Saturday, September 21, 2024

அபிராமி அந்தாதி 8

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது அபிராமி அந்தாதி தொடரில்  தொடர்ந்து நூறு அந்தாதி பாடல்களியும் பார்த்து வருகின்றோம

நேற்றைய ஏழாவது பதிவில் அபிராமிப் பட்டர் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு தயிர் கடையும் மத்தைப் போல உழலும் தனது ஜீவனை மூன்று தேவர்களும் தொழும் அபிராமியேக் காக்க வேண்டும் என்று வேண்டுவதைக் கண்டோம்

இன்று  அழகே வடிவான அம்பாள் ஈஸ்வரனின் துணையானவள் மகிஷாஸுரனை அழித்தவள்,பிரமாவின் கபாலத்தை கரங்களிலேக் கொண்டவள் என் சிந்தையுள் என்றும் உறைகின்றாள் எனும் பாடலின்  விளக்கத்தை இன்று காண்போம

சிவதாஸன் ஜகன்நாதன்

சனி, செப்டம்பர் 21 ,2024

ஓம் நமசிவாய:

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

சுந்தரி எந்தை துணைவி, என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

சுந்தரி

அழகில் சிறந்தவளே

எந்தை துணைவி 

என் தந்தையாகிய சிவபெருமானின்துணைவியே

என் பாசத்தொடரையெல்லாம்

என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை

வந்து அரி 

கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

சிந்துர வண்ணத்தினாள் 

சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே

மகிடன்தலைமேல்

அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று

அந்தரி

அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே

அழியாத கன்னிகை 

இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே

ஆரணத்தோன்

வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின்

கம் தரி கைத்தலத்தாள் 

வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே

மலர்த்தாள்

உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே

என் கருத்தனவே 

என்றும் என் நினைவில் நிற்கின்றன

 

பொருள்: சுந்தரி – அழகில் சிறந்தவளே
எந்தை துணைவி – என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே
என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி – என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.
சிந்துர வண்ணத்தினாள் – சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே
மகிடன் தலைமேல் அந்தரி – அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே
நீலி நீல நிற மேனியைக் கொண்டவளே
அழியாத கன்னிகை – இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே
ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் – வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே
மலர்த்தாள் என் கருத்தனவே – உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.

(உரை): சுந்தரி, எந்தையாகிய சிவபெருமானுக்குரிய தேவி, என்னுடைய பாசமாகிய தளைகளையெல்லாம் அடியேன்பால் எழுந்தருளி வந்து அழிக்கும் சிந்துர நிறம் பொருந்தியவள், மகிஷாசுரனது சிரத்தின்மேல் நிற்கும் அந்தரி, நீல நிறத்தை உடையவள், என்றும் அழிவில்லாத கன்னிகை, பிரமதேவனது கபாலத்தைத் தாங்குகின்ற திருக்கரத்தை உடையவள் ஆகிய அபிராமியின் தாமரை மலரைப் போன்ற திருத்தாள்கள் என் உள்ளத்துள்ளே என்றும் எழுந்தருளி யிருப்பவனவாம்.

விளக்கம்: என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்

இந்த பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன் .கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்


No comments:

Post a Comment