ஓம் நமசிவாய
சிவதாஸன் ஜகன்நாதன்
ஞாயிறு,
அக்டோபர் 27, 2024
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள்.
நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை பதினேழு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் பதினெட்டாவது
பாடலைப் பார்ப்போம்.
முந்தைய பதினேழாவது பாடலில்
அம்பாளின் பேரழகுக்கு இணை இல்லாமல் தாமரை மலர்களும் ,காமனும் தோற்றுப் போவதையும்,,சிவபெருமானு
அம்பாளின் பேரழகின் முன்னே தோற்று தன் மனதிலும் ,மேனியிலும் அம்பாளுக்கு இடம் கொடுத்துள்ளதாய்
விவரிக்கின்றார்.என்பதைப்
பார்த்தோம்.
இன்று பதினெட்டாவது பாடலைல் அம்பாளை பலகோலங்களிலும்
காண விழைந்து எல்லாக் கோலங்களிலும் காக்ஷிதர வேண்டும் தன் மன அஹங்காரத்தை அழித்திட்ட அம்பாளின் திருவடிகள் தன்னை எமபயத்திலிருந்தும்
காக்க வேண்டும் என விழைகிறார்
வவ்விய பாகத் திறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளிநிற்கவே.
பொருள்:
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் – உன்னால் கவர்ந்து கொண்ட இடப்பாகத்தைக் கொண்ட இறைவராம் சிவபெருமானும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடனும்,
உங்கள் திருமணக்கோலமும் – உங்கள் திருமணக் கோலத்துடனும்
சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து –
என் சிந்தனையுள் இருக்கும் அசுத்தங்களைத் தீர்த்து என்னை அடிமை கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே – கோபத்துடன் என் உயிரைக் கவர என் மேல் யமனாகிய காலன் வரும் போது தோன்றி அருள வேண்டும் அபிராமி அன்னையே!
உரை:-
தேவி, உன்னால் கொள்ளப்பட்ட வாம பாகத்தையுடைய சிவபிரானும் நீயும் இணைந்து மகிழ்ந்து ஒன்றியிருக்கும் அவசரமாகிய திருக்கோலமும், உங்கள் திருமணக்கோலமும் என் உள்ளத்துள்ளே இருந்த ஆணவத்தைப் போக்கி என்னைத் தடுத்தாட்கொண்ட பொலிவு பெற்ற திருவடிகளுமாக உருவெடுத்து வந்து வெம்மை மிக்க கூற்றுவன் உயிரைக் கொள்ளும்பொருட்டு என்மேல் எதிர்த்து வரும்போது என்முன் வெளிப்படையாகத் தரிசனம் தந்து நின்றருள்வீராக.
விளக்கம்:
அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய
பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு
அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு
இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் அழகும், தனித்தனி
நின்று காட்சி தரும் திருமணக்கோலமும்,
கொடிய
காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.
இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும்
அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு
மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்
ஓம்
நமசிவாய
சிவதாஸன்
ஜகன்நாதன்
ஞாயிறு,
அக்டோபர் 27, 2024
No comments:
Post a Comment