Monday, July 24, 2023

 


அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!


சிவதாஸன் ஜகன்நாதன்

 இன்று திங்கள் கிழமை பதிகத்தில்

 

மாணிக்கவாசகப் பெருமானின் திருவாசகத்தில் பிடித்தப் பத்து என்னும் பதிகத்தினின்றும் இந்த அழகிய பாடலை இன்று தந்துள்ளேன் .பொருளுடன் படித்து மகிழ்ந்து இன்புற்று ஈஸனருள் பெற்றுய்யுங்கள்

அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து அகிலாண்ட கோடி பிரம்மாண்டங்களுக்கும் தலைவனாய் இருந்த போதிலும் எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் ஆனவன். இந்த உலகில் பிறக்கும் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றுவித அழுக்குகளால் மூடப்பெற்று இறைவனை மறந்து புலன்களின் வழியே சென்று பாவக்குழியில் விழுந்து சொல்லொணா துயரம் அடையும் போது, செய்த குற்றங்களை எல்லாம் மறந்து அந்த உயிர்களை நல்வழிக்குக் கூட்டிவந்து அருள்செய்வது இறைவனின் தனிப்பெரும்கருணை. தம் குழந்தைகள் எத்தனைத் தான் குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றை எல்லாம் பொறுத்து அந்த குழந்தைகளைக் காப்பது பெற்றோர் இயல்பு. இறைவன் அப்படி நம் குற்றங்களை எல்லாம் பெற்ற அன்னையும் தந்தையும் போல பொறுத்துக்கொண்டு நம்மை எப்போதும் காப்பதால் 'அம்மையே! அப்பா!' என்றார் மாணிக்கவாசகர்.

கந்தர் சஷ்டிக் கவசத்தில் 'பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்; பெற்றவள் குறமகள் பெற்றவளாமே' என்றார் பாலன் தேவராய சுவாமிகளும்.

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு என்றார் பொய்யாமொழிப்புலவர்.

 

இந்த உலகில் நாமும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து, நம் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்து, உலக மக்கள் அனைவரும் துன்பமின்றி இருக்குமாறு உதவி செய்ய, கைப்பொருள் மிக்க அவசியம் ஆகிறது. அந்த கைப்பொருளை அடையத்தான் இங்குள்ளவர் அனைவரும் தம் வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். அந்த கைப்பொருளை பொன்னாகவும் மணியாகவும் மாற்றி சேமித்து வைத்தலும் நடக்கிறது. அப்படி நாம் சேமித்துவைக்கும் வைத்த நிதிகளிலேயே விலைமதிப்பற்ற ஒப்பு இல்லாத பெரும் மாணிக்கம் இறைவனே. அவன் அருள் இருந்தால் நாம் கைப்பொருளால் அடையும் அத்தனை இன்பத்தையும் அடைந்து அதற்கு மேலும் அடையலாம். நாம் சேர்த்துவைக்கும் 'வைத்த நிதிகள்' எல்லாம் காலவேகத்தில் கரைந்து போகும். ஆனால் இறைவனோ என்றும் அழியா பெரும் செல்வம் - வைத்த மா நிதி. அதனால் தான் பாண்டியனின் முதலமைச்சர் இறைவனை 'ஒப்பிலா மணியே' என்கிறார்.

அன்பே சிவம் என்றார் திருமூல நாயனார். அமுதம் கடலில் விளைந்தது. அந்த அமுதம் உண்டவர்களை இறவா நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது. ஆனால் அந்த அமுதமும் அளவுக்கு மீறி அருந்தினால் திகட்டிவிடும். இறைவனோ அன்பே உருவாய் அந்த அன்பினில் விளைந்த ஆரா அமுதமானவன். அவனை அடைந்தால் இறவா நிலையும் பிறவா நிலையும் என்றும் அவன் அருகில் இருந்து ஆனந்தம் அடையும் நிலையும் அடையலாம்.

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்

பாதியும் உறங்கிப்போகும்; நின்றதில் பதினைந்தாண்டு

பேதைப் பாலகனதாகும்; பிணி, பசி, மூப்பு, துன்பம்


என்று பாடுவார் ஆழ்வார். வேதங்கள் விதித்தபடி ஒரு மனிதன் நூறு பிராயம் வரை வாழ்ந்தாலும், அந்த நூறில் பாதியாகிய ஐம்பது வருடங்கள் உறக்கத்தில் சென்று விடுகிறது. மிச்சம் உள்ள ஐம்பதில் பதினைந்து வருடம் வரை ஏதும் அறியா பேதைப் பருவமாய் சென்று விடுகிறது. மிச்சம் உள்ள முப்பத்தி ஐந்தில் நாம் அடையும் துன்பங்கள் அளவில - பிணி உண்டு; பசி உண்டு; மூப்படைவோம்; மற்ற எத்தனையோ துன்பங்கள். இப்படி நூறு வயது வாழ்ந்தாலுமே இறைவனை நினைக்க நமக்குக் கிடைக்கும் வாய்ப்பு மிக குறைவு. அப்படி நிலையில்லாதவற்றையே நம்பி நம் வாழ்நாளை வீணே கழித்துக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட வாழ்க்கையையே 'பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்' வாழ்க்கை என்கிறார் மாணிக்கவாசகர்.

அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்துவந்த தமக்கு சிறந்த சிவபதம் என்னும் பெருமையை இறைவன் தானே வந்து அருளினான் என்பதால் 'செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே, சிவபெருமானே' என்றார்.

உன் அருளாலே உன் தாள் வணங்கினேன். இம்மையே இப்பொழுதே உன் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்தேன். நீர் எம்மை விட்டு எங்கே சென்றுவிடப் பார்க்கிறீர்.

 

இந்த அருமையான பதிவை மனம் ஒன்றிப்படித்து ஈசன் அருள் பெற்றுய்ய உங்களை வாழ்த்துகிறேன்

 

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

 

No comments:

Post a Comment