Thursday, January 16, 2025


அபிராமி அந்தாதி-46

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழன், ஜனவரி  16,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை நாற்பத்து ஐந்து பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் நாற்பத்து ஆறாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் பட்டர் அம்பாளின் பேரருட் கருணையை எண்ணுகிறார். லோகமாதா தன்னுடைய குறைகளையும் குற்றங்களையும் மறந்து தனை ஏற்றுக்கொண்டு அருளவேண்டும் என் வேண்டுகின் றார்

வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம்அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே,
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவனே.

வெறுக்கும்

தாங்கள் வெறுக்கக் கூடிய

தகைமைகள் செய்யினும்

செயல்களை மற்றோர் செய்தாலும்

தம்அடியாரை மிக்கோர்

பெரியவர்கள் தம் அடியார்களைப்

பொறுக்கும் தகைமை

பொறுக்கும் பெருமை

புதியது அன்றே

புதியதல்லவே

புது நஞ்சை உண்டு

புது ஆலஹாலத்தை உண்டு அதனால்

கறுக்கும் திருமிடற்றான்

கண்டம் கருத்த நீலகண்டனின்

இடப்பாகம் கலந்த

இடப்பாகம் உறையும்

பொன்னே,

திர்ச்செல்வமான பெண்னே

மறுக்கும் தகைமைகள்

நீ மறுக்கும் செய்ல்களை

செய்யினும், யான்

நான் செய்தாலும்

உன்னை வாழ்த்துவனே.

உனை வாழ்த்தி வணங்குவேனே

 

உரை 

 புதிய ஆலகால விடத்தை நுகர்ந்து கறுத்த திருக்கழுத்தை உடைய சிவபிரானது வாமபாகத்தில் பொருந்திய பொன்னிற மேனிப் பிராட்டியே, தாம் வெறுப்பதற்குரிய இயல்பினவாகிய செயல்களைத் தம் அடியவர்கள் செய்தாலும் அவர்களை அறிவினால் மிக்க பெரியோர்கள் பொறுத்தருளும் இயல்பு இவ்வுலகத்தில் இன்று நேற்று வந்த புதிய வழக்கம் அன்றே? ஆதலால் நீ ஏற்றுக்கொள்ளாது விலக்கும் இயல்புடைய காரியங்களை அடியேன் செய்தாலும், (அவற்றை நீ பொறுத்தருள்வாய் என்ற தைரியத்தால் மீட்டும்) நின்னை வாழ்த்தித் துதிப்பேன்.

பொன்னே: அம்பிகை பொன்னிறமுள்ள திருக்கோலத்தோடும் காகினி யென்னும் திருநாமத்தோடும் ஸ்வாதிஷ்டானத்தில் எழுந்தருளி யிருப்பாளென்பர்: “பீதவர்ணா” (லலிதா, 507). மறுக்கும் தகைமைகள் என்பதைத் தேவி செயலாகக் கோடலும் ஒன்று; நீ மறுத்தாலும் நான் விடேனென்றபடி: “துடைக்கினும் போகேன்” (தேவாரம்).

 

விளக்கம்:

 அபிராமித்தாயே!

விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழன், ஜனவரி  16,  2025


No comments:

Post a Comment