Tuesday, November 26, 2024


 

அபிராமி அந்தாதி -26

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

செவ்வாய்  26, நவம்பர் 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை இருபத்து ஐந்து  பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் இருபத்து ஆறாவது பாடலைப் பார்ப்போம்.

ஏத்தும் அடியவர், ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்,கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே, மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடத்தே.

 

பொருள்:

 ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம் –                                                                                         

உன்னை என்றும் போற்றிப் புகழ்பவர்கள் யார் என்று கேட்டால் இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிகின்ற மும்மூர்த்திகளான பிரம்ம விஷ்ணு மஹேஸ்வரர்கள்.


கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே –                                                                     

மணம் கமழும் கடம்ப மாலையை கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் அழகில் சிறந்த தெய்வப்பெண்ணே!


மணம் நாறும் நின் தாளிணைக்கு –                                                              

 தேவர்களில் எல்லாம் சிறந்தவர்களான மும்மூர்த்திகளாலும் போற்றிப் புகழப்பட்டு அந்தப் புகழ் மணம் கமழும் உன் இணைத்தாள்களுக்கு

என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே –                                                                                                                               

என் நாவில் இருந்து தோன்றிய கீழான சொற்கள் புகழ்ச்சியாகப் போனது நல்ல நகைச்சுவை.

(உரை): 

மணம் வீசும் கடம்ப மலரை அணிகின்ற கூந்தலையுடைய தேவி, நின்னைத் துதிக்கும் அடியவர்களோ, ஏழு உலகங்களையும் படைத்தும் பாதுகாத்தும் சங்காரம் செய்தும் தம் தொழிலை நடத்தித் திரிகின்ற மும்மூர்த்திகளாவர்; அங்ஙனம் இருப்பவும் நின்னுடைய மணம் பொருந்திய இரண்டு திருவடிகளுக்கு ஒன்றுக்கும் பற்றாத அடியேனுடைய நாவில் தங்கிய பொருளற்ற மொழிகளும் துதிகளாக ஏற்றுக்கொள்ளப் பெற்று, ஏற்றம் பெற்றது நகைத்தற்குரிய செயலாகும்.

விளக்கம்:

 பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

செவ்வாய்  26, நவம்பர் 2024 

No comments:

Post a Comment