Thursday, September 12, 2024

 

அபிராமி அந்தாதி 6

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது அபிராமி அந்தாதி தொடரில்  தொடர்ந்து நூறு அந்தாதி பாடல்களியும் பார்த்து வருகின்றோம்

நேற்றை ஐந்தாவது பாடலில் எல்லாவிதமான மூன்று நிலைகளிலும் நிலைத்து நிற்பவளும் கொடியிடையை உடையவளுமானவளும், நீலகண்டரான பரமன் ஆலகாலத்தை  உண்டபோது அதைத் தொண்டைக் குழியிலே நிறுத்தியவளுமான அன்னையின் திருவடிகளை தனது தலையிலே தாங்குவதாக கூறுகின்றார் என்பதையும்  பார்த்தோம்

இன்று அபிராமிப் பட்டர் அபிராமி அம்பாளை எப்படி தனது மானம்,வாக்கு மற்றும் காயம் ஆகிய மூன்று கரணங்களாலும் துதிக்கின்றேன் என்று கூறுவதைக் காணலாம் அந்த விளக்கத்தை இன்று காண்போம

சிவதாஸன் ஜகன்நாதன்

வியாழன், செப்டம்பர் 12 ,2024

ஓம் நமசிவாய:

 

சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம், சிந்துர வண்ணப்பெண்ணே,
முன்னிய நின்அடியாருடன் கூடி, முறைமுறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

சென்னியது

எனது தலையின்மேலே எப்பொழுதும்

உன் பொன் திருவடித் தாமரை

உன் தாமரை மலர்போன்ற அழகிய திருவடிகளே

சிந்தையுள்ளே மன்னியது

என்றென்றும் என் சிந்தையுள் நிலைத்து நிற்பது

உந்திருமந்திரம்

உன்னுடைய திருநாம் என்னும் பெரும் மந்திரமே

சிந்தூர வண்ணப் பெண்ணே

செந்தூரம் போன்று சிவந்த அழகிய தேவியே

முன்னிய நின் அடியாருடன் கூடி

நான் எப்போதும் கூடியிருப்பது உன் அடியார்களையே. என் எல்லா செயல்களையும் அவர்களை முன்னிட்டு செய்கிறேன்.

முறை முறையே

தினம் தோறும் நான் முறையுடன்

பன்னியது

பாராயணம் செய்தது

உந்தன் பரம

உன்னுடைய உயர்ந்த

ஆகம பத்ததியே

ஆகம வழியிலான நெறி முறைகளையே

 

சிந்துரத்தின் சென்னிறம் வாய்ந்த திருமேனியையுடைய தேவி, என் சிரத்தின்மேல் முடிபோலத் திகழ்வது நின் பொலிவு பெற்ற திருவடியாகிய தாமரை மலர்; நெஞ்சத்துள் நிலைபெற்று இருப்பது உன் அழகிய மந்திரம்; நின்னையே தியானிக்கும் நின் அடியார்களுடன் கலந்து முறைப்படி அடுத்தடுத்து நான் பாராயணம் செய்வது உன்னுடைய மேலான ஆகம பத்ததியே யாகும்.

விளக்கம்: செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!

 

இந்த பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன் .கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

 


Wednesday, September 11, 2024

 

அபிராமி அந்தாதி 5

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது அபிராமி அந்தாதி தொடரில்  தொடர்ந்து நூறு அந்தாதி பாடல்களியும் பார்த்து வருகின்றோம்

நேற்றைய  நாலாவது பாடலில் பேறு பெற்ற மனிதர்களும் தேவர்களும் முனிவர்களும் தொழும் அன்னையையும் அவரோடு இணைந்துறையும் சிவபெருமானையும் தன்னுடைய சிந்தையில் புகுந்து உள்ளத்தில் குடிபெற வேண்டும் என வேண்டி விழைகிறார்  என்பதையும்  பார்த்தோம்

இன்று எல்லாவிதமான மூன்று நிலைகளிலும் நிலைத்து நிற்பவளும் கொடியிடையை உடையவளுமானவளும், நீலகண்டரான பரமன் ஆலகாலத்தை  உண்டபோது அதைத் தொண்டைக் குழியிலே நிறுத்தியவளுமான அன்னையின் திருவடிகளை தனது தலையிலே தாங்குவதாக கூறுகின்றார் அந்த விளக்கத்தை இன்று காண்போம்

சிவதாஸன் ஜகன்நாதன்

புதன், செப்டம்பர் 11 ,2024

ஓம் நமசிவாய:

பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்
அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி, பாதம் என் சென்னியதே.

