Sunday, April 16, 2023

 


 

 

தமிழும் சமஸ்கிருதமும்

 

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று நான் இந்த சிறந்த கட்டுறையை வாசிக்கும் பேறு பெற்றேன்.என்ன ஒரு அழகாக ஆசிரியர் ஸ்ரீதர் அவர்கள் தமிழும் சமஸ்க்ருதமும் ஒன்றோடொன்று இணைந்தவை ,இயைந்தவை என்பதை ஆதாரங்களுடனும் ,பல பேரறிஞர்கள் மற்றும் தமிழினத் தலைவர்களின் கருத்துக்களோடு விள்க்கியுள்ளது வியப்பை அளிக்கின்றது

நமது தாய் மொழியான தமிழ் மீதும் தேசியத்தின் மீதும் உண்மையான பற்று கொண்டவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு

தயவு செய்து படியுங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்

 

சிவதாஸன் ஜகன்நாதன்

தாய் மொழியாக தமிழ் மொழி இருக்க, ஆங்கிலமும் தெரிந்து இருக்க எதற்கு மற்ற மொழிகள் என்று இருந்தேன் நான். ஆனால் சமீப காலமாக சில தமிழ் இலக்கியங்களை அவ்வப்போது கொஞ்சம் வாசித்து அதை பற்றி எழுத தொடங்கியதும் மேலும் ஒரு பழமையான மொழி கற்க வேண்டும் எனும் ஆர்வம் எனக்குள் புகுந்தது.

உலகின் மிக பழமையான மொழிகளை போற்றும் கலாசாரம் நம்முடையது. தமிழ் மொழி, சமஸ்கிருத மொழி இரண்டும் நீங்கலாக நம் நாகரீகத்தின் வரலாறை சொல்வது முடியாத காரியம்.

தமிழ் அறிந்த எனக்கு சம்ஸ்க்ருதமும் கொஞ்சம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் வழி தெரியவில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை துளியும் எனக்கு சமஸ்க்ருத மொழி தெரியாது. சமஸ்க்ருத பாரதி அமைப்பின் சேவையால் ஒரு நாளுக்கு இரண்டு மணிநேரம் என பத்து நாட்கள் பேச கற்று அதன் இறுதி நாள் விழாவில் சில அடிப்படையான வாக்கியங்கள் அமைத்து நானே சொந்தமாக சமஸ்க்ருதத்தில் பேசிய சிறிய பேச்சின் விரிவாக்கம் தமிழில் இங்கே:

தமிழா / சமஸ்கிருதமா எது சிறந்தது? எது முதன்மையானது? எது பழமையானது? எது முதலில் வந்தது?” என்ற வாதம் நிச்சயம் இரண்டு மொழிகளின் சிறப்பையும் உணராதவர்களிடம் இருந்து தான் வரும்.

உலகின் பழமையான இரண்டு மொழிகளில் ஒன்று என் தாய் மொழியாக அமைந்தது. தமிழ் மொழியின் சிறப்பும் சுவையும் வர்ணிக்க அந்த மொழியிலேயே வார்த்தைகள் போதாது. அத்தகைய சிறப்பு மிக்க மொழி என் தாய் மொழி தமிழ்.

திருக்குறள், அகநானூறு, புறநானூறு, திருமந்திரம், நாலடியார், தொல்காப்பியம், சிலப்பதிகாரம்..என இன்னும் பல பொக்கிஷங்களை நமக்களித்த தமிழ் மொழி போல் சம்ஸ்க்ருதமும் நம் கலாச்சாரத்தில் ஒரு தவிர்க்கமுடியாத பங்கை அளித்து இருப்பது உண்மை. ஆயுர்வேதம், யோகா, அர்த்தசாச்திரம், வேதம் என அறிவியலும் தத்துவமும் நிறைந்த பல நல்ல விசயங்கள் அதில் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது.

