ஸ்ரீ அகோரமூர்த்திப்பதிகம்
ஸ்ரீ அகோரமூர்த்திப் பதிகம்
முக்கண்ணன் மூலவன் முழுமுதற்கடவுள் மூர்த்தியானவன்
எக்கணமும் எல்லோருக்கும் எல்லாம்
அருளும் ஏகன்
தக்கன் தலைக்கனம் தானே அழித்து உய்வித்தத் தலைவன்
பக்தர் பணிந்து புகழ் வெண்காட்டில் அகோரீசானாய் அருள்வாரே 1
கருநிறம் கொண்டு பெரு நாகங்கள் பலப்பூண்டு
திருவடிகளிரண்டும் அழகு நடைக்கோலம் கொண்டு
மருத்துவன் மதமடக்கி மாறா அன்போடனுக்ரகித்து
வருமடியார் துயர் நீக்கி வெண்காட்டில் அகோரீசனாயருள்வாரே 2
வந்துன் திருவடி வந்தனம் செய்து வழிபடுமடியார்
எந்த நோயும் எக்காலும் தீண்டாது நீண்ட காலம்
பந்தமுடன் பாங்காய் வாழ்ந்திட பலநலமருளும் பாபவினாசன்
அந்தமில் அழகுறு வெண்காட்டில் அகோரீசனாய் அருள்வாரே 3
பூரம் ந்ந்நாளில் பரமன் நெற்றிக்கண்ணின்று பெரு
வீரமுடன் தோன்றி வல்வரம் பெற்ற மருத்துவாசுரனை
அகோர உருக்கொண்டு அடக்கியாண்டு அருளிய ஈசன்
ஆரம் மணியாற் பூண்டு வெண்காட்டில் அகோரீசனாய் அருள்வாரே 4
உடல் நிறம் கருமையாக உள்ளம் தூய வெண்மையாயிலங்க
அடல்புரிந்து வென்றிடும் படைக்கலங்கள் பலப்பலக்கைக்கொண்டு
கடலினும் பெரிய அருட்கருணையுடன் எரிசிரமுடன் பந்நாகம்
உடல்முழுதும் பூண்டு வெண்காட்டில் அகோரீசனாய் அருள்வாரே 5
மோகன ராகம் மிக விழையும் மகேசன் உமையொரு
பாகன் பாபவிநாசன் பரமேசன் பற்றுமிகுப் பெருரிஷப
வாகனமதில்வரும் விஸ்வேசன் வரங்கள் வற்றாதருளும்
ஏகன் எங்கள் நேசன் வெண்காட்டில் அகோரீசனாய் அருள்வாரே 6
வாரங்களில் விமலன் விரும்பி விழைவது ரவிவாரம்
ஆரங்களில் அவர் ஆர்வமுடன் அணிவது மணியாரம் எல்லா
நேரங்களிலும் தவ்றாது நமக்களிப்பது நற்கருணையே அச்சிவன்
வீர நடைக்கொண்டு வெண்காட்டில் அகோரீசனாய் அருள்வாரே 7
சாந்தமே உருக்கொண்ட சுவேதீசன் வரங்கள் தப்பாது
மாந்தர்க்கும் மகிமை உடையோருக்கும் வாரி வழங்கும் வித்யா
காந்தன் சுவேதகேதுவை காலனிடமிருந்து காத்த
வேந்தன் வீரசிவன் வெண்காட்டில் அகோரீசனாய் அருள்வாரே 8
ஈசனின் தென் முகமாய்த்திகழும் பரம தயாளன் பாப
வினாசன் ஆலகாலமுண்டு கண்டம் கருத்த கருணாதயாளன்
மகேசனின் நெற்றிக்கண்ணின்றுதித்த மணிமாலையணி
பரமேசன் பக்தர்நேசன் வெண்காட்டில் அகோரீசனாய் அருள்வாரே 9
மூவிருக்கங்கள் ஆல் கொன்றை நல் வில்வமாக அமைய
மூவருள் தேவியர் சுவேதகாளி துர்கை வித்யாம்பிகையாக
பாவமறுக்கும் சூரிய அக்னி சந்திர தீர்த்தங்கள் இலங்கும்
பாவலர் பாடிப்புகழ் வெண்காட்டில் அகோரீசனாய் அருள்வாரே 10
ஈசனின் எழிலுறு வீரஉருவான நேசமிகு அகோரீசனின்
மாசற்ற மகிமைமிகு பெருமையினை கணமும் மறவாசிவ
நேசன் ஜகன்னாதன் தேசமும் மக்களும்
நலமுறப்பாடியதை
பாசமுடன் தினம் பாடுவோர் பல நல்மும் பெறுவார் திண்ணமே
திருசிற்றம்பலம்
No comments:
Post a Comment