நாள் என் செயும் வினை தான் என் செயும்
இது கந்தர்
அலங்காரத்தில் அருணகிரிநாதர் அருளியுள்ள
38 வது பாடலாகும்
இந்த உலகத்தில் எந்த நல்ல காரியம் செய்வதென்றாலும் நல்ல நேரம்
பார்த்துச் செய்வது தான் வழக்கம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது போன்ற
பழமொழிகள் இந்த வழக்கத்திலிருந்து வந்தவைதான். இந்த மாதிரி ஒவ்வொரு வார
நாட்களுக்கும், சந்திரனின்
சுற்றில் வரும் 15 திதிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும்
தங்கள் அனுபவத்தில் கண்ட பலன்களைச் சொல்லி வைத்துள்ளனர் நம் பெரியோர். நல்ல நாளில்
நல்ல நேரத்தில் நல்ல காரியத்தைத் துவக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
ஆனால் நாளடைவில் இந்த நல்ல பழக்கம் ஒரு மூட நம்பிக்கை அளவு
வளர்ந்து நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் பல நேரம் அமைந்துவிடுகிறது. நல்ல
காரியம் எப்போதுமே நன்மையிலேயே முடியும். அதை நல்ல நேரத்தில் துவங்கினால் நன்மை
மிகுதியாய்க் கிடைக்கும் என்பதே நாள் பார்க்கும் வழக்கத்தின் பொருள். ஆனால் அது
நல்ல காரியம் செய்வதற்கே தடையாய் வந்தால் அந்த வழக்கத்தையே தூர எறிய வேண்டியது
தான்.
நாளுக்கு பிறகு, ஒருவனுடைய முயற்சி வெற்றியடைவது அவனவன் முன்னர் செய்துள்ள
நல்வினைத் தீவினைப் பயனை ஒட்டியே உள்ளது. அவன் நல்வினை அதிகம் செய்திருப்பின் அவன்
முயற்சி சீக்கிரம் பலன் தருகிறது. தீவினை அதிகம் என்றால் சிறிது தாமதம்
ஏற்படுகிறது. ஆனால் தெய்வப்புலவர் சொன்னது போல் 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்'. அதில் எந்த
சந்தேகமும் இல்லை.
அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்ப நவகோள்கள் பலன் தருகிறார்கள்
என்பது நம் நாட்டவரின் நம்பிக்கை. நல்வினைகளின் பலன் பெருகவும் தீவினைகளின் பலன்
குறையவும் நவகோள்களை வழிபட்டால் நல்லது என்றும் நம் நாட்டவர் நம்புகின்றனர்.
போகும் நேரம் வந்தால் கூற்றுவன் வந்து அழைத்துக் கொண்டு
போய்விடுவான். என்னை விட்டுவிடு; அதோ அவன் என்னை விட வயதில் மூத்தவன்; நான்
இன்னும் நிறைய கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பலவாறாகக் கெஞ்சினாலும்
எந்தவிதமான இரக்கமும் காட்டாமல் அந்த கொடுங்கூற்றுவன் தன் கடமையை
நிறைவேற்றிவிடுவான்.
ஆனால் முருகப் பெருமான் அருள் இருந்தால் இவை அனைத்தின்
பாதிப்பிலிருந்தும் நாம் தப்பலாம் என்கிறார் அருணகிரிநாதர்.
குமரேசரின் இரண்டு திருவடிகளும், அந்த திருவடிகளில் விளங்கும்
சிலம்பும், சதங்கையும், தண்டையும், அவனுடைய ஆறு
திருமுகங்களும், திரண்ட
பன்னிரு தோள்களும், அந்த
தோள்களின் மேல் அணிந்த கடம்ப மாலையும், எனக்கு முன் வந்து தோன்றினால் நாள்
என்னை என்ன செய்யும்? என்னுடைய
நல்வினை தீவினைகள் தான் என்ன செய்யும்? என்னைத் தேடி வந்து என் வினைகளுக்கு
ஏற்ப பலன் கொடுக்கும் நவகோள்கள் தான் என்ன செய்யும்? கொடிய யமன் தான் என்ன செய்யமுடியும்? ஒன்றும்
செய்ய முடியாது - என்கிறார் அருணகிரிநாதர்.
முக்கியமாக
கொடுமையான கூற்றுவன் நிச்சயமாக வருவான் ஆனால்
முருகன் அருள் இருந்தால்கூற்றுவன் அகாலத்தில்
வரமாட்டான் என்பதே அதன் பொருளாகும்
அதென்ன குமரனின் அழகை வர்ணிக்கும் போது காலுக்கும், முகத்துக்கும், தோளுக்கும்
தாவுகிறாரே என்றால் அதற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. நாம் நாளையும், வினையையும், கோளையும், கொடும்
கூற்றையும் எண்ணி நடுங்கும் போது 'யாமிருக்கப் பயமேன்' என்று அவன்
வருவதை நமக்கு முதன்முதலில் சொல்வது அவன் இரண்டு தாள்களும் அதில் அவன் அணிந்துள்ள
ஓசை மிகுந்த சிலம்பும், சதங்கையும், தண்டையும்
தானே. அதனால் அவற்றை முதலில் பாடுகிறார்.
அப்படி அவன் நம் முன்னே வந்தவுடன் நமக்குத் தெரிவது அவனது ஆறு
முகங்களும் தான். அதனால் அதனை அடுத்துப் பாடுகிறார். பின்னர் தான் அவனது அழகிய
பன்னிரு தோள்களும் அவற்றின் மேல் அவன் அணிந்துள்ள மணம் மிகுந்த கடம்ப மாலையும்
தெரிகிறது.
சரி எப்போது இது நடக்கும்? நாம் எப்போது நம் நினைவில் அவனை
எப்பொழுதும் வைத்துக் கொண்டிருக்கிறோமோ அப்போது நடக்கும். அப்படி நாம் அவனை
எப்போதும் நினைத்தால் நமக்கு அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்.
சரி எப்படி நாம் அவனை எப்போதும் நம் நினைவில் வைத்துக்கொள்வது? அவன் தாளை
நாம் வணங்கினால் அது நடக்கும்.
சரி நான் நினைத்தால் அவன் தாளை வணங்கிவிட முடியுமா? எத்தனையோ
மயக்கங்கள் இருக்கின்றனவே எனைத் தடுக்க? உண்மைதான். அவன் அருளாலேயே அவன் தாள்
வணங்க முடியும். அதனால் தான் அருணகிரியும் 'தோன்றிடினே' என்கிறார்.
நான் அவனைத் தோன்றவைக்கவில்லை. அவன் தனது அருளாலே தானாய்த் தோன்றினால் நாள் என்
செயும்.... என்கிறார்.
அப்படி என்றால் நாம் என்ன தான் செய்வது?
அவன் தாள்
வணங்க அவன் அருளை வேண்டுவதே நாம் இப்போது செய்யக்கூடியது. அதுவே நாம் அவனை அடைய
முதற்படி.
No comments:
Post a Comment