Monday, December 2, 2024

 

 

அபிராமி அந்தாதி-32

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், டிசம்பர், 2  2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை முப்பத்து ஒரு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் முப்பத்ய்ஹு இரண்டாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில்  அபிராமிப்பட்டர் அம்பாளிடம் தேவியே இந்த ப்ரபஞ்சத்தில் மிகுந்த பயமளிப்பதான எம பயத்தை நீக்கிம் என்னை ஆட்கொள்ளுவதைச் சொல்லுகின்றார்ய

அகால மரணமும் துர்மரணமும் வராமலிருக்க

ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் எனும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து, ஆண்டுகொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர் பாகத்து நேரிழையே.

ஆசைக்கடலில் அகப்பட்டு 

ஆசையெனும் பெருங்கடலில் அகப்பட்டு

அருளற்ற அந்தகன்

கொஞ்சமும் கருணையில்லாத கூற்றுவனின் (யமனின்)

கைப் பாசத்தில்

பாசக்கயிற்றால் கட்டப்பட்டு

அல்லற்பட இருந்தேனை 

எல்லா துன்பங்களும் அடைய இருந்த என்னை

நின் பாதம் என்னும்

உன் திருவடிகள் என்னும்

வாசக் கமலம் 

மணம் மிகுந்த தாமரைமலர்களை

தலை மேல் வலிய வைத்து 

என் தலை மேல் நீயே வலிய வந்து வைத்து

ஆண்டு கொண்ட நேசத்தை 

என்னை உன் அடியவனாக ஏற்றுக் கொண்ட உன் அன்பினை

என் சொல்லுகேன் 

எப்படி புகழ்வேன்?

ஈசர் பாகத்து

சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக்கும்

நேரிழையே

அழகிய அம்மையே

 

 பரமேசுவரரது வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் நுண்ணிழைகளை அணிந்த தேவி, மண் பெண் பொன் என்னும் மூன்றன் ஆசையாகிய கடலிற் சிக்கி அதன் பயனாக இரக்கமற்ற யமனது கைப்பாசத்திற் பட்டுத் துன்புறும்படி இருந்த அடியேனை, நின் திருவடியாகிய மணமுள்ள தாமரை மலரை அடியேன் தலையின்மேல் வலிய வைத்தருளித் தடுத்தாண்டு கொண்ட நின் கருணைப் பெருக்கை எவ்வாறு உரைப்பேன்!

கரைகாணற்கு அரிதாதலின் ஆசை கடலாயிற்று. நேசம் தலையளி. நேர்தல் நுணுகுதல்; நேரிழை- நுண்ணிய வேலைப்பாடு அமைந்த ஆபரணம்; இங்கே அதனை அணிந்த தேவிக்கு ஆயிற்று.

விளக்கம்: 

அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், டிசம்பர், 2  2024

 


No comments:

Post a Comment