Sunday, September 22, 2024

 

அபிராமி அந்தாதி 9

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிற்றுக்கிழமை  செப் 22 2024

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது அபிராமி அந்தாதி தொடரில்  தொடர்ந்து நூறு அந்தாதி பாடல்களியும் பார்த்து வருகின்றோம

நேற்றைய எட்டாவது பதிவில் அபிராமிப் பட்டர் அழகே வடிவான அம்பாள் ஈஸ்வரனின் துணையானவள் மகிஷாஸுரனை அழித்தவள்,பிரமாவின் கபாலத்தை கரங்களிலேக் கொண்டவள் என் சிந்தையுள் என்றும் உறைகின்றாள் என்ற விளக்கத்தைக் கண்டோம்

இன்று ப்ரபஞ்சம் முழுவதிற்கும் தாயாகி அருள்பவளும் எல்லோருக்கும் பாலூட்டும் தாயாய் அழகிய ஸ்தனங்களையும் கைகளில் வில்லும் அம்பும் கொண்டு ஈஸ்வரரின் கண்ணிலும் கருத்திலும் உறையும் புன்னகை திகழும் வதனமும் கொண்ட தாய் எனக்கு காக்ஷி தரவேண்டும் என விழைகிறார்

 

கருத்தன எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பிற்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தன மூரலும், நீயும், அம்மே, வந்தென் முன்னிற்கவே.

கருத்தன

கருப்பு நிறம் கொண்டு

எந்தை தன் கண்ணன

என் தந்தையான சிவபெருமானின் கருத்திலும் கண்ணிலும் நின்று விளங்குபவன

வண்ணக் கனக

வண்ணமயமான பொன்போன்ற

வெற்பிற் பெருத்தன்

மேருமலையைவிட பெரிதான

பால் அழும் பிள்ளைக்கு

பாலுக்கு வேண்டி அழுத ஞானசம்பந்தருக்கு பால்

நல்கின

ஊட்டி நின்று

பேரருள் கூர்

பெரும் அருட்கருணை உடைய

திருத்தன பாரமும்

கணமான ஸ்தனங்களும்

ஆரமும்

அதில் பொருந்தி நிற்கும் மாலைகளும்

செங்கை சிலையும் அம்பும்

சிவந்த கரங்களில் விளங்கும் வில்லும் அம்பும்

முருத்தன மூரலும்

மொட்டு அவிழ்வதைப் போன்ற அழகியபுன்னகையும்கொண்டு

நீயும் அம்மே வந்து

தாயே நீ வந்து

என்முன் நிற்கவே

என்முன் காக்ஷிதர வேண்டும்

 (உரை): தாயே, எம் தந்தையாராகிய சிவபிரானது திருவுள்ளத்தில் இருப்பனவும், திருவிழிகளில் உள்ளனவும், அழகு பெற்ற பொன் மலையாகிய மேருவைப் போலப் பருத்திருப்பனவும், அழுத திருஞானசம்பந்தப் பிள்ளையாருக்குப் பாலை வழங்கினவும் ஆகிய பெரிய திருவருள் மிகுந்த அழகிய திருத்தனபாரமும், அவற்றின்மேல் உள்ள முத்துமாலையும், சிவந்த திருக்கரத்தில் உள்ள கரும்பு வில்லும், மலரம்புகளும், மயிலிறகின் அடிக்குருத்துப் போன்ற புன்னகையும், தேவியாகிய நின் பூரணத் திருக்கோலமும் என்முன் நின்று காட்சியருளுக.

விளக்கம்: அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திரு ஸ்தனமேயாகும். ந்த ஸ்தங்களேன நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.

இத்துடன் இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.நாளை மீண்டும் சந்திப்போம்.இந்த பதிவினை குரல் விளக்கமாகவும் தந்துள்ளேன்.கேட்டு மகிழுங்கள்

ஓம் நமசிவாய:

ஸிவதாஸன் ஜகன்நாதன்

Saturday, September 21, 2024

அபிராமி அந்தாதி 8

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது அபிராமி அந்தாதி தொடரில்  தொடர்ந்து நூறு அந்தாதி பாடல்களியும் பார்த்து வருகின்றோம

நேற்றைய ஏழாவது பதிவில் அபிராமிப் பட்டர் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு தயிர் கடையும் மத்தைப் போல உழலும் தனது ஜீவனை மூன்று தேவர்களும் தொழும் அபிராமியேக் காக்க வேண்டும் என்று வேண்டுவதைக் கண்டோம்

இன்று  அழகே வடிவான அம்பாள் ஈஸ்வரனின் துணையானவள் மகிஷாஸுரனை அழித்தவள்,பிரமாவின் கபாலத்தை கரங்களிலேக் கொண்டவள் என் சிந்தையுள் என்றும் உறைகின்றாள் எனும் பாடலின்  விளக்கத்தை இன்று காண்போம

சிவதாஸன் ஜகன்நாதன்

சனி, செப்டம்பர் 21 ,2024

ஓம் நமசிவாய:

