Friday, February 7, 2025

அபிராமி அந்தாதி-59

 

 

அபிராமி அந்தாதி-59

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி, ஃபிப்ரவரி 7,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை ஐம்பத்து எட்டு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் ஐம்பத்து ஒன்பதாவது பாடலைப் பார்ப்போம்.

இந்த பாடலில் பட்டர் அம்பாளின் திருவடிகளே தனக்கு சரணம் என்று அறிந்திருந்தாலும், தவ நெறியே அதை அடைவத்ர்கான வழி என்பதை தான் உணர்ந்திருந்தாலும் தான் அதை செய்கிறேனா என்று எனக்குத்தெரியாது என்கிறார்

பிள்ளைகள் நல்லவர்களாக வளர

தஞ்சம் பிறிது இல்லை ஈதல்லது என்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள் சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

தஞ்சம்

எனக்குத்தஞ்சம் உன்திருவடி

பிறிது இல்லை

அல்லாது வேறில்லை

ஈதல்லது என்று

என்று அறிந்திருந்தும்

உன் தவநெறிக்கே

உன் திருவடிகளைப்பற்றும்

தவ நெறிக்கே

நெஞ்சம்

எனது நெஞ்சம்

பயில

எண்ணிப்பயில

நினைக்கின்றிலேன்

நினைக்கவைல்லை

ஒற்றை

தனித்த

இக்கு

கரும்பிலான

நீள்சிலையும்

நீண்ட வில்லும்

அலராகி

மல்ர்களாலான

அஞ்சு அம்பும்

ஐந்து அம்புகளும்

கொண்டு நிற்பவளே

பஞ்சு அஞ்சு

பஞ்சைப்போன்ற

மெல்லடியார்

மென்மையான பாதமுடைய

தாய்மார்கள்

பெற்ற பாலரையே

தாம் பெற்ற குழந்தைகளை

அறியார்

அறியாமல் தவறு   செய்தார்                                                          

எனினும்

என்றாலும்

அடியார்

அடிக்க மாட்டார்கள் அவ்வாறு                                              நீயுன் என்னை தண்டிக்காதே

 

பொருள்:

 தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று – உன் திருவடிகளைத் தவிர்த்து வேறு கதி இல்லை என்று அறிந்திருந்தும்
உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் – உன் திருவடிகளைப் பற்றி உய்யும் தவநெறிக்கே நெஞ்சத்தைப் பயிற்றுவிக்க நான் நினைக்கவில்லை.
ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி அலராகி – பெருமை மிக்க (நிகரில்லாத) நீண்ட வில்லாக்க கரும்பையும் ஐந்து அம்புகளாக மலர்களையும் கொண்டு நின்றவளே
அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே – பஞ்சைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய தாய்மார்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகள் அறியாமல தவறு செய்தாலும் அவர்களை தண்டிக்க மாட்டார்கள் (அடிக்க மாட்டார்கள்) அல்லவா? அது போல் நீயும் என்னை தண்டிக்காதே.

உரை: 

நீண்ட தனி வில்லும், ஐந்து அம்புகளும் முறையே கரும்பாகவும் மலராகவும் கைக்கொண்டு நின்ற தேவி, இஃதன்றி வேறு பற்றுக்கோடு இல்லையென்று நின்னைத் தியானிக்கும் தவ வழியில் மனத்தைப் பழகும்படி செய்ய எண்ணினேன் இல்லை; பஞ்சை மிதிப்பதாயினும் அஞ்சுகின்ற மென்மையான அடிகளையுடைய தாய்மார் தாம் பெற்ற பிள்ளைகள் அறியாமையை உடையவர்களாக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கமாட்டார்கள்.

அதுபோல் நீ என்னைப் புறக்கணித்துத் தண்டியாமல் அருள் புரிய வேண்டுமன்பது கருத்து

விளக்கம்: 

அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் அம்புகளையும் கொண்டவளே! உன்னைத் தவிர வேறொரு புகலிடம் இல்லையென்று தெரிந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில் நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னைத் தண்டிக்கக் கூடாது. புறக்கணிக்காமல் எனக்கு அருள் பாலிக்க வேண்டும். உலகத்திலுள்ள பேதைகளாகிய பஞ்சும் நாணக்கூடிய மெல்லிய அடிகளை உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள் அல்லவா? அதே போன்றே நீயும் எனக்கு அருள வேண்டும்.

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

வெள்ளி, ஃபிப்ரவரி 7,  2025

 

No comments:

Post a Comment