Friday, June 30, 2023

 


 

 

இந்துத்துவம் என்னும் ஆன்ம சாதனை

சிவதாஸன் ஜகன்நாதன்

சுந்தரமூர்த்தி நாயனார் தன்னுடைய கண்ணொளிப் பதிகத்தில் கீழ்வரும் அழகிய பாஃடலைப் பாடியுள்ளார்

 

எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத் துள்கி உகந்து உமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

சுந்தரர் தேவாரம் (ஏழாம் திருமுறை, திருக்கச்சி ஏகம்பம்)

எள்கல் இன்றி தானே சிவனின் உடலில் பாதியாக இருப்பதால் அவனை வழிபட அவளுக்கு தேவை இல்லை என்ற எள்ளுதல் இல்லாமல்.

ஈசனை வழிபாடு செய்வாள் போல அவளுக்கு ஒரு தேவையுமில்லை என்பதால் அவள் ஏதோ வரம் வேண்டி ஈசனை வழிபாடு செய்வது போல இருப்பினும் (அவ்வாறன்றி)

உள்ளத்துள்கி உகந்து உமை நங்கை உமை நங்கை வரம் ஏதும் வேண்டாமல், அன்பு மட்டுமே பூண்டு உள்ளத்துக்குள் உருகி உகந்து அக வழிபாடு செய்து அதன் பின்

வழிபட சென்று நின்றவா கண்டு புறத்தேயும் வழிபட லிங்க உருவில் நின்று அவ்வழிபாட்டின் அன்பு நிலையை உலகோருக்கு உணர்த்துமாறு

வெள்ளம் காட்டி வெருட்டிட: கம்பையாற்றில் பெருவெள்ளம் காட்டி அஞ்சும் சூழ்நிலையை ஏற்படுத்த

அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப் பட்ட கள்ளக் கம்பனை: தன்னிலும் பிரானை அன்பு செய்தமையால் சிவ லிங்கத்தை அணைத்த அம்பாளின் அன்பினால் மேலும் தன்னை மறைத்து நிற்க முடியாதவாறு தன்னை வெளிப்படுத்தியேயாக வேண்டியவனான கள்ளனாம் ஏகாம்பரேசுவரனான

எங்கள் பிரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே: எங்கள் சிவபெருமானை காணும் அருளை அருளி ஞானக் கண் காட்சியை எனக்கு எம்பெருமான் அருளினார்.


கொஞ்சம் வேதாந்தம், அதுவும் ஆங்கிலத்தில். இல்லை என்றால் மார்க்ஸிய வரலாற்று பிழை புரிதல். இது கிடைத்ததும் ஏனையோர் செய்யும் வழிபாட்டை எள்ளி நகையாடும் பலரை நாம் காணலாம்.

இதயத்துல கோவில் கட்டினாருங்கிறதால இனி எல்லாரும் இருதய நோய்க்குன்னு வழிபட வந்துடுவாங்க .. ஹி நம்மள மாதிரி ஞான மரபு தெரிஞ்சவன் இல்லை பாருங்கஆமா அது ஏன் சாம்பார் சாதத்துல மசாலா கொட்டியிருக்காய்ங்கசரியான சுவையாபாசம்…’ என்பது போன்ற ஞானமரபு ஆசாமிகள் உலவுகிற பூமி இது.

பல விஷயங்களுக்கு  பதில் சொல்வது போன்ற பதிகப் பாடல்.

சக்திக்கு அவனை வழிபட தேவை இல்லை. இருந்தாலும் அவனிடம் வரம் கேட்டு வழிபடுகிற இதர பக்தர்களை போல அவள் அவனை வழிபடுகிறாள்

அவளுக்கு ஒரு வரமும் தேவை இல்லை என்றாலும். சக்தியின் விமர்ச ரூபமே இக்காரண காரிய பிரபஞ்சம் என்பதை இங்கு மனதில் கொண்டால் இங்கு அம்பிகையின் வழிபாடு என்பதே அனைத்து பிரபஞ்ச இயக்கமும் என கொள்ளலாம்

உள்ளத்துள்கி உகந்துஎன்பதும் அவளை இங்கு உமை என ஓங்காரத்துடன் இயைந்த சக்தி திருநாமத்தால் சுந்தர மூர்த்தி சுவாமிகள் அழைப்பதும் அனைத்திலும் இரண்டற கலந்திருக்கும் சைதன்யத்தைக் காட்டுகிறது.