மதமும் ஆன்மீகமும் ஒரு பிள்ளையார் சுழி போன்று தொடக்கத்தில் நம்மை படிக்கவைக்க ஏதுவாக நிர்பந்திக்கும் ஒரு கருவியாகவே பயன்பட்டது. அவை வெறும் 10 விழுக்கடுகளே பெரும். மீதம் உள்ள 90 விழுக்காடு உயர்ந்த அறிவியல் கோட்பாடுகளும், தத்துவங்களும் நிறைந்தவை. மதம், நம்பிக்கை சாராது பல நல்ல செய்திகளை நமக்கு அளிப்பவை. அதனாலே அதன் சிறப்புகள் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நிலைத்து நிற்கிறது.

இன்று வடநாட்டு மொழி என்று முத்திரை குத்தப்பட்டாலும், ஆயுர்வேதவும் நமது சித்த மருத்துவமும் எப்படி ஒன்றோடு ஒன்று ஒன்றியதோ, அது போல பிற சமஸ்க்ரித இலக்கியங்களின் தாக்கமும் நம் கலாச்சாரத்தில் பின்னி பிணைந்து இருக்கிறது. யோகா கலையை சமஸ்க்ரிததத்தில் புத்தகமாக எழுதிய பதஞ்சலி முனிவர் நம் முதன்மையான தமிழ் சித்தர்களில் ஒருவர். தமிழுக்கு முதலில் இலக்கணம் இயற்றிய முதன்மையான தமிழ் சித்தர் அகத்தியர் சமஸ்க்ரிதத்தின் மிக பழமையான இலக்கியமாகிய ரிக் வேதத்தில் இடம் பெற்ற முக்கியணாம ரிஷி. இப்படி தமிழும் சமஸ்க்ரிதமும் ஒரே கொட்டில் பயணித்த வரலாறு ஏராளம்.

இன்று ஆங்கிலம் போல் சம்ஸ்க்ருதமும் இந்தியா முழுவதும் தெரிந்த ஒரு மொழியாக அமைந்து இருக்கலாம். இரண்டு மொழிகளின் தேவைகளையும் சிறப்புகளையும் உணர்ந்த நம் முன்னோர்கள் நம் தமிழ் மொழியை போற்றுவதொடு மட்டுமில்லாமல் அன்றைய போதுமொழியகிய சமஸ்க்ருதத்தையும் போற்றி பல இலக்கியங்களை அதில் இயற்றினர். பல சமஸ்க்ருத இலக்கியங்கள் தமிழர்களால் இயற்றப்பட்டவை.

இன்று Shakespeare நாடகங்களை, ஆங்கில இலக்கியங்களை, தத்துவங்களை, அறிவியலை போற்றி ரசித்து படித்து அங்கிலத்தில் உரையாடி மகிழும் நாம் நம் முன்னோர்கள் போற்றிய ஒரு மொழியை வேற்று மொழி என வெறுத்து ஒதுக்கியது வேதனை. ஆங்கிலத்தின் சிறப்பு உணர்ந்து அதன் அறிவியல் தத்துவங்களை ஒதுக்காமல் கற்றுவரும் நாம், சமஸ்க்ருதத்தின் சிறப்பை உணராமல் அதன் அறிவியல் தத்துவங்களை கற்காமல் இருப்பது முட்டாள்தனம்.

பெரும் தலைவர்கள் எல்லாம் இரண்டு மொழிகளின் சிறப்பையும் உணர்ந்தவர்கள்.

Mahatma Gandhi : “See the necessity for every Indian to have knowledge of Sanskrit. We have lost so much in the past that it will take some time and also a good deal of effort to regain and consolidate it. It has to be done sooner or later”

Swami Vivekananda: “Sanskrit and culture go together. It is necessary that the masses should get access to this great language, for being acquainted with spirituality and culture of their forefathers. Education should be imparted through mother-tongue but “at the same time Sanskrit education must go on along with it because the very sound of Sanskrit words gives a prestige and a power and a strength to the race”. This is possible only when the Sanskrit language is made the national language of India.

