Monday, September 9, 2024

 


அபிராமி அந்தாதி 3

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது அபிராமி அந்தாதி தொடரில்  தொடர்ந்து நூறு அந்தாதி பாடல்களியும் பார்த்து வருகின்றோம்

நேற்றைய இரண்டாவது பாடலில் அம்பாள் எப்படி உயிர்களின் துணையாகவும் தாயாகவும் விளங்குகிறாள் என்பதனையும், வேதங்களின் ஸ்வரூபமாக விளங்குகிறாள் என்பதையும்  பார்த்தோம்

இன்று அம்பாளின் திருவருளினால் யாவருக்கும் கிட்டாத பேறு தனக்குக் கிட்டியதையும் அம்பாளின் திருவடியில் தாம் நீங்காது செறிந்து பற்றியும் அதனால் தீயோர் உற்வு முரிந்தது பற்றியும் கூறுகின்றார்.அதனை இன்று காண்போம்

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், செப்டம்பர் 09 ,2024

ஓம் நமசிவாய:

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமைஎண் ணாத கருமநெஞ்சால்,
மறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே.

பொருள்: 

நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் –                        மனிதர்கள் தங்கள் முன் வினைப் (கருமப்) பயனால், அதனால் ஏற்பட்ட வாசனைகளால் நிரம்பிய மனம் கொண்டு, உன்னிடம் அன்பு கொண்ட அடியவர் பெருமையை எண்ணி அவர்களைப் பணிந்து உன் அருள் பெறும் வழியைப் புரிந்தேன்                                                                               நரகில் மறிந்தே விழும் –                                                                                            தீய செயல்கள் செய்து நரகத்தில் கூட்டம் கூட்டமாய் சென்று விழும்
நரகுக்கு உறவாய மனிதரையே                                                              நரகத்திற்கு உறவுக் கூட்டம் போல் இருக்கும் மனிதர்களை
வெருவிப் பிறிந்தேன் –                                                                                             (நான்) வெறுத்து (அவர் மேல் கோபம் கொண்டு) அவர்களை விட்டு விலகி விட்டேன்.
அறிந்தேன் எவரும் அறியா மறையை –                                                   யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை நான் அறிந்து கொண்டேன். (அது உன் திருவடியை அடைவதே மிக எளிதான வழி என்பது).
அறிந்து கொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே அன்பர்கள் (அடியவர்கள்                                                                                                      விரும்பும் அனைத்தும் அருளும் செல்வமே (திருவே) –                               அந்த ரகசியத்தை நான் அறிந்து கொண்டு உனது திருவடிக்கே சரணமாக (அடைக்கலமாக) அடைந்தேன்.

(உரை): 

அருட்செல்வம் உடையாய், வேறு யாரும் அறியாத இரகசியத்தை நான் அறிந்தேன்; அங்ஙனம் அறிந்தமையால் அதுகொண்டு நின் திருவடியினிடத்தே அடைந்தேன்; நின் அடியார்கள் பெருமையை எண்ணாத பாவம் மிக்க மனம் காரண மாகக் குப்புற விழும் நரக லோகத்தின் தொடர்புடைய மனிதரை அஞ்சி விலகினேன்.

விளக்கம்: அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் உண்மையை அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.

இந்த பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன் .கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

 


No comments:

Post a Comment