Friday, December 6, 2024


 

அபிராமி அந்தாதி-36

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி, டிசம்பர்,  6,  2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை முப்பத்து     ஐந்து பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் முப்பத்து ஆறாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் அபிராமிப்பட்டர்  அம்பாள் தானே பொருளாகவும் அது தரும் போகமாகவும் அதனால் உண்டாகும் மருளாகவும் மாயையாகவும் அதை நீக்கும் மருந்தாகவும் உள்ளாள் என்று கூறுகின்றார்

பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது, அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே.

பொருளே 

பொருட்செல்வமாகித்திகழ்பவளே!

பொருள் முடிக்கும் போகமே 

அந்தப் பொருட் செல்வத்தால் அடையப்படும் போகங்களாகி நிற்பவளே!

அரும் போகம்

அந்த போகங்களை

செய்யும் மருளே 

அனுபவிக்கும் போது ஏற்படும் மயக்கமாகித் திகழ்பவளே!

மருளில் வரும்

அப்படி மயக்கம் வந்த பின்

தெருளே 

அதில் இருந்து விடுபடும் வண்ணம் ஏற்படும் தெளிவே!

என் மனத்து வஞ்சத்து

என் மனதில் என்னை வஞ்சிக்கும்

இருள் ஏதும் இன்றி

மாயை இருள் ஏதும் இன்றித் திகழும் படி

ஒளி வெளி ஆகி இருக்கும்

ஒளிவெள்ளமாக உன் அருள் வந்தது.

உந்தன் அருள் ஏது 

அதன் பெருமையை நான் எப்படி சொல்வது?

அம்புயாதனத்து

தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும்

அம்பிகையே 

அம்பிகையே

 

 பல வகைச் செல்வமாக உள்ளாய், அச்செல்வத்தால் நிறைவேறும் போகமே, அரிய போகங்களைத் துய்க்கும்படி செய்யும் மாயாரூபியே, மயக்கத்தின் முடிவில் உண்டாகும் தெளிந்த ஞானமே, தாமரையாகிய இருக்கையில் எழுந்தருளிய தாயே, அடியேனது மனத்தில் மாயையிருள் சிறிதும் இல்லாது ஒழியச் சுடர் வீசும் பராகாசமாக இருக்கும் நின் திருவருள் எத்தகையதென்று அடியேன் அறியவில்லை.

ஐசுவரியத்தைத் தருபவளும் ஐசுவரியமே உருவமாக இருப்பவளும் தேவியே. போகமே: ‘மகாபோகா, (லலிதா. 219). மருள்: ‘மகாமாயா’, ‘மாயா (லலிதா.225,715), வஞ்சத்து இருள்: அத்து, அல்வழிச் சாரியை. அம்புயாதனத்தம்பிகை: 5,20.

விளக்கம்: 

ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் வீற்றிருக்கும் அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.

 

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி, டிசம்பர்,  6,  2024

 

 

 

  

No comments:

Post a Comment