Dr B. R. Ambedkar “ஹிந்திக்கு பதில் அந்த இடத்தில் சமஸ்க்ருதத்தை இந்தியாவின் தேச மொழியாக அறிவிக்க வேண்டும்” என்று பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் அப்துல் கலாம்: “நமது பாரம்பரிய சொத்தான சமஸ்க்ருதம் வழக்கிலிருந்து மறைந்துவிட்டாலும் அதில் மறையாமல் புதைந்துள்ள அறிவியல் உண்மைகளை தேடி கண்டறிய வேண்டும். நாட்டின் பல பகுதிகளில் சிதறிக்கிடக்கும் சமஸ்க்ருத இலக்கியங்களை கண்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும். இந்த நூல்களை ஒலி , ஒளி ஊடகங்களில் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு டிஜிட்டல் நுலகம் போன்று உருவாக்கினால் பல தலைமுறைகளுக்கும் நீண்ட காலங்களுக்கும் இந்த செல்வத்தை பாதுகாக்கலாம்.”

பெருந்தலைவர் காமராஜர்: “பாரதிய கலாச்சாரப் பயன்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சமஸ்க்ருத மொழியை இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கற்பது அவசியம்”

சிலம்புச் செல்வர் ம. போ. சிவஞானம்: “நான் ஆங்கிலத்தில் போதிய புலமை பெறாததற்காக வருந்த வில்லை. சமஸ்க்ரிருதத்தில் புலமை பெறாததற்காக வருந்துகிறேன். ஆங்கில புலமையால் வாழ்க்கை வசதிகளை பெறலாம் ஆனால் சமஸ்க்ருத புலமையால் ஆன்மீக ஞானம் பெறலாம். சமஸ்க்ருதம் பயின்றிருந்தால் தமிழ் மொழிக்கு இப்போது செய்வதை விடவும் அதிக அளவு தொண்டு செய்ய முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்”

திரு. சாலமன் பாப்பையா: “தமிழ் ஒரு கண் என்றால் தமச்க்ருதம் மற்றொரு கண். இரண்டு கண்களும் முக்கியம் பார்வை சரியாக இருக்க வேண்டுமானால் இரண்டு கண்களும் தேவை”

எனவே நம் முன்னோர்களின் முழுமையான சிறப்பை உணர இரண்டு மொழிகளும் அவசியம். அறிவார்ந்த நம் முன்னோர்கள் அனைவரும் இதை உணர்ந்தவர்கள். எனவே தான் சமஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்ட பல இலக்கியங்கள் நமக்கு தமிழில் கிடைத்தன.

இறைவனின் அருளால் தமிழை தாய் மொழியாக கிடைக்கப்பெற்றேன். ஆனால் சமஸ்க்ருதம் ஒரு துளியும் தெரியாது. அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு அதிகம் இருந்ததில்லை. சமீபத்தில் நிறைய தமிழ் இலக்கியங்கள் படிக்கவும் அதன் சிறப்புகளை கண்டு பிரமிக்கவும், இது போல மற்றொரு பழைமையான மொழியாகிய சமஸ்க்ருத மொழியையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நம் இந்திய கலாச்சாரத்தின் உயர்ந்த தத்துவங்களை யாரோ மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் Wikipedia வில் படிக்க அவற்றை அந்த மொழியிலேயே படிக்க வேண்டும் என்று தோன்றியது.

நம் கலாச்சாரத்தில் உள்ள தத்துவம் அறிவியல் அளவு வேறு எங்கும் உள்ளது சந்தேகமே. இந்து கலாசாரம் மட்டுமில்லாது புத்த மதம், சமண மதம், சீக்கிய மதம், என அனைத்து கலாச்சாரத்திலும் சமஸ்க்ருதம் முக்கிய பங்கு வகிக்கிறது. சமஸ்க்ருதம் ஆரம்பத்தில் ஒரு பேச்சு வழக்கான மொழியாக மட்டுமே இருந்தது, வேதங்களும் வாய் வழியாகவே பல ஆயிரம் ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. பின்னாளில் தான் அது எழுத்து வடிவம் பெற்றது.

