Thursday, October 31, 2024

அபிராமி அந்தாதி -20

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழன், அக்டோபர் 31, 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை பத்தொன்பது  பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று இருபதாவது பாடலைப் பார்ப்போம்.

முந்தைய. பத்தொன்பவாது பாடலில் அம்பாளின் திரு உருவை கண்ணால் கண்டு  தன் உள்ளத்தில் வாங்கியதால் தன் உள்ளத்டிலே ஞானம் பிறந்தது என்ன வியப்போ என்று பாடுகிறார் என்பதைப் பார்த்தோம்.

இன்று இருபதாவது பாடலில் குடிகொண்டு உறைகின்ற இடங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கின்றார்.அம்பாள் ப்ரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருந்தாலும் சில குறிப்பிட்ட இடங்களில் இருப்பதி அழகாகச் சொல்லுகிறார்

 

உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒருபக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, என்றன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

 

பொருள்:

 உறைகின்ற நின் திருக்கோயில் –                                                                         அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது
                                                                                                                                               நின் கேள்வர் ஒரு பக்கமோ –                                                                                          உன்னுடன் ஈடுஇணையில்லாத நட்பினைக் கொண்டுள்ள உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ?
                                                                                                                                அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ –                                                                ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ?
                                                                                                                                       அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ –                                                            அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ?
                                                                                                                                கஞ்சமோ –                                                                                                                                          தாமரை மலரோ?
                                                                                                                                   
எந்தன் நெஞ்சகமோ –                                                                                                          என்னுடைய நெஞ்சமோ?
                                                                                                                                 மறைகின்ற வாரிதியோ –                                                                                             எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ?
                                                                                                                           பூரணாசல மங்கலையே –                                                                                                       எங்கும் பூரணமாய் நிறைந்து நிலையாய் நிற்கும் மங்கல வடிவானவளே!

உரை 

அருளால் நிறைவு பெற்ற நிச்சலையாகிய நித்தியமங்கலையே, நீ வாசஞ் செய்கின்ற ஆலயம் நின் பதியாகிய பரமசிவத்தின் ஒரு பக்கமோ, அல்லது நின் புகழை எப்பொழுதும் சொல்கின்ற நான்கு வேதங்களின் மூலமோ, அன்றி அவற்றின் முடியாகிய உபநிடதங்களோ, அமுதம் நிறைந்திருக்கும் வெள்ளிய சந்திரனோ, வெண்டாமரையோ, அடியேனுடைய உள்ளமோ, தன்பால் வீழும் பொருள்கள் எல்லாம் மறைவதற்குக் காரணமான கடலோ? யாதாகும்?

விளக்கம்

என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழன், அக்டோபர் 31, 2024

No comments:

Post a Comment