Monday, December 9, 2024

 

 


 

அபிராமி அந்தாதி-39

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், டிசம்பர்,  9,  2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை முப்பத்து  எட்டு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் முப்பத்து ஒன்பதாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் அபிராமிப்பட்டர்  திரிபுர ஸம்ஹாரம் செய்வதற்கு சிவபெருமானின் உடன் இருந்த் சக்தியின் திருவடிகள் தனக்கு அடைக்கலமாயிருப்பதையும்,அவளின் கடைக்கண் பார்வை அந்தகனிடமிருந்து தன்னைக் காப்பதாகவும் கூறுகிறார்

ஆளுகைக்கு, உன்தன் அடித் தாமரைகள் உண்டு, அந்தகன்பால்
மீளுகைக்கு உன்தன் விழியின் கடைஉண்டு, மேல்இவற்றின்
மூளுகைக்கு என்குறை, நின்குறையே அன்று, முப்புரங்கள்,
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.

 

ஆளுகைக்கு,

என்னை ஆட்கொண்டு ஆள்வதற்கு

உன்தன் அடித்

உந்தன் திருவடியாகிய

தாமரைகள்உண்டு

தாமரைகள் உண்டு

அந்தகன்பால்

கூற்றுவனிடமிருந்து என்னைக்

மீளுகைக்கு

காப்பதற்கு

விழியின் கடை

உந்தன் கடைக்கண்ணின்

உண்டு

அருட்பார்வை உண்டு

மேல்இவற்றின்

இவைகள் இருந்தும்

மூளுகைக்கு

உன்கடைக்கண் பார்வை படாமலிருப்பதற்கு

என்குறை

காரணம் என்னுடைய குறைபாடே அன்றி

நின்குறையேஅன்று

உன்னுடைய கருணையில் குறை இல்லை

முப்புரங்கள்,

திரிபுரங்களின்

மாளுகைக்கு

ஸ்ம்ஹாரத்திற்கு

அம்பு தொடுத்த

திருமாலான் அம்பாக எய்த

வில்லான்,

சர்வேஸ்வரரின்

பங்கில்

இடப்பாகம் உறையும்

வாணுதலே.

ஒளிரும் வாள்போன்ற நெற்றியை உடையவளே

 

திரிபுரங்களும் அழிதலின்பொருட்டுத் திருமாலாகிய அம்பைத் தொடுத்த மேருமலையாகிய வில்லையுடைய சிவபிரானது வாமபாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஒளி படர்ந்த திருநுதலையுடைய தேவி, அடியேனை ஆட்கொண்டருளுதற்கு நின் திருவடித் தாமரை மலர்கள் இருக்கின்றன; காலன்பால் செல்லாமல் மீண்டு உய்வதற்கு உபகாரமாக நின் கடாக்ஷவீக்ஷண்யம் இருக்கிறது; இவற்றின்பால் கருத்தைப் பொருத்துகைக்கு இன்னும் காலம் வராமல் இருப்பது என் குறைதான்; நின் திருவருட்குறை அன்று.

விளக்கம்: 

அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், டிசம்பர்,  9,  2024

 

 

  

 


No comments:

Post a Comment