அபிராமி அந்தாதி-68
நிலம் வீடு
போன்ற செல்வங்கள் பெருக
பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும்,
ஊரும் முருகு சுவையொளி
யூறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே
சாரும் தவமுடையார் படை யாத
தனம் இல்லையே.
பொருள்: பாரும் புனலும் கனலும் வெங்காலும்
படர்விசும்பும் –
உலகமும், நீரும், நெருப்பும், காற்றும், எங்கும் படர்ந்திருக்கும் ஆகாயமும்
ஊரும் முருகுசுவை ஒளி ஊறு
ஒலி ஒன்றுபடச் –
இவற்றின் தன்மையாக
நிற்கும் நறுமணம், சுவை, ஒளி, உணர்வு, ஒலி இவை
எல்லாம் ஒன்றுபட்டுச்
சேரும் தலைவி சிவகாம
சுந்தரி சீறடிக்கே –
சேரும் சிறிய திருவடிகளை
உடைய எங்கள் தலைவி சிவகாம சுந்தரியின் திருவடியிலேயே
சாரும் தவம் உடையார்
படையாத தனம் இல்லையே –
சார்ந்து நிற்கும்
புண்ணியம்/பாக்கியம் உடையவர்கள்
பெறாத செல்வம் எதுவும் இல்லை.
(உரை): பிருதிவியும் அப்புவும் அக்கினியும்
வேகமாகிய வாயுவும் படர்ந்த ஆகாசமும் ஆகிய ஐந்து பூதங்களிலும் முறையே பரவிய
கந்தமும், சுவையும், ஒளியும், பரிசமும், சத்தமுமாகிய
தன்மாத்திரைகள் இசையும்படி அவற்றினிடத்தே வியாபித்து நிற்கும் பரமேசுவரியாகிய
சிவகாமசுந்தரியின் சிறிய திருவடிக்கண்ணே சார்ந்து நிற்கும் தவத்தை உடைய அடியார்கள்
தமக்கே உரியனவாகப் பெறாத செல்வம் ஒன்றும் இல்லை. எல்லாச் செல்வமும் அவர் அடைவர் என்பதாம்.
சக்தியின் அம்சம் யாண்டும்
கலத்தினால்தான் பார் முதலிய கந்தம் முதலியவற்றோடு இணைந்தன. சிவகாமசுந்தரி-தில்லைவாணர் தேவி; “தில்லை யூரர்தம் பாகத்துமை” (காப்பு).
விளக்கம்: ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய
திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும்
இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும்
பெறுவர்).
No comments:
Post a Comment