Friday, October 18, 2024

 

அபிராமி அந்தாதி -16

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி, அக்டோபர் 18, 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை பதிநான்கு  பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் பதிநாலாவது பாடலைப் பார்ப்போம்.

நேற்றைய  பதினைந்தாவது பாடலில் அம்பாளின் கருணையினால் மூன்று உலகங்களிலும் சிறப்பான இடம் எப்படிக் கிடைக்கும் என்பதைக் கூறுகின்றார். என்பதைப் பார்த்தோம்.

இன்று பதினாறாவது பாடலில் அளவிடமுடியாத ஒளியை உடைய அம்பாள் பஞ்சபூதங்களாகவும் பேரொளி வடிவமாகவும் திகழ்பவளின் பேருருவமும் கருணையும் என் சிற்றிவுக்கு எட்ட்டியது எப்படியோ என வியந்து பாடுகிறார்.

கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கிடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே,
அளியேன் அறிவளவிற்கள வானத திசயமே.

பொருள்:

 கிளியே                                                                                                                                      அழகிய கிளி போன்றவளே!
கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே                         உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அடியார்களின் மனத்தில் எப்போதும் இருந்து சுடர் விட்டு ஒளிரும் ஒளியே!
எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே                                    எண்ணிப்பார்த்தால் சூன்யமாய் இருக்கும் வெட்ட வெளியானவளே!
வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே                                                      வெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் (விண், மண், காற்று, தீ, நீர்) விரிந்து நின்ற தாயே! அபிராமியே!
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே – கருணையுள்ளவனும் எளியவனும் ஆன என் அறிவுக்கும் எட்டும் அளவாய் நீ நின்றது அதிசயமே! அது உன் கருணையன்றி வேறு என்ன?

ரை:

 கிளி போன்ற திருமேனியையுடைய தேவி, உறவினராகிய அன்பர்கள் மனத்தே நிலைபெற்று ஒரு காலைக்கு ஒருகால் விளங்கித் தோன்றும் ஞான ஒளியே, விளங்குகின்ற ஒளிகளுக்கெல்லாம் ஆதாரப் பொருளே, எண்ணிப் பார்க்கும்போது எந்தத் தத்துவமும் ஆகாமல் எல்லாம் கடந்து நின்ற பரவெளியே, ஆகாசம் முதலிய ஐம்பெரும் பூதங்களுமாகி விரிந்த தாயே, இத்துணைப் பெரிய பொருளாகிய நீ இரங்கத்தக்க அடியேனது சிற்றறிவின் எல்லைக்கு உட்பட்டது வியப்புத் தருவதாகும்.

விளக்கம்:

 கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி, அக்டோபர் 18, 2024

 

No comments:

Post a Comment