பொருந்திய முப்புரை

உயிர்களிடத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நிலைகளிலும், இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்று நிலைகளிலும், விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்னும் மூன்று நிலைகளிலும், பூலோகம், புவர்லோகம், சுவர்க்க லோகம் என்னும் மூன்று நிலைகளிலும் பொருந்தி இருப்பவளே

செப்புரை செய்யும்

புகழ்ந்து பேசுவதற்கேற்ப

புனர்முலையால்

மிக்க அழகுடனும் கட்டுடனும் பெருத்தும் மிக்க அழகுடன் விளங்கும் கூடி நிற்கும் ஸ்தனங்கனகளால், அவற்றின் பாரத்தால்

வருந்திய

வருந்துகின்ற

வஞ்சி மருங்குல்

வஞ்சிக்கொடிபோன்ற இடையை உடைய

மனோன்மணியே

அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்லும் மனோன்மணியே

வார்சடையோன் அருந்திய

நீண்ட ஜடாமுடியை உடைய பரமன் உண்ட ஆலகால நஞ்சை

நஞ்சமுதாக்கிய

அந்த நஞ்சை தடுத்து கீழிறங்காமல் நிறுத்தி அதை அமுதமாக்கிய

அம்பிகையே

அபிராமி அம்பிகையானதாயே

அம்புயமேல்

அழகிய தாமரை மலர் மேல்

திருந்திய சுந்தரி

எழிலுற வீற்றிருக்கும் எழில் தாயே

அந்தரி பாதம்

உலகுக்கெல்லாம் ஆதியும் அந்தமுமான தாயே உன் திருப்பாதம்

என் சென்னியதே

எனது தலையில் பொருத்திக்கொண்டேனே

 

விளக்கம்: 

அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.

இந்த பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன் .கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

 

Tuesday, September 10, 2024

 

அபிராமி அந்தாதி 4

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.நமது அபிராமி அந்தாதி தொடரில்  தொடர்ந்து நூறு அந்தாதி பாடல்களியும் பார்த்து வருகின்றோம்

நேற்றைய மூன்றாவது பாடலில் அம்பாளின் திருவருளினால் யாவருக்கும் கிட்டாத பேறு தனக்குக் கிட்டியதையும் அம்பாளின் திருவடியில் தாம் நீங்காது செறிந்து பற்றியும் அதனால் தீயோர் உற்வு முரிந்தது பற்றியும் கூறுகின்றார் பாடலில் என்பதையும்  பார்த்தோம்

இன்று. நாலாவது பாடலில் பேறு பெற்ற மனிதர்களும் தேவர்களும் முனிவர்களும் தொழும் அன்னையையும் அவரோடு இணைந்துறையும் சிவபெருமானையும் தன்னுடைய சிந்தையில் புகுந்து உள்ளத்தில் குடிபெற வேண்டும் என வேண்டி விழைகிறார்.அதனை இன்று காண்போம்

சிவதாஸன் ஜகன்நாதன்

செவ்வாய், செப்டம்பர் 10 ,2024

ஓம் நமசிவாய:

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே, கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்திஎந் நாளும் பொருந்துகவே.

மனிதரும் தேவரும்

மாந்தர்களும்,தேவர்களும்

மாயா முனிவரும்

என்றும் அழிவிலா முனிவரும்

வந்து

உனை நாடி வந்து

சென்னி

தம் தலை திருவடி வைத்து

குனிதரும்

வணங்கும்

சேவடி கோமளமே

சிவந்த மென்மையான பாதங்களையுடைய கோமளவல்லியே

கொன்றைவார்

கொன்றை மலரணிந்த

சடைமேல்

ஜடாமுடியில்

பனிதரும் திங்களும்

குளிர்ந்த பிறையையும்

பாம்பும்

நாகங்களும்

பாகீரதியும் படைத்த

கங்கையையும் அணிந்த

புனிதரும் நீயும்

ப்ரமனும் நீயும்

என்புந்தி எந்நாளும்

என் உள்ளத்தில் எப்பொழுதும்

பொருந்துகவே

நிலைபெற்று உறையவே

 

 பூவுலக வாசிகளாகிய மனிதர்களும் பொன்னுலக வாணராகிய தேவர்களும் மரணம் இல்லாத பெருமையையுடைய முனிவர்களும் வந்து தலை வணங்கும் செம்மையாகிய திருவடிகளும் மெல்லியல்பும் உடைய தேவியே. கொன்றைக் கண்ணியை அணிந்த நீண்ட சடாபாரத்தின் மேல் பனியை உண்டாக்குகின்ற சந்திரனையும் பாம்பையும் கங்கையையும் கொண்ட தூயவராகிய சிவபிரானும் நீயும் என் அறிவினிடத்தே எக்காலத்திலும் இணைந்து எழுந்தருள்வீர்காளாக!

மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.


இந்த பாடலுக்கான விரிவான விளக்கத்தை என்னுடைய குரல் பதிவில் தந்துள்ளேன் .கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேருட் கருணைக்குப் பாத்திரமாகுங்கள்

நாளை மீண்டும் சந்திப்போம்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்