Thursday, December 5, 2024


 

அபிராமி அந்தாதி-35

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழன், டிசம்பர்,  5,  2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை முப்பத்து     நான்கு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் முப்பத்து ஐந்தாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில்  அபிராமிப்பட்டர்  அம்பாள் தன்னுடைய திருவடிகளை அடியவர்களின் தலையில் வைத்து அருள்வதை விளக்குகின்றார்

திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம்எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கட் பணிஅணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே.

திங்கட் பகவின்

திங்களை முடி மேல் சூடிய இறைவனின்

மணம் நாறும் சீறடி

நறுமணம் வீசும் சிறந்த திருவடிகள்

சென்னி வைக்க

எங்கள் தலைமேல் வைக்க

எங்கட்கு ஒரு தவம் எய்தியவா

எங்களுக்கு இந்த தவம் எப்படி எய்தியது?

எண் இறந்த விண்ணோர்

எண்ணிக்கையில் அளவில்லாத விண்ணில் வாழும் விண்ணவர்கள்

தங்கட்கும்

தங்களுக்கும்

இந்தத் தவம் எய்துமோ

இந்த தவம் கிடைக்குமா?

தரங்கக் கடலுள் 

அலைவீசும் கடலில்

வெங்கட் பணி

வெம்மையான கண்களையுடைய

அணை மேல் 

பாம்பு படுக்கையின் மேல்

துயில் கூரும்

துயில் கொள்ளும்

விழுப்பொருளே

பரம்பொருளே! (விஷ்ணு ரூபிணியான வைஷ்ணவியே) !

 

அலைகளையுடைய பாற்கடலில் வெவ்விய கண்ணையுடைய ஆதிசேடனாகிய பாயலின்மீது துயிலும் மேலான பொருளே, சிவபிரானது திருமுடியிலுள்ள பிறைச்சந்திரனது மணம் வீசும் நின்னுடைய சிறிய அடி, ஒன்றுக்கும் பற்றாத எங்கள் சிரத்திலே நீ வைத்தருள எங்களுக்கு ஒப்பற்ற தவம் அமைந்தவாறு என்ன வியப்பு! கணக்கில்லாத பலதேவர்களுக்கும் இத்தகைய சிறந்த தவம் கிடைக்குமோ? கிடையாது.

 

விளக்கம்

அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ! விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழன், டிசம்பர்,  5,  2024

  

No comments:

Post a Comment