ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
சனி 30, நவம்பர் 2024
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.
நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை இருபத்து ஒன்பது பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று
நாம் முப்பதாவது பாடலைப் பார்ப்போம்.
இந்த பாடலில் ஒன்றாகவும் பலவாகவும் அருவமுமாகவும் உள்ள அம்பாள்
தன்னை பெற்ற அன்னையின் பெரும் கருணையுடன் பேணிக்காப்பாற்றுவாள் கைவிடமாட்டாள் எனக்
கூறுகின்றார்.
அன்றே
தடுத்தென்னை ஆண்டுகொண்டாய், கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கினி நான் என் செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே,
ஒன்றே, பலஉருவே, அருவே, என் உமையவளே.
பொருள்:
அன்றே தடுத்து என்னை |
நான் ஒன்றும் அறியா சிறு குழந்தையாக இருக்கும் போதே நான் புண்ணிய பாவங்களைச்
செய்து சுழலில் சிக்கிக் கொள்ளாமல் என்னைத் |
ஆண்டு கொண்டாய் |
தடுத்து என்னை நீ அடியவனாக ஏற்றுக் கொண்டு என்னை ஆண்டு கொண்டாய். |
கொண்டதல்ல என்கை |
அப்படி என்னை அடிமையாகக் கொண்டுவிட்டு பின்னர் உன் உடைமையான என்னை இல்லை
என்று சொல்வது |
நன்றே உனக்கு? |
உனக்கு ஏற்புடைத்தாகுமோ? |
இனி நான் என் செயினும் |
இனிமேல் நான் என் செய்தாலும் |
நடுக்கடலுள் சென்றே விழினும் |
அறிவில்லாமல் நடுக்கடலுள் சென்று விழுந்தாலும் |
கரையேற்றுகை |
– என்னைக் காத்துக் கரையேற்றுவது |
நின் திருவுளமோ |
உன் திருவுள்ளம் தானே |
ஒன்றே |
இறை என்னும் போது ஒன்றாகவும், |
பல உருவே |
அவரவர் தம் மனத்திற்கு ஏற்ற வகையில் வணங்கும் பல உருவங்களாகவும், |
அருவே |
இறைவனுக்கு உருவம் இல்லை என்று உருவமற்ற இறைவனை வணங்குபவர்களுக்கு
அருவமாகவும் இருக்கும் |
உமையவளே |
என் அன்னை உமையவளே! |
ஓருருவாக உள்ளாய், பல உருவங்களை உடையாய், உருவமற்ற அருவே, எனக்குத் தாயாகிய உமா தேவியே, முன் ஒரு நாள் என்னைத் தடுத்தாட்கொண்டருளினை; அங்ஙனம் ஆட்கொண்டதை அல்ல என்று மறுத்தல் உனக்கு நியாயமா? இனிமேல் அடியேன் என்ன குற்றம் செய்தாலும், கடலுக்கு நடுவே சென்று விழுந்தாலும், என் குற்றத்தை மறந்து கரையேற்றப் பாதுகாத்தல் நின் திருவுளப்பாங்குக்கு ஏற்றதாகும்.
விளக்கம்:
அபிராமி அன்னையே! என் உமையவளே! நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே! நான் பாவங்களையே செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், அதனின்று காப்பது நின் கடைமையாகும். என்னை ஈடேற்ற முடியாது என்று சொன்னால் நன்றாகாது. இனி உன் திருவுளம்தான் என்னைக் கரை ஏற்ற வேண்டும் (பந்தபாசக் கடலில் இருந்து முக்திக் கரை ஏற்றுதல்). ஒன்றாகவும், பலவாகவும், விளங்குகின்ற என் உமையவளே!
இத்துடன் இந்தப் பதிவை
இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை
ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும்
சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
சனி 30, நவம்பர் 2024
No comments:
Post a Comment