Friday, November 29, 2024

 


 

அபிராமி அந்தாதி -29

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி 29 நவம்பர் 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை இருபத்து எட்டுபாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் இருபத்து ஒன்பதாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் அம்பாளின் கருனையினால் சித்தி ,பக்தி,முத்தி மற்றும் புத்தி யாவும் அம்பாளின் பேறருட்கருனையினால் கிடைப்பதை விளக்குகின்றார் அபிராமிப்பட்டர்

 

சித்தியும், சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும்பரா
சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தையன்றே.

பொருள்:

சித்தியும் –

எல்லா நலன்களும் கிடைக்கும் சித்தியும்

சித்தி தரும் தெய்வம்

அப்படி எல்லா சித்திகளையும் தரும் தெய்வமாக

ஆகித் திகழும் பராசக்தியும் 

விளங்குகின்ற பராசக்தியும்

சக்தி தழைக்கும் சிவமும் 

பராசக்தியாகிய உன்னிலிருந்து தழைக்கும் சிவமும்

தவம் முயல்வார்

தவம் புரிபவர்களுக்கு

முத்தியும்

இந்த பிறப்பிறப்பு என்ற சுழலில் இருந்து விடுதலையும்

முத்திக்கு வித்தும் 

அந்த விடுதலைக்கு காரணமும்

வித்தாகி முளைத்து எழுந்த

விடுதலைக்குக் காரணமாக மனத்தில் தோன்றிய

புத்தியும்

நினைவும்

புத்தியினுள்ளே

அந்த மனத்தின் உள்ளே

புரக்கும்

நின்று எல்லா எண்ணங்களையும் தோற்றுவித்துக் காக்கும்

புரத்தை அன்றே 

திரிபுரசுந்தரி தானே.

 

உரை

 அட்டமாசித்திகளும், அச் சித்திகளைத் தரும் தெய்வமாகி விளங்குகின்ற பராசக்தியும், சக்தியைத் தம்மிடத்தே தழைக்கச் செய்த பரமசிவமும், தவம் புரிவார் பெறும் மோக்ஷ ஆனந்தமும், அந்த முக்தியைப் பெறுவதற்கு அடியிடும் மூலமும், மூலமாகித் தோன்றி எழுந்த புத்தியாகிய ஞானமும் ஆகிய எல்லாமுமாக இருப்பவள், அறிவினுக்குள்ளே நின்று பாதுகாக்கும் திரிபுரசுந்தரியே ஆகும்.

விளக்கம்: 

அபிராமித் தேவி! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி 29 நவம்பர் 2024

 


No comments:

Post a Comment