ஓம்
நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
சனிக் கிழமை, ஜனவரி 25,
2025
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
ஐம்பத்து இரண்டு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் ஐம்பத்து மூன்றாவது பாடலைப் பார்ப்போம்.
சென்ற
பாடலில் அம்பாளை தவமாகத் தொழுவோர்க்கு என்ன என்ன பேறுகள் எல்லாம் கிடைக்கும் என்று
சொன்னார். இந்த பாடலில் இவ்வுலகில் பிறந்துவிட்ட நாம் எவ்வாறு அம்மையைத் தொழவேண்டும்
என்று கூறுகிறார்
பொய்யுணர்வு நீங்க
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்,
பென்னம் பெரிய
முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத்
தன்னந்தனி
இருப்பார்க்கு, இது போலும் தவமில்லையே.
சின்னஞ் சிறிய |
உன் மெல்லிய |
மருங்கினில் |
சிற்றிடையில் |
சாத்திய |
அணிந்திருக்கும் |
செய்ய பட்டும், |
சிவந்த பட்டாடையும் |
பென்னம்பெரிய |
அழகிய பெரிய |
முலையும், |
மார்பகமும் |
முத்தாரமும், |
அதன்மேலாடும் முத்து
மாலையும் |
பிச்சிமொய்த்த |
வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூ அணிந்த |
கன்னங்கரிய |
கருத்த |
குழலும் |
கூந்தலும் |
கண் மூன்றும் |
மூன்று கண்களும் |
கருத்தில் |
உள்ளத்தில் |
வைத்துத் |
பதியவைத்து |
தன்னந்தனி |
மற்ற யாவையையும்
தவிர்த்து |
இருப்பார்க்கு, |
த்யானிப்போர்க்கு |
இது போலும் |
இதுபோன்ற |
தவமில்லையே. |
தவம் வேறெதுவுமில்லை |
பொருள்:
சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய
செய்யபட்டும் – உன் சின்னஞ்சிறிய இடையில்
அணிந்திருக்கும் சிவந்த பட்டாடையையும்
பென்னம்பெரிய முலையும் – உன் பெரிய தனங்களையும்
முத்தாரமும் – அந்த மார்பின் மேல் இருக்கும் முத்து மாலையையும்
பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும் – பிச்சிப்பூ சூடியிருக்கும் கரிய
கூந்தலும்
கண் மூன்றும் – மூன்று கண்களையும்
கருத்தில் வைத்துத் – மனத்தில் நிறுத்தி
தன்னந்தனியிருப்பார்க்கு – மற்ற எந்த நினைவுகளும் இன்றித்
தன்னந்தனியாக இருப்பவர்களைப் போல்
இது போலும் தவமில்லையே – தவத்தில் சிறந்தவர்கள் வேறு எவருமில்லை.
உரை:
தேவி மிகச் சிறிய தன் திருவிடையிலே
சாத்திய சிவந்த பட்டாடையையும், மிகப் பெரிய நகிலையும், அவற்றின்மேல் அணிந்த முத்து மாலையையும், பிச்சிமலர் நெருங்கிய மிகக் கரிய
கூந்தலையும், மூன்று கண்களையும் தம் சிந்தையிலே
தியானித்துத் தணித்திருந்து யோகம் செய்வாருக்கு இங்ஙனம் தியானிக்கும் செயலையன்றி
வேறு பயனுடைய தவம் ஒன்றும் இல்லை.
விளக்கம்:
அபிராமித்தாயே! மென்மையான இடையில், செம்மையான பட்டணிந்தவளே! அழகிய பெரிய தனங்களில் முத்தாரம் அணிந்தவளே! வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில்
சூடியவளே! ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே! உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு
தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
சனிக் கிழமை, ஜனவரி 25,
2025
No comments:
Post a Comment