Saturday, April 27, 2024

 



 

 

திருவாசகம்

 

பால் நினைந்து ஊட்டும் தாயினும்                                                                                       சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி                                                             உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம்                                                                                         திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்                                எங்கெழுந்தருளுவது இனியே!

நடைமுறை உலகத்தைப் பார்த்தால் மூன்று விதமான தாய்மார்களைப் பார்க்கலாம். குழந்தை பசியால் அழுதாலும் பால் கொடுக்காதவள் கடைநிலைத் தாய்.                                                                                                                         குழந்தை அழுதவுடன் பால் கொடுப்பவள் இடைநிலைத் தாய். குழந்தை அழுவதற்கு முன்னர் பசி நேரம் என்று அறிந்து நேரா நேரத்திற்குப் பால் தருபவள் தலைநிலைத் தாய்.                                                                                                      அப்படி காலமறிந்து பால் ஊட்டும் தலைநிலைத் தாயையும் விடச் சிறந்தவன் இறைவன்.                                                                                                                                    தலைநிலைத் தாயைவிட மிகவும் பரிந்து வாத்ஸல்யமுடன் உலகத்து உயிர்களையெல்லாம் காப்பவன் தாயுமானவன்.

மானிடத்தாய் உடலை மட்டுமே வளர்க்கும் போது இறைவனோ உடலோடு உள்ளத்தையும் சேர்த்து வளர்ப்பவன்.                                                                                  அதனால் ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்குகின்றான். உள்ளொளி பெருகியதால் உள்ளத்தின் உள்ளே என்று அழியாததாகவும் திகட்டாததாகவும் உள்ள இன்பத் தேன் பொழிந்தது.

உள்ளே பொழிந்த தேன் வெளியிலும் பொங்கிப் பரவியது. உள்ளே மட்டும் காக்காமல் வெளியிலும் எத்திசையிலும் இறைவன் இருந்து அடியவரைக் காக்கின்றான். அப்படி என்றும் நீங்காத செல்வமாக இருப்பவன் சிவபெருமான்.

அவன் நம்மைத் தொடர்ந்து எங்கும் நிறைந்திருக்க அவனை நாம் தொடர்ந்து சென்று சிக்கெனப் பிடித்தல் எளிது தானே.                                                                 உண்மையில் அவன் நம்மைத் தொடர நாம் தான் அவனை உதறுகின்றோம்.                                                                                                                                                                      அதனால் அடிகளார் சிக்கெனப் பிடித்த போது அவனால் எங்கும் எழுந்தருள முடியாது.                                                                                                                                                ஆனால் மறைத்தலும் அவன் தொழிலாதலால் நாம் அவனைப் பிடிக்கும் போது மறைந்துச் செல்வதைப் போல் ஒரு போக்கு காட்டுவான்.                                                                                                                                                                                                                   அப்போது 'நீயும் எனைத் தொடர்ந்தாய். நானும் உனைத் தொடர்ந்தேன். இப்போது எங்கே சென்றீர்?' என்ற கேள்வி எழுந்து உருக்கும். அதுவே இப்பாடலில் வெளிப்பட்டது.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து...


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!

பால் நினைந்து ஊட்டும் - குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தை அறிந்து பால் ஊட்டுகின்ற

தாயினும் சாலப் பரிந்து - தாயைவிட மிகவும் அன்பு கொண்டு

நீ பாவியேனுடைய - நீ பாவியாகிய என்னுடைய

ஊனினை உருக்கி - உடம்பை உருக்கி

 உள்ளொளி பெருக்கி - உள்ளத்தில் அறிவொளி பெருக்கி

 உலப்பிலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து - அழியாத இன்பமாகியத் தேனினைச் சொரிந்து

 புறம் புறம் திரிந்த செல்வமே - எல்லாப் புறங்களிலும் கூட வந்து என்னைக் காக்கும் செல்வமே!

 சிவபெருமானே - சிவபிரானே!

 யான் உனைத் தொடர்ந்து - நான் உன்னைத் தொடர்ந்து

 சிக்கெனப் பிடித்தேன் - உறுதியாகப் பற்றினேன்

 எங்கெழுந்தருளுவது இனியே - இனிமேல் நீ எங்கே எழுந்தருளிச் செல்வது?

பசியை காலத்தால் அறிந்து பால் ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி உள்ளத்திலே அறிவொளி பெருக்கி அழியாத ஆனந்தத்தைப் பொழிந்தாய். உள்ளே ஆனந்தத்தைத் தந்ததோடு வெளியே எப்புறத்திலும் நின்று காத்தாய். எனது செல்வமே சிவபெருமானே! நான் உன்னை உறுதியாகப் பற்றினேன்! இனி எங்கே எழுந்தருளுகிறீர்?!

 சிவதாஸன் ஜகன்நாதன்


No comments:

Post a Comment