Tuesday, November 12, 2024

 

 

அபிராமி அந்தாதி -24

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

செவ்வாய், நவம்பர் 12, 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை இருபத்து மூன்று  பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் இருபத்து நாலாவது பாடலைப் பார்ப்போம்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணிபுனைந்த
அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே,
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

பொருள்: மணியே மாணிக்க மணியே!
மணியின் ஒளியே – மாணிக்க மணியின் ஒளியே!
ஒளிரும் மணி புனைந்த அணியே ஒளி வீசும் அந்த மாணிக்கங்கள் இழைத்த அணிகலனே!
அணியும் அணிக்கு அழகே – அணியும் அந்த அணிகலனுக்கு அழகாகத் திகழ்பவளே!
அணுகாதவர்க்குப் பிணியே – நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!
பிணிக்கு மருந்தே – உன்னை வணங்குபவர்களுக்கு அவரவர் வினைப்பயனால் ஏற்படும் பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகி நிற்பவளே!
அமரர் பெருவிருந்தே – அமரர்கள் என்றும் வணங்கி ஏத்தி மகிழும் படி அமைந்தவளே!
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே உன் திருமலர்ப் பாதங்களைப் பணிந்த பின் வேறெந்த உலக இன்பத்தையும் வேண்டி நில்லேன்.


(உரை):

 மாணிக்கம் போன்றாய், அம் மாணிக்க மணியின்கண் உள்ள பிரகாசம் போன்றாய், விளங்குகின்ற மாணிக்கங்களால் அழகுபெறச் செய்யப்பெற்ற ஆபரணம் போன்றாய், நின் திருமேனியின்கண் அணியப்படுகின்ற மணிகளுக்கு அழகாயிருப்பாய், நின்னை அணுகாமல் வீணே பொழுது போக்குவர்களுக்கு நோய் போன்றாய், நின்னை அணுகிய அடியவர்களது பிறவி நோய்க்கு மருந்து போன்றாய், தேவர்களுக்குப் பெரிய விருந்து போன்றாய், அடியேன் நின்னுடைய தாமரை போன்ற திருவடிகளை வணங்கிய பின்னர் வேறு ஒருவரைப் பணியேன்.

 

விளக்கம்:

 அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே, வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

செவ்வாய், நவம்பர் 12, 2024

 

No comments:

Post a Comment