Thursday, November 28, 2024

 


 

அபிராமி அந்தாதி -27

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன்  27, நவம்பர் 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை இருபத்து ஆறுபாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் இருபத்து ஏழாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் பட்டர் இந்த பிறவியாகிய பெரும் கடலை நீந்தும் வழியை அம்பாள் தமக்கு அருளிய்தை சொல்லுகிறார்

 

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

 

பொருள்

உடைத்தனை வஞ்சப்பிறவியை                                                                                   

என்னை வஞ்சிக்கும் ஆறுவித எதிரிகளான ஆசை, சினம், மயக்கம், பேராசை, செருக்கு, வெறுப்பு ஆகியவற்றை அழித்து அவற்றால் தோன்றிய பிறவிப் பிணிப்பை உடைத்தாய்.


உள்ளம் உருகும் அன்பு படைத்தனை –                                                             

 உன்னையும் உன் அன்பையும் எண்ணி எண்ணி உருகும் அன்பினை என்னுள் உண்டாக்கினாய்    

.
பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை –                                                   

தாமரை போன்றை உன் இரு திருவடிகளையே பணிந்து கொண்டிருக்கும் பணியே பணியாய் எனக்கு அளித்தாய்.


நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை என் உள்ளத்தே இருந்த அழுக்குகளை எல்லாம் உன் அருள் எனும் நீரால் துடைத்தாய்.


சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே –                                                         

அழகியே! இப்படி அடியேனை தானாக வந்து ஆட்கொண்ட உன் அருளை என்னவென்று புகழுவேன்?

உரை: 

பேரழகியே, அடியேனது கன்மத்தால் வந்த பிறவியைத் தகர்த்தாய்; என் உள்ளம் உருகும்படியான அன்பை அவ்வுள்ளத்திலே உண்டாக்கினை; தாமரை போன்ற இரண்டு திருவடிகளைத் தலையால் வணங்கும் தொண்டை எனக்கென்றே ஒப்பித்தாய்; அடியேனது நெஞ்சில் இருந்த ஆணவம் முதலிய அழுக்கை எல்லாம் நினது கருணையாகிய தூய நீரால் போக்கினை; இங்ஙனம் செய்த நின் திருவருட் சிறப்பை அடியேன் என்னவென்று எடுத்துப் பாராட்டுவது!

ஆனந்தாதிசயத்தால் காரியத்தை முன் வைத்தும் காரணத்தைப் பின் வைத்தும் பேசுகிறார். பிறவி இனி இல்லை என்ற துணிபுபற்றி உடைத்தனை என்றார். அப்பிறவி தீர்வதற்குக் காரணம் உள்ளம் உருகும் அன்பு; அவ்வன்பு உண்டாவதற்குக் காரணம் நெஞ்சிலுள்ள அறியாமை முதலியன அவளருளாலே நீங்குதல். பலகாலும் படிந்த அழுக்கை மெல்ல மெல்ல நீரால் கழுவுதல்போலத் தன் திருவடித் தொண்டு புரிய வைத்தற்கு முன் மெல்ல மெல்ல நெஞ்சத்து அழுக்கைப் போக்கத் திருவருள் நீரைப் பெய்தாளென்றார். தாள் பணியவும் அருள் வேண்டுமென்பது, “அவனரு ளாலே அவன்றாள் வணங்கிஎன்னும் திருவாசகத்தாற் பெறப்படும்,

விளக்கம்:

 அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய். பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன்  27, நவம்பர் 2024

 


No comments:

Post a Comment