ஓம்
நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
செவ்வாய்க் கிழமை, ஜனவரி 21,
2025
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
நாற்பத்து ஒன்பது பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் ஐம்பதாவது பாடலைப் பார்ப்போம்.
இந்த
பாடலில் பட்டர் அம்பாளின் ஆயிரக் கணக்கான நாமங்களில்
பதினொரு நாமங்களை குறிப்பிட்டு அவைகளை விளக்கி அத்தன்மையான அம்பாள் நமக்கு பேர ருள்
புரிய வேணும் என வேண்டுகிறார்.
50.
அம்பிகையை நேரில் காண
நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம் அரண்நமக்கே.
நாயகி, |
உலகின் தலைவி |
நான்முகி, |
நான்முகனின் சக்தி |
நாராயணி, |
திருமாலின் சக்தி |
கை நளின |
தாமரை கரங்களில் |
பஞ்சசாயகி, |
ஐந்து மலரம்புகள் கொண்டவள் |
சாம்பவி, |
சம்புவான சிவபெருமானின் சக்தி |
சங்கரி, |
இன்பம் அருள்பவள் |
சாமளை, |
கரும் பச்சை வண்ணமுடையவள் |
சாதி நச்சுவாய் |
கொடிய நச்சுவாய்ப் பாம்பை |
அகி மாலினி, |
மாலையாய் அணிந்தவள் |
வாராகி |
உலகம் காக்கும் வராக ரூபினி |
சூலினி, |
திரி சூலம் கைக்கொண்டவள் |
மாதங்கி |
மாதங்க முனிவரின் திருமகள் |
என்றுஆய |
என்று பலவிதமான் |
கியாதி |
புகழ்ப் பெருமை |
உடையாள் |
உடைய அபிராமி அன்னையின் |
சரணம் |
திருவடிகளே |
அரண்நமக்கே. |
என்றும் நமக்குத் துணை |
பொருள்:
நாயகி – உலகனைத்துக்கும் தலைவி
நான்முகி – நான்முகனான பிரம்மதேவரின் சக்தி
நாராயணி – நாராயணனின் சக்தி
கை நளின பஞ்ச சாயகி – தாமரை போன்ற திருக்கரங்களில் ஐந்து
மலரம்புகளைத் தாங்கியவள்
சாம்பவி – சம்புவான சிவபெருமானின் சக்திசங்கரி – இன்பம் அருள்பவள்
மாலினி – பலவிதமான மாலைகளை அணிந்தவள்
வாராகி – உலகங்கள் காக்கும் வராக ரூபிணி
சூலினி – திரிசூலம் ஏந்தியவள்
மாதங்கி – மதங்க முனிவரின் திருமகள்
என்று ஆய கியாதி உடையாள் சரணம் அரண்
நமக்கே – என்று பலவித புகழ்களை உடையவளின்
திருப்பாதங்கள் நமக்கு காவலாகும்.
சாதி நச்சு வாய் அகி – கொடிய நச்சினை வாயில் உடைய பாம்பை
அணிந்தவள்
(உரை):
ஈசுவரி, நான்கு முகங்களை உடையவள், நாராயணி, கைத்தாமரையில் ஐந்து மலரம்புகளைத்
தரித்தவள், சம்புவின் மனைவி, சங்கரி, சாமளை, நஞ்சை வாயிலே உடைய நல்ல சாதிப் பாம்பை
மாலையாக உடையவள், வாராகி, சூலினி, மாதங்கி என்று ஆகிய புகழை உடையவளாகிய அபிராமியின்
திருவடிகள் நமக்குப் பாதுகாப்பாம்.
அம்பிகையே, பிரமாவிடத்தும், திருமாலிடத்தும் இருந்து சிருட்டி, ஸ்தி தியாகிய தொழிலை நடத்துதலின்
நான்முகியென்றும் நாராயணி யென்றும் கூறினர். பிரம்ம சக்தியைப்பிராம்மி என்றும், விஷ்ணு சக்தியை வைஷ்ணவியென்றும் கூறுவர். நான்முகி-காகினியென்னும் அம்பிகையின் மூர்த்தி
யெனலுமாம்; ஸ்வாதிஷ்டானத்தில் ஆறிதழ்த் தாமரையில்
காகினியென்னும் திருநாமத்துடன் பொன்னிறம் பூண்டு நான்கு முகங்களோடு அம்பிகை
வீற்றிருப்பதாகக் கூறுவர் யோக நூலார்; ‘சதுர்வக்த்ர மனோஹரா” (லலிதா. 505).
நாராயணி: ஸுபார்கவமென்னும் தலத்தில்
எழுந்தருளியிருக்கும் தேவியின் திருநாமம் என்பர்; நாராயணன் தங்கையுமாம்.
சாம்பவி-சம்புவின் சக்தி, சங்கரி-இன்பத்தை உண்டாக்குபவள். சாமளை-சாமள நிறம் பொருந்தியவள், அது ஒருவகைப் பச்சை நிறம். அகி – பாம்பு. அம்பிகை பாம்பை ஆபரணமாக உடையவள்; “சோதி படலசூடி காகோடி பணிமதாணி மார்பாளே” (தக்க.105); ” நாக பூஷணத்தி யண்டம் உண்ட நாரணி” (திருப்புகழ்).
வாராகி; 88: விஷ்ணு சக்தி வகையில் ஒன்று. அம்பிகையின் அமிச சக்திகளுள் தண்டினி
என்னும் பெயருடையவள். த்ரிபுரா சித்தாந்தமென்னும் நூல், ‘பராசக்தி வராகானந்த நாதர் என்பவருக்கு
வராகத் திருமுகத்துடன் தரிசனம் தந்தமையின் வாராகி யென்னும் பேர் பெற்றாள் என்று
கூறும். தமிழில் வாராகியை 32 செய்யுட்களால் துதிக்கும் மாலை ஒன்று
உண்டு. சூலினி – திரிசூலத்தைத் தரித்தவள் : 77.
மாதங்கி: மதங்கமுனிவரின் குமாரி; யாழ்ப்பாணர்களாகிய மதங்கர் குலத்துப்
பெண்ணாகத் தோன்றியவளெனலுமாம் (70); “மாதங்கி வேதஞ்சொல் பேதைனெடு நீலி” (திருப்புகழ்.) கியாதி – புகழ்.
விளக்கம்:
ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக்
கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல
வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
செவ்வாய்க் கிழமை, ஜனவரி 21, 2025
No comments:
Post a Comment