வடநாட்டு தேவநாகிரி மட்டுமல்லாது, தென் இந்தியாவின் மொழிகளின் பிராமி எழுத்துகளிலும் சமஸ்க்ருதம் காலம் காலமாக எழுதப்பட்டு வந்துள்ளது. வடநாட்டு கோவில் கல்வெட்டுகளில் கூட தென் இந்திய மொழிகளின் அடிப்படையான பிராமி எழுத்துகளில் தான் சமஸ்க்ருதம் எழுதப்பட்டு இருப்பது நாம் அறிய வேண்டிய ஒன்று. இன்றும் சமஸ்க்ருதம் பிராமி எழுத்துகளால் பல சமயங்களில் எழுதப்பட்டாலும் பிற்காலத்தில் தேவநாகிரி அதிகம் இடம் பெற அது நம் கண்களுக்கு வேற்று மொழியாக தெரிகிறது.

வாய் வழி பல ஆயிரம் ஆண்டுகளாக பகிரப்பட்ட வேத சமஸ்க்ருத்தை வட மொழி என பிரிக்க எந்த அடிப்படையும் இல்லை. ஒரு வேளை சமஸ்க்ருதம் தமிழில் இருந்து வந்து இருக்கலாம், அல்லது தமிழ் பழங்கால சமஸ்க்ருதத்தில் இருந்து வந்து இருக்கலாம். அல்லது அவை இரண்டும் வேறு ஒரு பழமையான மொழியில் இருந்து தோன்றி அவற்றுள் ஒன்று தெற்கு நோக்கி வளரவும் ஒன்று தெற்கிலும் வடக்கிலும் அதன் தாக்கத்தை கிளைகளை பரப்பியும் இருக்கலாம்.

எனவே சமஸ்க்ருதம் வட மொழி அன்று. அது இந்தியாவின் மொழி. அதை வடக்கு தெற்கு என்று பிரிப்பதே அறியாமை. உருதுவின் தாக்கம் அதிகம் நிறைந்த ஹிந்திக்கு சம்ஸ்கிருத மொழியோடு இருக்கும் ஒற்றுமையை விட தமிழுக்கும் சமஸ்க்ருதத்துக்கும் தான் ஒற்றுமை அதிகம். இரண்டு மொழியும் படித்தவர்கள் அந்த மொழிகளின் ஒற்றுமையையும், இணைப்பையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

கணிதம், வின்வெளி அறிவியல், இயற்ப்பியல், வேதியியல், புவியியல், அரசியல், மருத்துவம், அறுவை சிகிச்சை பற்றிய சுஸ்ருத சம்ஹிதா,, ஆயுர்வேதம், யோகாசனம் பற்றிய யோக சூத்ரம், ஆன்மீகம், ஆத்திகம், ஏன் நாத்திகம் உட்பட நம் இலக்கியங்கள் பேசாத தலைப்புகளே இல்லை. அது மட்டுமின்றி ராமாயணம் மகாபாரதம் மற்றுள் பல இதிகாசங்ககள் ஆழ்ந்த தத்துவங்களை நேரிடையாக சொல்லாமல் எளிதில் விளக்க இயற்றப்பட்டவை. இதை ஏதும் உணராமல் மொழியை வைத்து சண்டையிட்டு கொண்டு தமிழ் தான் சிறந்தது அல்லது சமஸ்க்ருதம் தான் சிறந்தது என்று ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு மற்றொன்றை வெறுப்பது போல் மடத்தனமான அறியாமை இல்லை.