பொதுவாக புற வழிபாட்டிலிருந்து அக வழிபாட்டுக்கு செல்வது சாதனை பயில்வோர் வழக்கம். அன்னையோ அகவழிபாட்டின் முடிவில் புறத்தே இயற்கையிலிருந்தே உருவாக்கி வழிபடுகிறாள். உருவமாக இறையை வழிபடுவது பாமரர் செய்வது என பேசுவோருக்கு இதில் விளக்கம் இருக்கிறது.

வெள்ளம் வருகிறது. ஈசனே வெள்ளத்தை வர வைக்கிறான். ‘ஈசனும் நானே சிவலிங்கமும் வெள்ளமும் நானே எனவே எதிலிருந்து எதை காப்பதுஎன்றெல்லாம் வெத்து ஞானமரபுத்தனம் பேசி அன்னை விலகவில்லை

மாறாக தன்னைவிட மேலாக சிவலிங்கத்தை கருதி வெள்ளத்திலிருந்து அதைக் காப்பாற்ற அன்னை அதை அணைத்துக் கொள்கிறாள்.

என்றால் இன்றைக்கு நாம் பார்க்கும் சனதான தர்ம வெறுப்பு வெள்ளம், மதமாற்ற வெள்ளம் ஆகியவற்றிலிருந்து நம் சமுதாயத்தையும், ஆலயங்களையும் பாதுகாக்க நாம் எப்படிப்பட்ட தியாகத்துக்கு நம்மை தயார் செய்ய வேண்டும் என்பது சிவலிங்கத்தை கட்டி அணைக்கும் காமாட்சி அன்னையைக் காணும் போதெல்லாம் நம் நினைவுக்கு வர வேண்டும்.

இந்த முழுமையான அன்னியமின்மையான சிவாத்துவைத அன்பில் இன்னும் கரந்துறைய முடியாதவனாக வெளிப்படுகிறான் ஈசன்

ஈசன் வெளிப்படுகிறான் என்றால் என்ன? நம் கண்கள் மாயப்படல் கீறி திருவருள் பெற நாம் காணும் அதே காட்சிகள் சிவமயமாக மாறுகின்றன. அதே மரங்கள். அதே குருவிகள். அதே போக்குவரத்து நெரிசல். ஆனால் அனைத்தும் சிவப்பெருந்தன்மையை காட்டுகின்றன.

இக்காட்சி வேண்டின் இந்த அனுபவம் வேண்டின் நம் சிற்றுயிரினும் மேலாக இந்த தேசத்தின் மண்ணில் எழுந்த தர்மத்தை நேசிக்க வேண்டும். அபாய வெள்ளங்களை அது சந்திக்கும் போது நம் உயிரினும் மேலாக அதை நேசித்து நம் வாழ்வையே அதற்கு அர்ப்பணம் செய்ய தயாராக வேண்டும்

அப்போது அருள் நமக்கு கிட்டும். இதை எந்த தேவையும் இல்லாமல் சிவனின் பாதியாகவே இருக்கும் உமை அம்மை உணர்த்திய திருத்தலம் காஞ்சிபுரம்.

இந்துத்துவம் என்பது முழுமையான ஆன்ம சாதனை.

 

  

Tuesday, June 27, 2023

 


வாரம் ஒரு திருக்கோவில்

 

சிவதாஸன் ஜகன்நாதன்

 

 

