ற குஹ்ய ஸ்தானத்தில் தரிப்பவை பல மணிகளால் ஆகிய மேகலை வகைகளும் பட்டும் ஆம்.

 

விளக்கம்: 

என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள இடைப்பகுதியைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

சனி, டிசம்பர்,  7,  2024

 

 

  

 


No comments:

Post a Comment