ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
புதன், நவம்பர்
6, 2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
இருபத்து இரண்டு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று
நாம் இருபத்து மூன்றாவது பாடலைப் பார்ப்போம்.
.முந்தைய இருபத்தி இரண்டாவது பாடலில் அம்பாள் கொடி போன்று
இருந்து தன்னை ஆட்கொண்தையும்,தனக்கு இனி பிறவா வரம் வேண்டும் என வேண்டுகின்றார்.
கொள்ளேன், மனத்தில் நின்
கோலம்அல்லாது, அன்பர்கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத் தேவிளைந்த
கள்ளே, களிக்கும்களியே, அளியஎன் கண்மணியே.
பொருள்:
கொள்ளேன் மனத்தில் நின் கோலம்
அல்லாது – உன் திருவுருவத்தை அன்றி வேறு உலக விதயங்களை என் மனத்தில்
கொள்ளேன்
அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் – உன் அன்பர்கள் கூட்டத்தை விலகமாட்டேன் (விலக்கமாட்டேன்)
பரசமயம் விரும்பேன் – உன்னைத் துதிப்பதன்றி உலக விதயங்களைத் துதிக்கும் பர சமயங்களை
விரும்ப மாட்டேன்.
வியன் மூவுலகுக்கு உள்ளே – மூன்று உலகங்களுக்கும் உள்ளே நின்று அனைத்தையும் இயக்குபவளே
அனைத்தினுக்கும் புறம்பே – இவற்றையும் தாண்டி இந்த பிரபஞ்சம் எல்லாம் தாண்டியும்
இருப்பவளே (அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவளே)
உள்ளத்தே விளைந்த கள்ளே – உள்ளத்தில் விளைந்த அமுதமே
களிக்கும் களியே – எல்லாவிதமான இன்பததையும் அனுபவிக்கும் ஆனந்தவடிவானவளே
அளிய என் கண்மணியே – எளியேன் மேல் கருணை கொண்ட என் கண்மணி போன்றவளே.
(உரை):
பரந்த மூன்று உலகத்துக்குள்ளும் உள்ள
பொருளே, ஆயினும் எல்லாப் பொருள்களுக்கும்
புறம்பே உள்ளாய், அடியார்கள் உள்ளத்தே முற்றி விளைந்த
இன்பமாகிய கள்ளே, அதனால் பிறவற்றை மறந்து ஆனந்த
வெறிகொண்டு மகிழும் மகிழ்ச்சியே, இரங்கத்தக்க என் கண்ணுள் மணிபோன்றாய், அடியேன் என் உள்ளத்தில் தியானம்
செய்யுங்கால் நின் திருக்கோலமல்லாத வேறொரு தெய்வத்தின் உருவத்தைச் சிந்தியேன், நின்னுடைய அன்பர்களுடைய கூட்டத்தைப்
பிரியேன்; பரசமயங்களை விரும்பேன்.
விளக்கம்:
அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை
மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப்
பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை விரும்ப
மாட்டேன். மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளேயும், யாவற்றினுக்கும் வெளியேயும்
நிறைந்திருப்பவளே! எம்முடைய உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும்
கள்ளே! ஆனந்தத்திற்கு ஆனந்தமானவளே! எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என்
கண்மணி போன்றவளே!
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
No comments:
Post a Comment