அதன் சிறப்பை உணர்ந்து இருந்தாலும் அதை எப்படி படிப்பது என்று அறியாமல் இருந்தேன். அப்போது “சமஸ்க்ருத பாரதி” அமைப்பின் அந்த அறிவிப்பு பலகை என் கண்ணில் பட்டது. “பத்து நாட்களில் சமஸ்க்ருதம் பேச கற்றுக்கொள்ளுங்கள், எழுத படிக்க தெரிய வேண்டாம். அனைத்து மதம் ஜாதியினரும் படிக்கலாம், கட்டணம் இல்லை” என்ற அறிவிப்பு என்னை ஈர்த்தது. ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் தான். நானும் பத்து நாட்கள் சென்று வந்தேன். பத்து நாட்கள் முன் ஒரு வார்த்தை கூட சமஸ்க்ருதத்தில் தெரியாத எனக்கு பத்தாம் நாள் சில அடிப்படை வாக்கியங்கள் அமைத்து பேசத்தெரியும். தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இருக்கும் ஒற்றுமை நான் கற்பதை சுலபமாக்கியது. தமிழ் ஆங்கிலம் என எந்த மொழியையும் பயன்படுத்தாமல், சைகை முறையிலேயே மொழியை கற்றுத்தந்தது வியக்கவைத்தது. அனைத்து வயதிலும் சக மாணவர்கள். பத்து வயது முதல் 80 வயது வரை! பள்ளி, B.E, M.Tech தராத வித்தியாசமான அனுபவம் தந்தது அந்த பத்து நாட்கள்.

பத்து நாட்களில் கற்றது மட்டுமில்லாமல், மேலும் நன்றாக கற்கவும், தமிழ் இலக்கியங்கள் படிப்பது போல் சமஸ்க்ருத இலக்கியங்களையும் அந்த மொழியிலேயே படித்து கற்கவும் ஆசை. என் வேலைக்கு இடையில் இதற்க்கு நேரம் கிடைப்பது கொஞ்சம் கடினம் ஆனாலும், முயற்சிப்போம் என எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.

மொழி வெறிக்கும் மொழிப்பற்றுக்கும் ஒரு சிறிய கொடு தான் வித்தியாசம். மொழி வெறி நம்மை ஒரு குறிகிய வட்டத்துக்குள் வைக்கும், நம்மை சிந்திக்க விடாது, நம் அறிவை விரிவடைய செய்ய விடாது, நம் ஒற்றுமையை கெடுக்கும். ஆனால் மொழிபற்று நம்மை மேலும் படிக்க தூண்டும். தமிழ் மொழி மீது எனக்கு வந்த பற்று என்னை அதை சார்ந்த சமஸ்க்ருத மொழியை கற்கத்தூண்டியது. இரண்டு மொழிகளுமே நம் பாரம்பரிய மொழி என்றும், இரண்டின் சிறப்புகளையுமே நாம் விடாமல் அடுத்த தலைமுறை சேர்க்க வேண்டும் என்றும் எனக்கு உணர்த்தியது.

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

“Gyanam paramam dhyeyam” (Knowledge is the Supreme Goal)

அனைவரும் இதை உணர்ந்து நம் முன்னோர்களின் சிறப்புகளை அறிந்து அவர்கள் நமக்கு அளித்த பொக்கிஷங்களை பாதுகாத்து, படித்து அதில் இருக்கும் நன்மைகளை எடுத்துக்கொண்டு வாழ்வில் வளம் பெறுவோம். நன்றி வணக்கம்.

ஸ்ரீதர் ரெங்கராஜன்

 


Saturday, April 15, 2023

 



 

 

 

 

பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்

இந்த அழகான ஆய்வுக் கட்டுறையை அடியேன் படித்து மகிழ்ந்தபோது இதை நம்முடைய அறிவுசால் நன்பர்களுடன் பகிர்ந்துகொள்லாம் என் எண்ணி அதில் தேவையற்ற கருத்துக்களை நீக்கி இந்த அருமையான கட்டுறையை பதிப்பித்துள்ளேன் அனைவரும் தவறாது இதைப் படிக்குமாறு வேண்டுகிறேன்

சிவதாஸன் ஜகன்நாதன்

(தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.)