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

சுந்தரி எந்தை துணைவி, என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

சுந்தரி

அழகில் சிறந்தவளே

எந்தை துணைவி 

என் தந்தையாகிய சிவபெருமானின்துணைவியே

என் பாசத்தொடரையெல்லாம்

என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை

வந்து அரி 

கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

சிந்துர வண்ணத்தினாள் 

சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே

மகிடன்தலைமேல்

அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று

அந்தரி

அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே

அழியாத கன்னிகை 

இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே

ஆரணத்தோன்

வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின்

கம் தரி கைத்தலத்தாள் 

வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே

மலர்த்தாள்

உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே

என் கருத்தனவே 

என்றும் என் நினைவில் நிற்கின்றன

 

பொருள்: சுந்தரி – அழகில் சிறந்தவளே
எந்தை துணைவி – என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே
என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி – என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.
சிந்துர வண்ணத்தினாள் – சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே
மகிடன் தலைமேல் அந்தரி – அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே
நீலி நீல நிற மேனியைக் கொண்டவளே
அழியாத கன்னிகை – இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே
ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் – வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே
மலர்த்தாள் என் கருத்தனவே – உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.

(உரை): சுந்தரி, எந்தையாகிய சிவபெருமானுக்குரிய தேவி, என்னுடைய பாசமாகிய தளைகளையெல்லாம் அடியேன்பால் எழுந்தருளி வந்து அழிக்கும் சிந்துர நிறம் பொருந்தியவள், மகிஷாசுரனது சிரத்தின்மேல் நிற்கும் அந்தரி, நீல நிறத்தை உடையவள், என்றும் அழிவில்லாத கன்னிகை, பிரமதேவனது கபாலத்தைத் தாங்குகின்ற திருக்கரத்தை உடையவள் ஆகிய அபிராமியின் தாமரை மலரைப் போன்ற திருத்தாள்கள் என் உள்ளத்துள்ளே என்றும் எழுந்தருளி யிருப்பவனவாம்.

விளக்கம்: என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்

இந்த பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன் .கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்


Friday, September 20, 2024

 

 

அபிராமி அந்தாதி 7

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது அபிராமி அந்தாதி தொடரில்  தொடர்ந்து நூறு அந்தாதி பாடல்களியும் பார்த்து வருகின்றோம

சென்ற ஆறாவது பதிவில் அபிராமிப் பட்டர் அபிராமி அம்பாளை எப்படி தனது மானம்,வாக்கு மற்றும் காயம் ஆகிய மூன்று கரணங்களாலும் துதிக்கின்றேன் என்று கூறுவதைக் கண்டோம்

இன்று  பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு தயிர் கடையும் மத்தைப் போல உழலும் தந்து ஜீவனை மூன்று தேவர்களும் தொழும் அபிராமியேக் காக்க வேண்டும் என வேண்டுகிறார். அந்த விளக்கத்தை இன்று காண்போம

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி, செப்டம்பர் 20 ,2024

ஓம் நமசிவாய:

7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய், சிந்து ரானன சுந்தரியே.

ததியுறு மத்தின்

தயிரைக் கடையும் மத்தினைப் போல

சுழலும் என் ஆவி 

அங்கும் இங்கும் பிறப்பிலும் இறப்பிலும் சுழலும் என் உயிர்

தளர்விலது ஓர்

அச்சுழர்ச்சியில்மயங்கித்தளறா

கதியுறு வண்ணம்

நற்கதியை அடையுமாறு

கருது கண்டாய் 

எனக்கு அருள் புரிவாய்

கமலாலயனும்

தாமரையான் ப்ரம்மனும்

மதியுறு வேணி மகிழ்நனும் 

பிறையணிந்தவரும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும்

மாலும்

திருமாலும்

வணங்கி என்றும்

என்றென்றும் வணங்கும்

துதியுறு சேவடியாய் 

சிவந்த திருவடிகளையும்

சிந்துரானன

செஞ்சிந்தூரம் அணிந்த

சுந்தரியே

பேரெழிலாளே

 

படைத்தல் தொழில் புரியும் தாமரை மலரில் உறையும் பிரமனும்,வளர் பிறையணிந்து உன்னுடன் மகிழ்ந்திருக்கும் உன் நாயகன் சிவபெருமானும், காத்தல் தொழில் புரியும் திருமாலும் என்றென்றும் வணங்கி மகிழும் சிவந்த திருவடிகளையும் சிவந்த செந்தூரம் அணிந்த முகத்தையும் கொண்ட பேரெழில் சுந்தரியே

கடையப்படும் தயிரானது மத்தின் சுழற்சியில் அகப்பட்டு அங்கும் இங்கும் சுழல்வதுபோல் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியில் நான் அகப்பட்டு சுழலும் என் ஜீவன் அதிலிருந்து விடுபட்டு நான் மயங்காவண்ணம் எனக்கு அருள்புரிவாயே

இந்த பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன் .கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்