Monday, October 21, 2024

 

அபிராமி அந்தாதி -17

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், அக்டோபர் 21, 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை பதினாறு  பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் பதினேழாவது பாடலைப் பார்ப்போம்.

நேற்றைய  பதினாறாவது பாடலில் அளவிடமுடியாத ஒளியை உடைய அம்பாள் பஞ்சபூதங்களாகவும் பேரொளி வடிவமாகவும் திகழ்பவளின் பேருருவமும் கருணையும் என் சிற்றிவுக்கு எட்ட்டியது எப்படியோ என வியந்து பாடுகிறார் என்பதைப் பார்த்தோம்.

இன்று பதினேழாவது பாடலில் அம்பாளின் பேரழகுக்கு இணை இல்லாமல் தாமரை மலர்களும் ,காமனும் தோற்றுப் போவதையும்,,சிவபெருமானு அம்பாளின் பேரழகின் முன்னே தோற்று தன் மனதிலும் ,மேனியிலும் அம்பாளுக்கு இடம் கொடுத்துள்ளதாய் விவரிக்கின்றார்.

 

அதிசய மான வடிவுடை யாள், அர விந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி
பதிசய மான தபசய மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாக அன் றோவாம பாகத்தை வவ்வியதே?

 

பொருள்

 அதிசயம் ஆன வடிவுடையாள் 

அபிராமி அன்னை மிகவும் அதிசயமான அழகான உருவத்தை உடையவள்.


அரவிந்தம் எல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி 

 அரவிந்தமாகிய தாமரை மலரை முதற்கொண்டு எல்லா அழகிய மலர்களும் துதி செய்யக்கூடிய வெற்றி பொருந்திய திருமுகத்தை உடைய அழகிய கொடி போன்றவள்.


துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர் –

அவளின் கணவனோ இரதியின் கணவனாம் மன்மதனின் வெற்றிகளெல்லாம் தோல்வியாக நெற்றிக்கண்ணால் அவனை எரித்தவர்.


தம் மதிசயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே 

அப்படி மன்மதனை வென்றவர் தம் மனத்தையும் நீர் போல் குழையச்செய்து வெற்றிகொண்டு அவருடைய இடது பாகத்தையும் கவர்ந்து கொண்டாளே. அது பெரும் அதிசயம்.


ஆனனம் திருமுகம். எடுத்துக்காட்டுகள்:

கஜானனன் யானைமுகன்;

 ஷடானனன் ஆறுமுகன்;

பஞ்சானனன் ஐந்துமுகன் (சிவன்).

உரை:

 வியப்பைத் தரும் திருவுருவத்தை உடையவள், தாமரை மலர்கள் யாவும் தம்மினும் உயர்ந்த அழகுடையதென்று துதிப்பதற்குக் காரணமாக அவற்றை வென்று பெற்ற வெற்றியையுடைய திருமுகத்தைக் கொண்ட அழகிய கொடிபோல்பவள், தனக்குத் துணையாகிய இரதிக்கு நாயகனாகிய மன்மதன் பிற இடங்களில் பெற்ற வெற்றியெல்லாம் தம்முன் இழந்து தோல்வியாகும்படி, முற்காலத்தில் நெற்றிக் கண்ணைத் திறந்து நோக்கிய சிவபிரானது புத்தியை வெற்றி கொள்ளவல்லவோ அவரது இடத்திருப்பாகத்தைக் கவர்ந்து கொண்டது?

விளக்கம்

 அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், அக்டோபர் 21, 2024

  

No comments:

Post a Comment