மிழறிஞர் ஒருவர் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவில் பேசுகையில், சித்திரை, வைகாசி முதலிய 12 மாதங்களின் பெயர்களும், அந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் முழுமதி நாள் (பௌர்ணமி) நிகழ்கிறதோ, அந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இடப்பட்ட பெயர்கள்தாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இக்கருத்தினை மறுத்துப் பேசிய சிலர், சித்திரை, கார்த்திகை என்ற இரு மாதங்களின் பெயர்கள்தாம் நட்சத்திரப் பெயர்கள் என்றும், பிற மாதங்களின் பெயர்களுக்கும் நட்சத்திரங்களின் பெயர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டு, பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் பூசை என்றும், மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் மகம் அல்லது மகை என்றல்லவா பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் வினவியுள்ளனர்

சேரன் செங்குட்டுவன், கனக விசயர் மீது படையெடுத்துப் புறப்படுவதற்கு நல்ல நேரம் (முகூர்த்தம்) குறித்துக் கொடுக்கிற சோதிடன் “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோன்” எனக் குறிப்பிடப்படுகிறான். 

 

ஐவகைக் கேள்வி என்பது பஞ்சாங்க அறிவாகும். “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று” என்றால் 12 ராசிகளிலும் இருக்கின்ற கிரக நிலைகளைக் கற்று என்று பொருளாகும்.

ஜாதகத்தில் இருக்கின்ற 12 ராசிகளை மதி என்றே சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அதாவது சித்திரை மதி தொடங்கி பங்குனி மதி முடிய இருக்கிற 12 ராசிகள் என்பது பொருளாகும்.

 

மதி என்ற சொல்லில் இருந்தே மாதம் என்ற சொல் தோன்றிற்று. தமிழிலும் நிலவைக் குறிக்கிற திங்கள் என்ற சொல்லைத்தான் மாதத்தைக் குறிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

 ஆங்கிலத்தில் வழங்குகிற Month (மாதம்) என்ற சொல் Moon என்ற சொல்லில் இருந்தே தோன்றியதாகும்.

எனவே, சித்திரை நட்சத்திரத்தில் முழுமதி திகழ்கிற மாதம் சித்திரை மாதம் ஆகும். அதே சிலப்பதிகாரத்தில், இந்திர விழவூரெடுத்த காதையில் (வரி 64) ”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென” என்ற குறிப்பு உள்ளது இதற்குச் சான்றாகும்.

 அது போன்றே, விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் வைசாகி அல்லது வைகாசி ஆகும். இன்றும் வட இந்தியாவில் வைசாகி என்ற பெயர் வழக்கில் உள்ளது.

 

விசாக நட்சத்திரத்தின் பெயரை ஆட்பெயராகக் கொண்ட விசாகன் என்ற பெயருடையவர்கள், சங்க காலத்தில் இருந்துள்ளார்கள். இப்பெயர் வியாகன், வியகன், வியக்கன் என்ற வடிவங்களில் வழங்கியுள்ளதென ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமது Early Tamil Epigraphy என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

 

சித்திரை, விசாகம் என்ற நட்சத்திரப் பெயர்களைப் போன்றே அனுஷம் என்ற நட்சத்திரமும் ஆனுஷி என்ற மாதப் பெயராக வழங்கத் தொடங்கி அதுவே ஆனி எனத் திரிந்திருக்கிறது. அனுஷம் அல்லது அனுடம் அல்லது அனிழம் என்ற நட்சத்திரம் முடப்பனை என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுஷ நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அனுஷ நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமாகிய ஜேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கருதுகிற மரபும் உண்டு. அந்த அடிப்படையில் ஆனி மாதத்தை ஜேஷ்ட மாதம் என்றும் குறிப்பிடுவதுண்டு.

இவ்விரண்டு நட்சத்திரங்களிலும் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், இவற்றை அடுத்து வருகிற மூல நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்கிற வழக்கமே தற்போது நடைமுறையில் உள்ளது.

 மார்கழி மாத மிருகசிரஸ் நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அதற்கு அடுத்த நட்சத்திரமான சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் முழுநிலா நாள் அமைவதாகக் கொள்வதை இதனையொத்த நிகழ்வாகக் கருதலாம்.

பூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது.

