Sunday, February 2, 2025

அபிராமி - 57

 

 

அபிராமி அந்தாதி-57

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு, ஃபிப்ரவரி 2,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை ஐம்பத்து ஆறு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் ஐம்பத்தேழாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் பட்டர் அம்பாள் இந்த ப்ரபஞ்சம் முழுதும்  தாயாக இருந்து உணவளித்துக் காப்பதையும்,தான் அம்பாளைத் தொழுவதோடு மற்றவர்களையும் தொழுமாறு வைத்ததற்கான காரணம் என்ன என்று வினவுகிறார்.

வறுமை ஒழிய

ஐயன் அளந்தபடி இரு நாழிகொண்டு, அண்டம் எல்லாம்
உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்
மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உன்தன் மெய்யருளே.

ஐயன்

ஐயனாகிய பரமேஸ்வரன்

அளந்தபடி

உணவளிக்கக் கொடுத்த

இரு நாழிகொண்டு,

இரண்டு நாழி நெல்லைக்கொண்டு

அண்டம் எல்லாம்

இந்தப்ரபஞ்சம் முழுதும்

உய்ய

வளமொடு வாழ

அறம்செயும்

அருள் அறம் செய்யும்

உன்னையும்

உன் அருளையும்

போற்றி,

போற்றிப்புகழ்ந்து

ஒருவர் தம்பால்

வேறொரு மானிடரிடம்

செய்ய பசுந்தமிழ்ப்

நல்ல செந்தமிழிழ்

பாமாலையும்

பாக்களைப் பாடி

கொண்டு சென்று,

புகழ்ந்து பேசி

பொய்யும்

இல்லாதவைகளையும்

மெய்யும்

சில உண்மைகளையும்

இயம்பவைத்தாய்,

சொல்லவைத்தாயே

இதுவோ

இந்தச் செயல்தான்

உன்தன்மெய்யருளே

உந்தன் மெய்ப்பொருளாகுமோ?

 

பொருள்:- 

அளந்த படி இரு நாழி கொண்டு – சிவபெருமான் அளந்த இரு நாழி அரிசி  நெல்லைக் கொண்டு அண்டம் எல்லாம் உய்ய – உலகம் எல்லாம் உய்யும்படி

அறம் செயும் – அறங்கள் செய்யும்

உன்னையும் போற்றி – உன்னைப் போற்றிப் பாடிவிட்டு
ஒருவர் தம் பால் – பின் வேறொருவரிரம் சென்று
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று – நல்ல பசுந்தமிழ்ப் பாமாலையைக்கொண்டு சென்று
பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் – உண்மை இல்லாததையும் உண்மையையும் சொல்ல வைத்தாயே!
இதுவோ உந்தன் மெய்யருளே – இது தான் உந்தன் மெய்யருளா?

உரை:- 

தேவி, சிவபிரான் அளந்து அளித்த இரண்டுபடி நெல்லைக் கொண்டு உலகமெல்லாம் பசி நீங்கிப் பிழைக்கும்படி தர்மம் செய்கின்ற நின்னையும் துதித்து, மானிடராகிய செல்வர் ஒருவரிடத்தில் அவரைப் பாடிய செம்மையும் பசுமையும் உடைய தமிழ்ப்பாமாலையையும் கைக்கொண்டு போய்ப் பொய்யையும் மெய்யையும் கலந்து சொல்லும்படி அடியேனை வைத்தாய்; இதுவா நின் உண்மையான திருவருள்?

விளக்கம்:

 , அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்? (விரைந்து அருள் புரிவாயாக!). * ‘ஐயன் அளந்த படியிருநாழிஎன்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு.

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

ஞாயிறு, ஃபிப்ரவரி 2,  2025

No comments:

Post a Comment