Monday, April 29, 2024

 


215 அப்பர் கண்ட காட்சி 

 திருநாவுக்கரசர் படைத்த எல்லா பதிகங்களும் சொல்லற்கன்னா அழகும் பொருட்செறிவும் அருள்வளமும் பக்திப் பெருக்கும் சுவையும் மிகுந்தவையாகும்

இந்த திருவயாற்றுப் பதிகத்தில் அவர் இறைவனை கைலாயத்தில் சென்று காணமுடியாத நிலையில் அவர் இறைவனாலேயே ஆற்றுப் படுத்தப் பெற்று திருவையாற்றில் இரைவனைக் கண்ட அன்பவத்தையும்,உலகின் சகல ஜீவராசிகளும் தம் துணையுடன் அங்கு வந்து ஈஸனைக் காணும் பெற்ற பேற்றினையும் இந்த பதிகத்தில் பாடுகிறார்

படித்து மகிழ்ந்து ஈஸனருள் பெற்றுய்யுங்கள்

சிவதாஸன் ஜகன்நாதன்


 

திருநாவுக்கரசர் தேவாரம் 

திருவையாறு

நான்காம் திருமுறை  பதிகம்: [4:3] 

முன்னுரை: 

"அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க விரும்பினார். நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு பெரியவர் அங்கே தோன்றி, "அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச் செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்" என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர் திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும் சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெடையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன; பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து நடந்து சென்றன. இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார். "இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை" என்று உணர்ந்தார். இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "கண்டறியாதன கண்டேன்!" என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்."

பாடல் எண் : ௧


மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :

 

விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர் பின் சென்ற அடியேன் . கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு , கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில் , விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு , அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் , சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன்

அடுத்த பதிவில் இந்தப் பதிகத்தின் இரண்டாவது பாடலுடன் சந்திப்போம்

சிவதாஸன் ஜகன்நாதன்

 



No comments:

Post a Comment