Tuesday, October 15, 2024

 

 

அபிராமி அந்தாதி -14

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், அக்டோபர் 14, 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை பதிமூன்று  பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் பதிநாலாவது பாடலைப் பார்ப்போம்.

நேற்றைய பாடலில் இந்த பூவுலகங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து மறைக்கும் டொழிலைச் செய்யும் அம்பாளை ,மூன்று தேவர்களுக்கும் முதன்மையானவளை அன்றி மற்றொரு தெய்வத்தை வணங்குவேனோ என் வினவினார்

இன்று  தேவர்களுக்கும் அசுர்களுக்கும் மூன்று கடவுள் களுக்கும் காக்ஷிக்கு அருமையாயிருந்தாலும் அடியவர்களுக்கு எளியவளாயிருப்பதாகச் சொல்லுகிறார்.

வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கெளிதாம் எம்பிராட்டி, நின் தண்ணளியே.

பொருள்:

 வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள் உன்னை என்றும் வணங்குபவர்கள் வானில் வாழும் தேவர்களும் தானவர்களான அரக்கர்களும்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே – உன்னை என்றும் தியானத்தில் வைத்துச் சிந்திப்பவர் நான்கு திசைகளிலும் நான்கு முகங்களைக் கொண்ட பிரம்மதேவனும் நாரணனுமே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் உன்னைத் தன் அன்பால் கட்டிப்போடுபவர் என்றும் அழியாத பரமானந்தப் பொருளான சிவபெருமானே.
பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே – ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த உலகத்தில் உன்னை வணங்கு தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. எங்கள் தலைவியே. அது வியப்பிற்குரியது.

உரை

 எம் தலைவியாகிய அபிராமியே, உன்னை வழிபடுவோர்கள் தேவர்களும் அசுரர்களும் ஆகிய இருவகையினருமாவார்: நின்னைத் தியானம் செய்பவர்கள் நல்ல பிரமதேவரும் திருமாலும்; தம்உள்ளத்துள்ளே அன்பினால் கட்டி வைப்பர், மேலான ஆனந்த உருவினராகிய சிவபெருமான்; ஆயினும் உன் குளிர்ந்த திருவருள் உலகில் நின்னைத் தரிசிப்பவர்களுக்கு எளிதாக இருக்கின்றது.

விளக்கம்

ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், அக்டோபர் 14, 2024

 


No comments:

Post a Comment