Saturday, March 1, 2025

அபிராமி அந்தாதி-64

 

 

அபிராமி அந்தாதி-64

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

சனி, மார்ச், 1, 2025

ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். நாம் நமது அபிராமி அந்தாதி தொடரில் இதுவரை அறுபத்து மூன்று பாடல் களைப் பார்த்துவிட்டோம்.இன்று நாம் அறுபத்து நாலாவது பாடலைப் பார்ப்போம்.

இந்தப் பாடலில் பட்டர் அம்பாளின் கருணையை பெற்ற சத்வகுணத்தினர் அம்பாளையே எப்பொழுதும் நினைப்பர், அவளையன்றி வேறொரு தெய்வத்தை வணங்க மாட்டர்கள் என்று கூறுகின்றார்

பக்தி பெருக

வீணே பலி கவர் தெய்வங்கள்பாற் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன், ஒருபொழுதும் திரு மேனி ப்ர காசமின்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.

பலி கவர்

பலிபோன்ற காணிக்கைகளை விரும்பும்

தெய்வங்கள்

அருளில்லாத தெய்வங்கள்

பால்

நோக்கி

வீணே

வீணாகச்

சென்று

சென்று

மிக்க அன்பு

அவர்கள் மீது அதிக அன்பு

பூணேன்

செலுத்தமாட்டேன்

உனக்கு

எந்தக்குறையுமற்ற உன்னிடம்

அன்பு பூண்டு

மட்டுமே அன்பு செலுத்தி

கொண்டேன்

மகிழ்வேன்

நின் புகழ்ச்சி

உன்னுடைய புகழ்

அன்றிப்

அல்லாது மற்றொன்றை

ஒரு பொழுதும் 

எக்காலும்

பேணேன்

செய்யமாட்டேன்

இரு நிலமும்

நீண்ட் இந்த நிலத்திலும்

திசை நான்கும்

நாற்றிசைகளிலும்

ககனமுமே

வானத்திலும்

திருமேனி

உனது திருமேனியின்

ப்ரகாசம்

பேரொளி

அன்றிக்

அல்லாது மற்றொன்றைக்

காணேன்

காணமாட்டேன்


பொருள்

வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு பூணேன் – தம்மை வணங்குபவர்களிடமிருந்து கையுறைகளை (காணிக்கைகளை) விரும்பிக் கவர்ந்து கொண்டு ஆனால் அவர்கள் விரும்பியதை அருளாத, அருளும் வலு இல்லாத தெய்வங்களிடம் சென்று அவர்களிடம் அன்பு பூண மாட்டேன்
உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் – இந்தக் குறைகள் இல்லாத உன்னிடம் அன்பு பூண்டு கொண்டேன்
நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும் – என்றும் எப்போதும் உன் புகழையே போற்றிப் பாடுவேன்
திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே – நீண்ட நெடிய இந்த உலகத்திலும் நான்கு திசைகளிலும் வானத்திலும் எங்கு நோக்கினும் உன் திருமேனி திருவொளி அன்றி வேறெதுவும் காணேன்.

உரை 

தேவி, வீணாக உயிர்ப்பலியை ஏற்றுக் கொள்ளும் புன்சிறு தெய்வங்களிடம் போய் மிக்க பக்தி கொள்ளேன்; நினக்கே அன்பு மேற்கொண்டேன்: ஆதலின் ஒரு காலத்திலும் நின் தோத்திரமன்றி வேறொருவர் துதியைச் செய்யேன்; பெரிய பூமியிலும் நான்கு திசைகளிலும் ஆகாயத்திலுமாகிய எங்கும் நின் திருமேனியின் ஒளியன்றி வேறு ஒன்றைக் காணேன்,

விளக்கம்: 

, அபிராமித்தாயே! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.

இத்துடன் இந்தப் பதிவை இன்று நிறைவு செய்கிறேன் .நாளை மீண்டும் அடுத்த பாடலுடன் சந்திப்போம். இந்தப் பதிவினை ஒலிவடிவமாகவும் தந்துள்ளேன் அதையும் கேட்டு மகிழ்ந்து அம்பாளின் பேரருட் கருணைக்கும் சர்வேஸ்வரரின் அருளுக்கும் பாத்திரமாகுங்கள்

ஓம் நமசிவாய

சிவதாஸன் ஜகன்நாதன்

சனி, மார்ச், 1, 2025

 

No comments:

Post a Comment