 

சிராவணம் என்ற நட்சத்திரம் திருவோணம் எனத் தமிழில் வழங்குகிறது. ஓணம் என்று இதனைக் குறிப்பிடுவதுண்டு. சிராவண நட்சத்திரத்தில் பௌர்ணமி அமைகிற மாதமே சிராவணி ஆகும். இது ஆவணி என வழங்கப்படுகிறது. சிரமணர் என்பது சமணர் எனத் திரிந்து அமணர் என வழங்குவது போன்றதே இம்மாற்றமும் ஆகும். ஆவணி மாத முழுநிலா நாள் ‘ஓண நன்னாள்’ என மதுரைக்காஞ்சியில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

பூர பாத்ர பதம் என்கிற நட்சத்திரப் பெயர் பூரட்டாதி எனத் தமிழில் வழங்கும். இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் புரட்டாசி எனத் தமிழில் வழங்குகிறது.

 

அசுவதி நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் வட இந்தியாவில் ஆஸ்வின மாதம், ஆஸ்விஜ மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழிலோ அற்பசிஐப்பசி, அற்பிகை என்றெல்லாம் வழங்கியுள்ளது. இவற்றுள் ஐப்பசி என்பதே வழக்கில் நிலைத்துவிட்டது.

 

கார்த்திகையை அனைவரும்  ஏற்றுக்கொண்டு விட்டதால் அதைப் பற்றி நாம் எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை.

 

மான் தலை போன்று தோற்றமளிக்கும் நட்சத்திரக் கூட்டம் மிருகசிரஸ் என்று வடமொழியில் வழங்கிற்று. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மார்கசிருஷி என வடமொழியில் வழங்கத் தொடங்கி, தமிழில் மார்கழி எனத் திரிந்துள்ளது. பிராகிருத மொழியில் மிருகசிரஸ் என்பது மகசிர என வழங்கிற்று. மார்கழி மாதமும் மகசிர என்ற நட்சத்திரப் பெயராலேயே பிராகிருதத்தில் வழங்கியுள்ளது. இதற்கான ஆதாரம் இலங்கையில் வரலாற்று நூலான மகாவம்சத்தில் உள்ளது. ‘யாப்பருங்கலவிருத்தி’ என்ற பழமையான இலக்கண நூலில் மகயிரம் என இந்நட்சத்திரப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பூச நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் தை என்று எப்படிப் பெயர் பெற்றது என்பது  கேள்வி. பூச நட்சத்திரம் வடமொழியில் பூஷ்யம் என்றும், திஷ்யம் என்றும் இரு வகையாக வழங்கும். திஷ்ய நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் என்பதால் தைஷ்யம் என இம்மாதம் வழங்கப்படத் தொடங்கி தைசம், தைய்யியம், தை எனத் திரிந்துள்ளது. தை என்பது பூச நட்சத்திரத்தின் பெயர் என்று பழமையான தமிழ் நிகண்டு நூலாகிய சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது.

தைசம் என்பது பூசம் நட்சத்திரத்தைக் குறிக்கும் என்று 1910ஆம் ஆண்டில் கதிரைவேல் பிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட சங்கத்து அகராதி குறிப்பிடுகிறது. புஷ்யம் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பௌஷ்ய மாதம் என்றும், பௌஷ மாதம் என்றும் தைத் திங்களைக் குறிப்பிடுவதும் உண்டு..ஐராவதம் மகாதேவன், திஷ்யம் என்ற நட்சத்திரப் பெயர் சங்க காலத் தமிழகத்தில் ஆட்பெயராகச் சூட்டிக் கொள்ளப்பட்டது என்றும், திஸ்ஸன், திய்யன், தீயன் என்ற வடிவங்களில் இப்பெயர் வழங்கியுள்ளது என்றும் நாம் மேலே குறிப்பிட்ட நூலில் எழுதியுள்ளார்

தை மாதம், ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதியன்று பிறக்கிறது என்ற கணக்கீடு பஞ்சாங்கக் காரர்களால் தாம் கணித்துச் சொல்லப்படுகிறது ‘ஆரிருமதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோர்களால்’தான் சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு தொடங்குகிற நாள் என்ற அடிப்படையில் தை முதல் நாள் கணக்கிடப்படுகிறதே தவிர ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வானநூல் கல்வியில் தேர்ச்சி பெற்ற கோள் ஆய்வு நிபுணர்களால் அல்ல.