நெடுங்குடி ஸ்ரீ கைலாசநாதர் கோவில் 

அருள்மிகு பிரசன்னநாயகி சமேத கைலாசநாதர் கோவில், நெடுங்குடி

சிவஸ்தலம்

ஸ்ரீ கைலாசநாதர் கோவில்

மூலவர்

கைலாசநாதர்

அம்மன்

பிரசன்னநாயகி

தீர்த்தம்

சர்ப்ப தீர்த்தம்

தல விருட்சம்

வில்வமரம்

புராண பெயர்

தென்கயிலை

ஊர்

நெடுங்குடி

மாவட்டம்

புதுக்கோட்டை

நெடுங்குடி கைலாசநாதர் கோவில் வரலாறு

காடு, மலை, வானந்தரங்களை கடந்து இமயமலையின் சிகரமான கயிலாயத்திற்குச் சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் முழுமுதற் கடவுளான சிவபெருமானைத் தரிசிக்க விரும்பும் சிவபக்தர்கள் அதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டாம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி அடர்ந்த வில்வ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அசுர குலத்தைச் சோர்ந்த பெருஞ்சீவி என்பவரின் ஆளுகைக்குட்பட்டது. சிவ பக்தனான பெருஞ்சீவி அஷ்ட மாசித்தி பெற வேண்டித் தினசரி காசியிலிருந்து ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வந்து 47 நாட்கள் பூஜை செய்து, 48-ஆம் நாள் கயிலாயமலையில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து பூஜையை நிறைவு செய்ய முடிவெடுத்தான். அதற்காக 400 அடி உயரத்தில் ஒரு மண் மலையை உருவாக்கி, அந்த சிவலிங்க பூஜையை தினசரி செய்து அதற்குப் பிறகு மற்ற கடமைகளில் ஈடுபட முடிவு செய்தான்.

அவன் சகோதரன் சிரஞ்சீவி அண்ணணுக்கு உதவியாக ஆகாய மார்க்கமாக காசியிலிருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்தது கொடுத்தான். பெருஞ்சீவி, அவன் முடிவு செய்தபடி மண்மலை மீது அந்த சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்தான். பூஜை முடிந்தவுடன் அந்த சிவலிங்கம் மறைந்து விடும். பெருஞ்சீவியின் மற்ற கடமைகள் தொடரும்.

இவ்வாறாக பெருஞ்சீவி, 47 நாட்கள் பூஜையை நினைத்தபடி நடத்தி முடித்தான். நாளையோடு பூஜை முடிகிறது என்ற சமயத்தில் கயிலைநாதன் இருவரின் பக்தியை சோதிக்க திருவுள்ளம் கொண்டார்.

தம்பி சிரஞ்சீவி சிவலிங்கம் கொண்டு வருவதை தாமதப்படுத்தினார். 48-ஆம் நாள் சிவலிங்கத்தை எடுத்து வர கயிலை மலைக்கு சென்ற சிரஞ்சீவி உரிய நேரத்தில் வந்து சேரவில்லை. நேரம் தவறினால் பலன் கிடைக்காது என்பதால் தம்பி வந்து சேராததால் பெருஞ்சீவி அந்த மண்மலையிலிருந்து மண்ணை எடுத்து கயிலை நாதனை மனதில் நினைத்து கையால் சிவலிங்கத்தை உருவாக்கினான் அதை மலை மீது பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தினான்.

 

அதற்கு கைலாசநாதர் என்று பெயரிட்டு அந்த மலைமீது ஆலையத்தையும், அருகில் ஒரு குளத்தையும் உண்டாக்கினான். அதற்கு சர்ப்ப தீர்த்தம் என்று பெயரிட்டான். கயிலைக்குச் சென்ற தம்பி சிரஞ்சீவி சிலிங்கத்துடன் தாமதமாக வந்தான். அண்ணன் கயிலை நாதனை உருவாக்கி பூஜை முடித்ததையறிந்து மனம் வருந்தித் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்து மீண்டும் பூஜை செய்யச் சொன்னான். பெருஞ்சீவி மறுத்ததால் ஆத்திரமடைந்து அண்ணன் உருவாக்கிய குன்றையும், கோவிலையும் அழிக்கும் எண்ணத்துடன் கயிலைநாதனை நோக்கி தவமிருந்தான்.

கயிலை நாதனும் இவ்விருவரின் முன்பாக தோன்றி, சிவலிங்கம் கொண்டு வர தாமதப்படுத்தினாலும், குறிப்பிட்ட நேரத்தில் பூஜையை முடித்த உறுதி என்னை மகிழ்வடையச் செய்கிறது. அதே சமயம் இதனால் ஏற்பட்ட போட்டி பொறாமையோடு அழிக்கும் எண்ணம் மேலோங்குதல் பக்தியை குன்றச் செய்யும் செயலாகும். எனவே இருவரும் சமாதனமடைந்து பெருஞ்சீவி பூஜித்த சிலிங்கத்திற்கு அருகில் சிறுஞ்சீவி கொணர்ந்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஒற்றுமையுடன் பூஜித்து பின் என்னிடம் வருக எனக்கூறி மறைந்தார்.

