ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
சனிக்கிழமை, ஜனவரி 18,
2025
ஆன்மீக
அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை
நாற்பத்து ஆறு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் நாற்பத்து ஏழாவது பாடலைப் பார்ப்போம்.
இந்த
பாடலில் பட்டர் அழிவற்ற இன்பவாழ்வினை அருளும் அம்பாளின் பேறருட் கருணையை அவரின் திருவ்ருளினால்
தான் உணர்ந்த தையும் இந்த பாடலில் விளக்குகிறார்
48.
உடல் பற்று நீங்க
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப்
பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து
இமைப்போதிருப்பார், பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும்
குருதியும் தோயும் குரம்பையிலே.
சுடரும் கலைமதி |
ஒளிவீசுகின்ற அழகிய
நிலாவின் |
துன்றும் |
பிறையின் துண்டை |
சடைமுடிக் குன்றில் |
சிறுகுன்றுபோலான சடையுடைய |
ஒன்றிப்படரும் |
சிவபெருமான் மீது பட்ரும் |
பரிமளப் பச்சைக் |
மணம் மிகுந்து பச்சைவண்ணக் |
கொடியைப் |
கொடிபோன்ற உமையை |
நெஞ்சில் பதித்து |
மனதில் நிலையாகக் கொண்டு |
இடரும் தவிர்த்து |
இன்ப துன்பங்களைத்
தவிர்த்து |
இமைப்போதிருப்பார் |
இமைப்பொழுதேனும் த்யனிப்பவர்கள் |
பின்னும் |
மீண்டும் |
குடரும் கொழுவும்
குருதியும் |
குடலும் கொழுப்பும்
ரத்தமுமான |
தோயும் குரம்பையிலே |
இந்த மானிட உடலை |
எய்துவரோ |
எய்த மாட்டர்கள் |
பொருள்: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் – சுடர் வீசும் நிலாத்துண்டு தங்கி வாழும் சடைமுடியை உடைய சிறு
குன்று போன்ற சிவபெருமானின் மேல்
ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் – ஒன்றிப் படர்கின்ற மணம்வீசும் பச்சைக் கொடியைப் போன்ற அம்மையை
பதித்து நெஞ்சில் – மனத்தில் நிலையாகக் கொண்டு
இடரும் தவிர்த்து – இன்ப துன்பங்கள் என்ற இடர்களைத் தவிர்த்து
இமைப்போது இருப்பார் – இமைப்பொழுதாகிலும் தியானத்தில் இருப்பார்
பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும்
குரம்பையிலே – குடலும் இறைச்சியும் குருதியும் தோயும் இந்த உடம்பை மீண்டும்
எய்துவார்களா? மாட்டார்கள்.
பிரகாசிக்கும் கலைகளையுடைய பிறை பொருந்திய சடையோடு கூடிய திருமுடியையுடைய மேருமலை போன்ற சிவபெருமானோடு இணைந்து படர்கின்ற மணமுள்ள பசுங்கொடியாகிய அபிராமவல்லியைத் தம் நெஞ்சில் தியானித்து, அதனால் துன்பம் நீங்கி, இமைக்கும் ஒரு கணப்போதாவது பரமானந்த நிலையில் இருப்பவர்கள், மீட்டும் குடருன் நிணமும் இரத்தமும் சேர்ந்த கூடாகிய தேகத்தை அடைவார்களோ? அடையார்.
தேவியைத் தியானித்து இன்புற்றவருக்குப் பிறவி இல்லை யென்றபடி. சிவபெருமானைக் குன்றமென்றதற்கேற்ப அம்பிகையைக் கொடி என்றார்; “பங்கையோர் தமனிய மலைபடர் கொடியென வடிவு தழைந்தாய்” (மீனாட்சி. செங்கீரை. 101). பரிமளப் பச்சைக் கொடி: 15, குறிப்பு.
விளக்கம்:
ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
சனிக்கிழமை,
ஜனவரி 18, 2025
No comments:
Post a Comment