Friday, January 24, 2025

அபிராமி அந்தாதி-52

 

 

அபிராமி அந்தாதி-52

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளிக் கிழமை, ஜனவரி  24,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை ஐம்பத்து ஒரு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் ஐம்பத்து இரண்டாவது  பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் பட்டர்  அம்பாளைத் தொழுது அவளின் அருளைப் பெற்ற அடியார்கள் இப்பூவுலகில் பெறும் பேறுகளும் செல்வங்களையும் பற்றி விளக்குகின்றார்

இம்மையில் பெருஞ்செல்வம் அடைய

வையம், துரகம், மதகரி, மா மகுடம்,சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவம்உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

வையம்

ஆளுவதற்கு பெரிய பூமி

துரகம்

குதிரைப்படை

மதகரி,

யானைப்படை

மா மகுடம்

உயர்ந்த மணிமுடி

சிவிகை

தந்தப்பல்லக்கு

பெய்யும் கனகம்,

சிற்றரசர்கள் பெய்யும் கப்பம்

பெருவிலை ஆரம்,

விலை மதிப்பில்லா மணி மாலைகள்

பிறை முடித்த

முடியில் பிறையணிந்த

ஐயன்

சிவபெருமானின்

திருமனையாள்

மனையாளான அன்னையின்

அடித் தாமரைக்கு

தாமரைத் திருவடிகளுக்கு

அன்பு முன்பு

முற்பிறவியில் பக்தி

செய்யும் தவம்

ரெய்யும் பாக்கியம்

உடையார்க்கு

பெற்றவர்கள்

உளவாகிய

பெறுகின்ற

சின்னங்களே

அடையாளச் சின்னங்களாகும்

 

 

பொருள்:

 வையம் – ஆளுவதற்குப் பெரும் பூமி
துரகம் – ஏறி ஊரையும் நாட்டையும் வலம் வர அழகிய குதிரைகள்
மதகரி – பெரிய பெரிய யானைகள்
மாமகுடம் – உயர்ந்த மணிமுடிகள்
சிவிகை – அழகிய பல்லக்கு
பெய்யும் கனகம் – சிற்றரசர்கள் வந்துப் பணிந்து, கப்பமாகக் கொட்டும் தங்கம்
பெருவிலை ஆரம் – விலை மதிப்பு வாய்ந்த மணி மாலைகள்
பிறை முடித்த ஐயன் திருமனையாள் – நிலாத்துண்டைத் திருமுடியில் சூடிய ஐயனின் மனையாளாகிய அன்னையின்
அடித் தாமரைக்கு – திருவடித்தாமரைகளுக்கு
அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு – பக்தி முன்பொரு நாள் செய்யும் பாக்கியமுடையவர்களுக்கு
உளவாகிய சின்னங்களே – கிடைக்கும் அடையாளங்கள். இவையெல்லாம் பேரரசர்களின் சின்னங்கள். அன்னையைப் பணியும் பாக்கியம் பெற்றவர்கள் பேரரசர்கள் ஆவார்கள் என்பது பாடலின் பொருள்.

உரை 

தேர், குதிரை, மதம்மிக்க களிறு, பெரிய கிரீடம், பல்லக்கு, பிற மன்னர்கள் திறையாக வழங்கும் பொன், மிக்க விலையையுடைய பொன்னாரம், முத்துமாலை என்பன பிறையைத் திருமுடிக்கண் சூடிய சிவபெருமானுடைய அழகிய பத்தினியாகிய அபிராமியின் திருவடித்தாமரைக்கு, முன் பிறவிகளின் அன்பு செய்த தவமுடைய அடியார்களுக்கு உண்டாகிய அடையாளங்களாம்.

தேவியை முற்பிறப்பில் வழிபட்டவர்கள் இந்தப் பிறப்பில் சக்கரவர்த்திகளாகத் திகழ்வரென்பது கருத்து.

விளக்கம்:

 , அபிராமி தாயே உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே! கேள்: வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் இவையே நின் திருவடிச் சின்னம்!

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளிக் கிழமை, ஜனவரி  24,  2025

 


No comments:

Post a Comment