அசுரர்கள் காலம் முடிந்து ஆண்டுகள் பல கடந்து காடுகள் மறைந்து கிராமங்கள் தோன்றின. பெருஞ்சீவி உருவாக்கிய குன்றும் குளமும் கோவிலும் நிலைத்திருந்தன. அப்பகுதி மக்கள் அவரை வணங்கி வந்தனர். அவ்வழியாகச் செல்லும் பால்காரர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பாலை விற்பனை செய்து திரும்பும் போது மீதி பால் இருந்தால் கைலாசநாதருக்கு அபிஷேகம் செய்துவிட்டு போவார்கள். மறுநாள் அவர்கள் மீண்டும் அங்கு வரும்போது அவர்கள் அபிஷேகம் செய்த பாலுக்குரிய காசு கோவில் படியில் இருக்கும் இதனால் இவரை படிக்காசுநாதர் என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

திருப்பெறுந்துறையில் மாணிக்கவாசகர் கட்டிய ஆத்மநாதசுவாமி ஆலயத்தை விரிவுபடுத்தித் திருப்பணி செய்த பாண்டிய மன்னன் தன் பரிவாரங்களுடன் இந்த வழியாக திரும்பி மதுரைக்குச் சென்றபோது இந்த குன்றையும் கோவிலையும் பார்த்து வியந்தான். இப்பகுதி மக்களிடம் கேட்டபோது இத்தல வரலாற்றையறிந்து இதையும் திருப்பணி செய்து விரிவுபடுத்தத் திட்டமிட்டபோது சுவாமி சன்னதிக்கு அருகில் ஒரு ஒளி வட்டம் தோன்றி அருகில் அம்மன் சன்னதியை அமைக்கும்படியும், அதற்குப் பிரன்னநாயகிஎன்று பெயர் சூட்டும் படியும் அசரீரி எழுந்தது.

13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது. கர்ப்பகிரகம் அர்த்தமண்டபம், மகாமண்டபம், அம்மன் சன்னதி மற்றும் பரிவார தெய்வங்களும் கோபுரங்களும் எழுந்தன. பிரசன்னநாயகி சமேத கைலாசநாதர் தோன்றிய தல வரலாறு இதுதான்.

நெடுங்குடி கைலாசநாதர் கோவில் சிறப்புகள்

பாண்டிய மன்னர் கட்டியதால் மதுரை மீனாட்சி அம்மன் சமேத சோம சுந்தரேசுவர சுவாமி கர்ப்பகிரக சன்னதியின் வெளிப் பக்கத்தில் உள்ள 8 யானைகள் போல், இங்கு உள்ள அம்மன் சன்னதியைச் சுற்றி 8 யானைகள் உள்ளன. இந்த ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், குன்றுக்கும் சிறப்புடையதாக விளங்குகின்றனது.

 பிரார்த்தனை

இதனால் கணவன் மனைவி இருவரும் இங்கு வந்து ஒருநாள் தங்கியிருந்து சர்ப்பநதியில் நீராடி ஆலயத்தின் தேரோடும் வீதியில் 5 முறைவலம் வந்து பிரசன்ன நாயகிக்கும் கைலாச நாதருக்கும் அபிஷேக அர்ச்சனைகள் செய்து இறைவனை வணங்கி தீர்த்தம், விபூதி குங்கும பிரசாதங்கள் வாங்கிச் சென்றால் நாகதோஷம் நீங்கி பிள்ளைச் செல்வம் கிடைக்கும்.

மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் பெற்றோருடன் வந்து இதை செய்தால் திருமணம் உடனே நடக்கும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்த சன்னதி முன்னால் மண்டபத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட 12 ராசி சக்கரத்தின் நேர்கீழே தரையில் பதிக்கப்பட்ட பத்ம பீடத்தில் அமர்ந்து, ‘ஓம் நமச்சிவாயாஎன்ற மத்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். ஒருநாள் தங்கி இதேபோல் செய்தால் மனநிலை தெளிவாகும், சகஜநிலை ஏற்படும். தீராத மனக்கவலையும் தாங்க முடியாத பிரச்சனையும் உள்ளவர்கள் ஒருநாள் தங்கி இருந்து இதைச் செய்தால் தெளிவு பிறக்கும் மனக் கவலை தீரும்.

இந்திய துணைக்கட்ணத்திலேயே வேறு எந்த ஆலயத்திற்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இங்கு உண்டு அது இதுதான். மதுப்பழக்க்ததிற்கு அடிமையாகி அதிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றால் இங்கு வரவேண்டும். ஒருநாள் தங்கி இருந்து சர்ப்ப நதியில் நீராடி கைலாசதாதரை மனமுருக வணங்கினால், அந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மது அரக்கனை அழித்து புதுப்பிறவி எடுப்பார்கள். அந்த நினைவே வராது.

