Wednesday, March 19, 2025

அபிராமி அந்தாதி-69

 

 

அபிராமி அந்தாதி-69

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், மார்ச், 17,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை அறுபத்து எட்டு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் அறுபத்து ஒன்பதாவது பாடலைப் பார்ப்போம்.

இந்தப் பாடலில் பட்டர் அம்பாளை தினம் தோத்திரம் செய்து த்யானம்  செய்வதால் விளையும் நன்மைகளையும் அம்பாள் என்ன வெல்லாம் தருவாள் என்பதையும் விளக்குகின்றார்

சகல சௌபாக்கியங்களும் அடைய

தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள், அபி ராமி கடைக்கண்களே.

தனம்

எல்லாவிதமான செல்வங்களும்

தரும்,

குறைவிலாது அருளும்

கல்வி

நிறைவான கல்வி

தரும்,

குறைவிலாது அருளும்

ஒருநாளும்

எந்த நாளிலும்

தளர்வறியா

சோர்ந்து போகாத

மனம்

மனமும்

தரும்,

குறைவிலாது அருளும்

தெய்வ வடிவும்

தெய்வீக அழகுடைய உருவமும்

தரும்,

குறைவிலாது அருளும்

நெஞ்சில்

எண்ணத்தில்

வஞ்சம் இல்லா

உள்ளொன்று வைத்துப் புறமொன்று

இனம் தரும்,

பேசாதார் உறவு தரும்

நல்லன

இன்னுன் என்னென்ன நல்லவையோ

எல்லாம் தரும்,

அவைகள் எல்லாம் தரும்

அன்பர்

அம்பாளிடம் அன்பான

என்பவர்க்கே

அடியவர் தமக்கே

கனம் தரும்

மேகம்போன்ற கருமையான

பூங் குழலாள்,

கூந்தலை உடைய

அபி ராமி

அன்னை அபிராமி அம்பாளின்

கடைக்கண்களே.

கடைக்கண் பார்வையே

 

பொருள்: 

தனம் தரும் – எல்லாவிதமான செல்வங்களும் தரும்
கல்வி தரும் – எல்லாவிதமான கல்வியையும் தரும்
ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் – என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும்
தெய்வ வடிவும் தரும் – தெய்வீகமான உருவத்தையும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் – உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும்
நல்லன எல்லாம் தரும் – இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும்
அன்பர் என்பவர்க்கே கனம் தரும் – எல்லோரிடமும் அம்மையிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் தரும்
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – பூவினைச் சூடிய கூந்தலையுடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே.

உரை: 

மேகத்தைப் போன்ற, பூவை அணிந்த கேச பாரத்தையுடைய அபிராமியின் கடைக்கண்கள், அத்தேவியின் அன்பர்களுக்கு எல்லாவகை ஐசுவரியங்களையும் தரும்; கல்வியைக் கொடுக்கும்: ஒரு நாளேனும் தளர்ச்சியை அறியாத உறுதியான மனத்தை அளிக்கும்; தெய்வீக அழகை வழங்கும்; மனத்தில் வஞ்சம் இல்லாத உறவினரையும் நண்பரையும் ஈயும்; இன்னும் எவை எவை நல்ல பொருள்களோ அவை எல்லாவற்றையும் வழங்கும்.

விளக்கம்: 

அபிராமித்தாயே! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.

 

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

திங்கள், மார்ச், 17,  2025