Saturday, February 22, 2025

அபிராமி அந்தாதி-63

 

 

அபிராமி அந்தாதி-63

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

சனி, ஃபிப்ரவரி 22,  2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை அறுபத்து இரண்டு பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் அறுபத்து மூன்றாவது பாடலைப் பார்ப்போம்.

இந்தப் பாடலில் பட்டர் அம்பாளின் சாக்த சமயமே எல்லாவற்றிலும் உயர்ந்த்து என்பதையும் ஷண்மதக்கோட்பாடுகளும் அதனுள் அடங்கும் என்பதையும் விளக்குகிறார்

 

அறிவு தெளிவோடு இருக்க

தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக்
கூறும் பொருள், குன்றிற் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.

சமயம்ஆறும்

ஆறு  ஷண்மதங்களுக்கும்

தலைவி

தலைவியாய்

இவளாய்

அம்பாளே

இருப்பது

இருப்பதை

அறிந்திருந்தும்

உணர்ந்திருந்தும்

வேறும்

சாக்தமல்லாத வேறு

சமயம்

மதக்கோட்பாடுகள்

உண்டு என்று

உயர்ந்தது என்று

கொண்டாடிய

கொண்டாடும்

வீணருக்கே.

அறிவிலிகளுக்கு

தேறும்படி

அவர்கள் உணரும்படி

சில ஏதுவும்

பல மேற்கோள்கள்

காட்டி,

காட்டி அவர்கள்

முன்

அம்பாலின் திருவடி

செல்கதிக்குக்

அடைவதற்கு

கூறும்

சொல்லப்படும்

பொருள்,

அறிவுரைகள்

குன்றிற்

கடினமான பாறையில்

கொட்டும்

அடிக்கப்படும்

தறி

மரத்திலான முளையைப்

குறிக்கும்

போன்று பயனற்றதாகும்

 

 (உரை):

 பெரியோர்களால் எடுத்தோதப்படும் ஆறு சமயங்களுக்கும் தெய்வம் அபிராமியாகிய இவளாக இருப்பதை அறிந்திருந்தாலும், இவளையன்றி வேறு தெய்வத்தைக் கூறும் சமயமும் உண்டு என்று அதனைப் பாராட்டிய வீணர்களுக்கு அவர்கள் உண்மை தெளியும்படி சில பிரமாணங்களைக் காட்டி, அவர்கள் மேலே செல்லும் நற்கதிக்கு உபகாரமாக அறிவுறுத்தப்படும் பொருள்கள் மலைப் பாறையிலே அதனைத் தகர்க்கும்பொருட்டு முட்டும் மரத்தூணை ஒக்கும்.

விளக்கம்: 

ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

சனி, ஃபிப்ரவரி 22,  2025

 


No comments:

Post a Comment