மக நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மாகி என வழங்கத் தொடங்கிப் பின்னர் மாசி எனத் திரிந்துள்ளது. கரம், ஹரமாகத் திரிந்து ஒலிக்கப்படத் தொடங்கிப் பின்னர் சகரமாகத் திரிந்திருக்கலாம். ஹிந்து என்ற பாரசீக வழக்கு, சிந்து என இந்திய மொழிகளில் வழங்குவதை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.

இறுதியாகப் பங்குனி என்ற கடைசி மாதப் பெயருக்கு வருவோம். ”பங்குனி உயர் அழுவத்துத் தலைநாள் மீன்” எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. அதாவது பங்குனி மாதத்தில் முழுநிலா அமைகிற முழுமையான நட்சத்திரமாகிய உத்தர பால்குண நட்சத்திரமே அதாவது உத்தரமே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. நாள்மீன் என்பது நட்சத்திரத்தையும், கோள்மீன் என்பது கிரகத்தையும் குறிப்பதற்குச் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களாகும். அதாவது Constellation என்பது நாள்மீன் அல்லது நட்சத்திரம், Planet என்பது கோள்மீன் அல்லது கிரகம் ஆகும்.

கோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். வடமொழியில் கிரகித்தல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் கிரகம் என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர்

உத்தர பால்குண நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் பல்குனி என வழங்கத் தொடங்கிப் பங்குனி எனத் திரிந்துள்ளது. பெயர்க் காரணம் புரியாமல் போவதில் வியப்பில்லை.

இறுதியாக ஒரு விளக்கம். இந்த நட்சத்திரப் பெயர்களும், மாதப் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்களாக இருப்பதால் அவை தமிழர்களுக்கு அன்னியமானவை என்ற எண்ணம் சில தமிழ் அறிஞர்களிடையேகூட நிலவுவதாகத் தெரிகிறது. பழமையான தமிழ்க் கணியர்களான (ஜோதிடர்களாகிய) வள்ளுவர்கள், தமிழர்களே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே, பல நட்சத்திரப் பெயர்களும், மாதங்களில் பெயர்களும் திராவிட மொழிகளில் இருந்தோ, முன்னிலை ஆஸ்திராய்டு மொழிகள் என்று கருதப்படுகிற முண்டா மொழிகளில் இருந்தோ பெறப்பட்டுச் சமஸ்கிருத வடிவம் பெற்ற சொற்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.

அதேபோன்று, வள்ளுவர்கள் வானவியல் அறிவை அனைத்திந்தியக் கல்விப் புலமாக உருவாக்குவதற்காக, சமஸ்கிருத மொழி வடிவில் இப்பெயர்களைப் பதிவு செய்திருக்கலாம். இக்காரணத்தினாலேயே வானவியல் அறிவும், பஞ்சாங்க அறிவும் தமிழர்களுக்கு அன்னியமாகிவிடா. மொழியியல் அறிஞர்கள்தாம் இது குறித்து ஆய்ந்து விளக்கம் அளிக்கத்தக்கவர்கள்.

(இக்கட்டுரைஏப்ரல் 21, 2012 அன்று மூவர் முதலிகள் முற்றம் சென்னையில் நடத்திய சித்திரைச் சிறப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவசப் பிரசுரத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம்).

கட்டுரை ஆசிரியர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். தமிழகக் கல்வெட்டுகள் குறித்த ஆழ்ந்த புலமை கொண்டவர்.

கல்வெட்டுகளை ஆய்வு செய்வது குறித்து பல புதிய கோணங்களையும், பார்வைகளையும் அளித்து வருபவர்.