ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு, நவம்பர்
17, 2024
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
இருபத்து நான்கு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் இருபத்து
ஐந்தாவது பாடலைப் பார்ப்போம்.
பின்னே திரிந்து, உன்
அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே
தவங்கள் முயன்று கொண்டேன், முதல்
மூவருக்கும்
அன்னே, உலகுக்
கபிராமி என்னும் அருமருந்தே,
என்னே? இனி
உன்னை யான் மறவாமல் நின் றேத்துவனே.
பொருள்:
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி
பிறப்பு அறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்
உன் அடியவர்களின் பின்னால் திரிந்து
அவர்களை அடி பணிந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து என் பிறப்பிறப்புத் துன்பத்தை
அறுத்துக் கொள்ளும் பாக்கியத்தை பலகாலமாக செய்தத் தவங்களின் பயனால் அடைந்தேன்.
முதல் மூவருக்கும் அன்னே
முதல் மூவரான மும்மூர்த்திகளுக்கும்
அன்னையே!
உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
அபிராமி அன்னை என நிற்கும் உலகத்
துன்பங்களுக்கெல்லாம் கிடைத்தற்கு அரிய மருந்தே
என்னே
என்னே உன் பெருமைகள்.
இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே இனியும் உன்னை நான் மறக்காமல் தொழுது
கொண்டிருப்பேன்.
(உரை):
தலைமை பெற்ற மூன்று மூர்த்திகளுக்கும்
தாயே, உலகிலுள்ள உயிர்கள்
பிறவிப்பிணியினின்றும் நீங்க அபிராமி யென்னும் நாமத்தோடு எழுந்தருளியிருக்கும்
அரிய மருந்தே, நின் அடியார்களின் பின்னே அவரை வழிபட்டு
அவருடன் திரிந்து அவரை உபசரித்துப் பிறவிப் பிணியை அறுக்கும்பொருட்டு உபாயமாகிய
தவங்களை முற்பிறப்பிலே செய்துவைத்தேன்: உன்னை என்றும் மறவாமல் நிலையாக நின்று
துதிசெய்வேன்; இனி எனக்கு உளதாம் குறை யாது?
விளக்கம்:
அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும் கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே தவங்கள் பல முயன்று செய்து
கொண்டேன். அதற்காகவே நின் அடியார்கள் பின்
திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன். அம்மா! அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில் உன்னை மறவாமல் நல்வழி
நின்று வணங்குகின்றேன். இன்னும் வணங்கிக் கொண்டேயிருப்பேன்.
.
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு, நவம்பர்
17, 2024
No comments:
Post a Comment