Tuesday, October 29, 2024

 


 

அபிராமி அந்தாதி -19

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், அக்டோபர் 28, 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை பதினெட்டு  பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் பத்தொன்பதாவது பாடலைப் பார்ப்போம்.

முந்தைய பதினெட்டாவது பாடலில் அம்பாளை பலகோலங்களிலும் காண விழைந்து எல்லாக் கோலங்களிலும் காக்ஷிதர வேண்டும், தன் மன அஹங்காரத்தை அழித்திட்ட  அம்பாளின் திருவடிகள் தன்னை எமபயத்திலிருந்தும் காக்க வேண்டும் என விழைகிறார்.என்பதைப் பார்த்தோம்.

இன்று பத்தொன்பவாது பாடலில் அம்பாளின் திரு உருவை கண்ணால் கண்டு  தன் உள்ளத்தில் வாங்கியதால் தன் உள்ளத்திலே ஞானம் பிறந்தது என்ன வியப்போ என்று பாடுகிறார்

 

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தென் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன, திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே
.

 

பொருள்: 

வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து –                                                    நான் வேண்டியவுடன் வானவெளியில் வந்து நின்ற உனது திருமேனியைப் பார்த்து (நான் வேண்டியவுடன் அம்மை அப்பனாக மாதொருபாகனாக திருமணக் கோலத்துடன் தோன்றிய நின் திருமேனியைப் பார்த்து

விழியும் நெஞ்சும் –                                                                                                   பெரும்பேறு பெற்ற என் விழிகளும் நெஞ்சமும்


களிநின்ற வெள்ளம் கரைகண்டதில்லை அடைந்த ஆனந்தம் என்னும் வெள்ளம் கரையின்றிப் பெருகி நின்றது.


கருத்தினுள்ளே தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது –                                             உலக இன்பங்களில் மனம் மகிழ்ந்தால் அப்போது கருத்தழியும்; மனம் மயங்கும்; தெளிவு கெடும். உன்னைக் கண்டதால் விழிகளிலும் நெஞ்சிலும் பெருகும் மகிழ்ச்சி வெள்ளம் அத்தகைய விளைவுகளை ஏற்படுத்தவில்லை. கருத்தில் தெளிவான ஞானம் திகழ்கின்றது.


என்ன திருவுளமோ? –                                                                                                    உன் அருள் இவ்வளவு பெருமை வாய்ந்ததா? ஆனந்தத்தையும் அறிவையும் சேர்த்து அளித்த உன் திருவுளத்தின் பெருமையே பெருமை.


ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே –                          அருள் ஒளியும் ஞான ஒளியும் வீசுகின்ற நவகோண சக்கரத்தில் நவசக்தியாய் என்றும் நிலைத்து வாழ்பவளே

உரை

தேசு நிறைந்து நிற்கும் நவகோணத்தைப் பொருந்தி விரும்பித் தங்கும் அபிராமியே, வெளிப்படையாக அடியேனும் காணும்படி நின்ற நின்றன் திவ்வியத் திருமேனியைப் புறத்தே கண்டு கண்களிலும், அகத்தே கண்டு நெஞ்சத்திலும் மகிழ்ச்சி நிலைபெற்றதனால் உண்டான இன்ப வெள்ளத்துக்குக் கரை காண முடியவில்லை; அடியேனது உள்ளத்துள்ளே, தெளிந்து நின்ற மெய்ஞ்ஞானம் விளங்குகின்றது; இவ்வளவு பேரருளைச் செய்தற்குக் காரணம் எத்தகைய திருவுள்ளக் குறிப்போ?

விளக்கம்:

 ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.

 

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், அக்டோபர் 28, 2024

 


No comments:

Post a Comment