நீத்தார் கடன் செய்தவதற்கும் பித்ருகடன் செய்வதற்கும் சாப விமோசனம் செய்வதற்கும் ஏற்ற ஆலயம். 60-ஆம் ஆண்டு சாந்தி, 70-ஆம் ஆண்டு பீமரதசாந்தி, 75-ஆம் ஆண்டு பவள விழா, 80-ஆம் ஆண்டு சதாபிஷேகம், நவக்கிரக சாந்தி செய்வதற்கு ஏற்ற புண்ணிய ஸ்தலம்.

 

நேர்த்திக்கடன்

ஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியன்றும் மாஸசங்கரம பூஜை நடைபெறும். இந்த பூஜை காலத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருமணமாகாத பெண்கள், சுமங்கலிகள் மற்றும் ஜாதகத்தில் பித்ரு தோஷம், புத்திரதோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், மற்ற ஆண்களும், பெண்களும் அம்மனுக்கும், நாதருக்கும் அர்ச்சனை செய்து கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு நெய் தீபம் ஏற்றி மன ஒருமையுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வந்தால் சகல தோஷங்களும் நீங்கி மங்களம் உண்டாகும்.

 

நெடுங்குடி கைலாசநாதர் கோவில் திருவிழாக்கள்

1) சித்திரை தமிழ் வருடப்பிறப்பு அன்று சிறப்ப வழிபாடு.

2) வைகாசி விசாகத் திருவிழாவும் இத்திருவிழாவின் 9-ஆம் நாள் மணம்மலை மீது சுவாமி அம்மன் இரண்டுக்கும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது.

3) ஆனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை லெட்சார்ச்சனை நடைபெறும்.

4) ஆடி மாதம் – பூர நட்சத்திரத்தில் அம்பாளுக்குத் திருவிழாவும் திருக்கல்யாணமும் கடைசித் திங்கள் எம்மதத்தோரும் வழிபடும் வகையில் ஐயப்பன் கோவிலில் படி பூஜைநடப்பது போல் இந்த ஆலயத்திலும் படிபூஜை நடப்பது கண் கொள்ளாக் காட்சியாகும். அன்று மாலை 1008 குத்து விளக்கு பூஜையும் அன்று இரவு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வரும் நாடக நடிகர்கள் சங்கத்தார்களால் நடத்தப்படும் கலைவிழா முக்கிய நிகழ்ச்சியாக நடைபெறும்.

5) புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும்.

6) தை பொங்கல் சிறப்பாக நடைபெறும்.

7) மாசி மாதம் மகா சிவராத்திரி விழா நடைபெறும். அன்று தமிழ்நாட்டில் பல பகுதியில் இருந்து பழனி, திருச்செந்தூர், மேல்மருவத்துர், சபரிமலை போன்ற ஆலயத்திற்கு எப்படி காவி உடை உடுத்தி மாலை அணிந்து 48 நாட்கள் விரதமிருந்து பாதயாத்திரையாகச் செல்லுவது போல், இந்த ஆலயத்திற்கும் காவி உடை உடுத்தி, மாலை அணிந்து நடைப்பயணமாக வருகிறார்கள். அன்று இரவு நான்கு கால சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறும்.

8) மே தினத்தன்று தொழிலாளர்களால் நடத்தப்படும் அபிஷேக ஆராதனையும் சிற்பபு வழிபாடும் நடைபெறும்.

கோவில் திறக்கும் நேரம்: 

நெடுங்குடி அருள்மிகு பிரசன்னநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோவில் காலை 06:00 மணி முதல் 12:00 மணி வரையிலும், மாலை 04:30 முதல் 08:30 வரையிலும் திறந்திருக்கும்.

Poojai Timings: பூஜைகால விவரங்கள்

காலை சந்தி – 6:30 முதல் 9:00 மணிக்குள்
உச்சிக்காலம் – 11:30 முதல் 12:00 மணிக்குள்
சாயரச்சை – 5:30 முதல் 6:00 மணிக்குள்
அர்த்த ஜாமம் – 7:00 முதல் 7:30மணிக்குள்

அடுத்த வாரம் மீண்டும்பிறிதொரு சிறப்பான சிவாஅலயம் பற்றிய பதிவோடு மீண்டும் சந்திப்போம்

சர்வ ஜனோம் சுகினோ பவந்து

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்