Sunday, November 3, 2024

 

 

அபிராமி அந்தாதி -21

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

சனி, நவம்பர் 2, 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை இருபது  பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் இருபத்தொன்றாவது பாடலைப் பார்ப்போம்.

முந்தைய இருபதாவது பாடலில் பூரணாசல மங்கலையே என்று சொல்லி முடித்தார்.அந்தப் பாடலில் அம்பாள் உறையும் இடங்களை எல்லாம் சொன்னார்.என்பதைப் பார்த்தோம்.

இன்று இருபத்தொன்றாவது பாடலில் அம்பாளின் அங்க அழகையும் வண்ணங்களையும் விவரிக்கின்றார்

 

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள்,
வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள்,வெளியாள், பசும் பெண்கொடியே.

பொருள்: 

மங்கலை –

மங்கல உருவானவளே. என்றும் சுமங்கலியே.


செங்கலசம் முலையாள் –

செம்மையான கலசம் போன்ற ஸ்தனங்களை உடையவளே

.
மலையாள் –

மலைமகளே. இமயத்தரசன் மகளே.


வருணச் சங்கு அலை செங்கைச் சகலகலாமயில் –

வருணனின் இருப்பிடமான கடல் தந்த சங்குகளால் ஆன வளையல்கள் அணிந்து அவை அங்கும் இங்கும் அலையும் செம்மையான கைகளை உடைய எல்லா கலைகளும் அறிந்த மயிலே


தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் –

பாய்கின்ற கங்கையின் பொங்குகின்ற அலைகள் தங்கும் மேல்தூக்கி முடித்த சடையை உடையவனின் பகுதியானவளே.


உடையாள் –

எல்லோருக்கும் தலைவியே. எல்லோரையும் எல்லாவற்றையும் உடையவளே.


பிங்கலை –

பொன்னிறத்தவளே.


நீலி –

நீல நிறத்தவளே. கரு நிறத்தவளே.


செய்யாள் –

சிவந்தவளே.


வெளியாள் –

வெண்மை நிறம் கொண்டவளே.


பசும் பெண்கொடியே –

 பச்சை நிறம் கொண்ட பெண் கொடியே.

உரை: 

நித்திய மங்கலையாகிய அபிராமி தேவி, சிவந்த கலசத்தைப் போன்ற தனபாரங்களை உடையவள்; மலைமகள்; நிறம்பெற்ற சங்காலாகிய வளைகள் அசைகின்ற சிவந்த திருக்கரங்களையுடைய, எல்லாக் கலைக்கும் தலைவியாகிய மயில் போன்றவள்; பாய்கின்ற கங்கையின் மேலெழும் அலைகள் அடங்கித் தங்குதற்குரிய புரிந்த சடையையுடைய சிவபிரானது வாம பாகத்தை ஆட்கொண்டவள்; பொன் நிறம் படைத்த பிங்கலை; நீலநிறம் படைத்த காளி; செந்நிறம் பெற்ற லலிதாம்பிகை; வெண்ணிறம் பெற்ற வித்தியாதேவி; பச்சை நிறம் பெற்ற உமாதேவி.

அம்பிகை பஞ்ச வர்ணங்களையும் உடையவளென்று ஈற்றடியிற் கூறினார்.

பிங்கலை; ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில் அமர்ந்திருக்கும் காகினி என்னும் அம்பிகையின் திருக்கோலத் திருமேனி பொன்னிறமுடையது: ‘பீதவர்ணா’ (லலிதா.507); ” ஆயி சுந்தரி நீலி பின்கலை” (திருப்புகழ்).

நீலி;; மூலாதார சக்கரத்தில் ஐந்து முகத்தோடும் நான்கிதழ்த்தாமரையில் சாகினி என்ற திருநாமத்தோடும் கரிய நிறத்தோடும் எழுந்தருளியிருக்கும் அம்பிகையுமாம்.

செய்யாள்: திருமகளாக உள்ளவள் எனலும் ஆம்: டாகினி, லாகினி என்னும் திருநாமங்களோடு உள்ள அம்பிகையும் ஆம்.

வெளியாள்கலைமகளாக உள்ளவள் என்பதும் பொருந்தும். ஆக்ஞை என்னும் ஆதாரத்தில் ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகத்தோடும் ஹாகினி என்னும் பெயரோடும் எழுந்தருளியிருக்கும் அம்பிகை வெண்ணிறமுடையவளென்பர்;’சுக்ல வர்ண’ (லலிதா.522).

பசும் பெண் கொடி: அநாகதத்திலுள்ள ராகினியுமாம்.

விளக்கம்: 

அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

சனி, நவம்பர் 2, 2024

 

No comments:

Post a Comment